தென்னை சாகுபடிக்கு மீண்டும் ஆர்வம்: நிலத்தடி நீர் மட்டம் உயர்வால் நம்பிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை சாகுபடிக்கு மீண்டும் ஆர்வம்: நிலத்தடி நீர் மட்டம் உயர்வால் நம்பிக்கை

Added : ஜன 16, 2020
 தென்னை சாகுபடிக்கு மீண்டும் ஆர்வம்: நிலத்தடி நீர் மட்டம் உயர்வால் நம்பிக்கை

உடுமலை:பருவமழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, மீண்டும் தென்னங்கன்றுகள் நடவு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரில் நீண்ட கால பயிராக தென்னை பராமரிக்கப்படுகிறது.வெள்ளை ஈ தாக்குதல், கொப்பரைக்கு நிலையான விலை கிடைக்காதது, நிலத்தடி நீர் மட்டம் சரிவு போன்ற பிரச்னைகளால் தென்னை சாகுபடியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இதனால், புதிதாக தென்னங்கன்றுகள் நடவு செய்யவும் தயக்கம் காட்டி வந்தனர்.இந்நிலையில், வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து, பி.ஏ.பி., பாசனத்திலும் நான்கு சுற்றுகள் தண்ணீர் வழங்கப்பட்டது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் பரவலாக உயர்ந்து, கிணறு மற்றும் போர்வெல்களுக்கு நீர் வரத்து கிடைத்துள்ளது. இந்நிலையில், மீண்டும் தென்னங்கன்றுகள் நடவு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:விவசாய சாகுபடியில், தொழிலாளர் பற்றாக்குறை முக்கிய பிரச்னையாக உள்ளது. காய்கறி சாகுபடி செய்யும் போது, களையெடுத்தல், காய் பறித்தல் பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆட்கள் தேவைப்படுகிறது. குறித்த நேரத்தில், அறுவடை செய்யாத போது, தக்காளி, கத்தரி போன்ற காய்கறிகளின் தரம் பாதித்து, சந்தையில் போதிய விலை கிடைப்பதில்லை.பிற சாகுபடிகளை விட, தென்னை சாகுபடிக்கு, ஆட்கள் தேவை குறைவாகவே உள்ளது. தென்னங்கன்று நடும் போதே, சொட்டு நீர் பாசனம் அமைப்பதால், தண்ணீர் பாய்ச்சவும் ஆட்கள் தேவையில்லை. நீரில் கரையும் உரங்களை பயன்படுத்தி, சொட்டு நீர் வழியாக உரமிடுதல் பணிகளையும் செய்து கொள்கிறோம்.எனவே, கிணறு மற்றும் போர்வெல்களில் நீர் மட்டம் உயர்ந்த பிறகு, தென்னங்கன்று நடவுக்கு ஆர்வம் காட்டி வருகிறோம். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X