சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உப்பாறு அணைக்கு நீர் திறப்பு நிறுத்தம்: கைவிடப்பட்டது விவசாயிகள் போராட்டம்

Added : ஜன 16, 2020
Advertisement

பொள்ளாச்சி:திருமூர்த்தி அணையில் இருந்து, உப்பாறு அணைக்கு அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து, பாசன விவசாயிகள் போராட்டம் அறிவித்ததால், தண்ணீர் அடைக்கப்பட்டது. இதனால், போராட்டம் கைவிடப்பட்டது.
திருமூர்த்தி அணையில் இருந்து, பி.ஏ.பி., பாசனத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள், நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.நான்காம் மண்டல பாசனத்துக்காக கடந்தாண்டு செப்., மாதம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, கடந்த, 11ம் தேதி நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, முதலாம் மண்டல பாசனத்துக்கு நான்கு சுற்று தண்ணீர் வழங்க வேண்டும்; வரும், 27ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.நான்காம் மண்டலத்துக்கு தண்ணீர் வழங்கிய போது, மழை பெய்ததால், பாசன நீர் தேவை குறைந்து, 170 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமிக்கப்பட்டது. சேமிக்கப்பட்ட தண்ணீரை, உப்பாறு அணைக்கு வழங்க அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்ததை, பாசன விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர்.அதன்படி, திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கேட்டுக்கொண்ட அளவுக்கு தண்ணீர் வழங்கிய பிறகு, நிறுத்தம் செய்யாமல், தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், பாசன விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து, உப்பாறு அணைக்கு அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து, பாலாறு படுகை விவசாயிகள், இன்று, 17ம் தேதி, பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவித்தனர்.
இத்தகவல், அரசின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டதால், திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறுக்கு சென்ற தண்ணீர் நிறுத்தப்பட்டது.பி.ஏ.பி., பாலாறு படுகை திட்ட குழு தலைவர் பரமசிவம் கூறியதாவது:முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பாக, உபரியாக சேமிப்பில் இருந்த, 170 மில்லியன் கனஅடி தண்ணீரை உப்பாறு அணைக்கு வழங்க சம்மதித்தோம்.ஆனால், அதை விட அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டது.
அதிகாரிகளிடம் கேட்டால், 'எங்களுக்கு எதுவும் தெரியாது, முதல்வர் அலுவலகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு வந்ததால், தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது,' என்றனர்.உப்பாறு அணைக்கு எத்தனை நாட்களுக்கு, எவ்வளவு தண்ணீர் வழங்குகிறார்கள் என்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை.ஆளுங்கட்சியும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கைகோர்த்து, பி.ஏ.பி., விவசாயிகளுக்கு துரோகம் செய்வதை கண்டித்து, நாளை (இன்று) பி.ஏ.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்தோம்.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறுக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, முற்றுகை போராட்டம் கைவிடப்படுகிறது.அரசியல் ஆதாயத்துக்காக, பாசன விவசாயிகள் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதை ஆளுங்கட்சியினர் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதே நிலை தொடந்தால், பாசன விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X