சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

தனிப்பிறவி!

Added : ஜன 17, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 தனிப்பிறவி!

முருகப் பெருமானை பாடிய அருணகிரிநாதர், பழநி மலையை பாடுகையில், 'அதிசயம் அனேகமுற்ற பழநி மலை' என்பார். இந்த வரியில், 'அதிசயம், அனேகமுற்ற' என்ற, இரு வார்த்தைகள் என்னை கவர்ந்தவை. நாம் அறிந்த மனிதர்களில், அதிசயம், அனேகம் உற்றவர் யார் என்றால், உடனடியாக, என் மனதில் தோன்றும் பெயர், எம்.ஜி.ஆர்., தான்.
பார்ப்போரை வசீகரிக்கும் அவரது தோற்றமா; திரைத் துறையில் வெற்றிப்படங்களை தந்த திறமையா; முதல்வர் பதவியை பெற்ற போதும், அவர் போற்றிய தன்னடக்கமா; பொருத்தமான அரசியல் வாரிசை அடையாளம் காட்டிய தொலைநோக்கா... எது அதிசயம்? அவர் ஒரு அதிசயம்எல்லாம் தான். எனவே தான், அதிசயம் அனேகமுற்ற அரியதொரு தலைவராக, அவரை பார்க்கிறேன்.'தனக்கொரு பாதை வகுக்காமல், தன் தலைவன் வழியிலே நடப்பான்' - இது, திரையில் அவரது முழக்கம். புதிய கட்சி துவங்கிய போது, கட்சிப் பெயரிலும், கட்சிக் கொடியிலும் தலைவனை பதித்த, ஒரு தகுதி போதும், அவர் ஒரு அதிசயம் என்பதற்கு!சென்னையில், காந்தியச் செல்வர், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் நடத்திய பாரதி விழா. அரங்கு கொள்ளாத மக்கள் திரள். எம்.ஜி.ஆர்., பேசி முடித்து விட்டார். அடுத்ததாக, கவியரங்கம். தான் புறப்பட்டால், அரங்கு கலைந்து விடும் என்பது, அவருக்குத் தெரியும். எனவே, புறப்படாமல் அமர்ந்து விட்டார். கவியரங்கம் முடிந்து, எல்லா கவிஞர்களிடமும் கைகுலுக்கி புறப்பட்டார்.

அன்று, கவிஞர்கள் அடைந்த மகிழ்ச்சி, கவிதைகளில் வெளிப்பட்டது; கை தட்டியே அவையோர் களைத்துப் போயினர்.கடந்த, 1984 நவம்பர். ஜப்பசி குளிர். அப்போது, மதுரை மாவட்டம், கம்பம் அருகே நடந்தது ஒரு சம்பவம். கம்பத்தில் கந்த சஷ்டி விழா முடித்து, பட்டிமன்ற பேச்சாளர்கள் சிலர், மதுரைக்கு வந்த கொண்டிருந்தனர். நள்ளிரவு, 12:00 மணியை தாண்டி விட்டது. அப்போது, வேறு வழியிலிருந்து, மிகப்பெரும் ஜனத்திரள் மதுரையை நோக்கி சென்றது. பட்டிமன்றத்தினர் சென்ற கார், ஓரமாக நின்று விட்டது.

கார் ஓட்டுனர் கீழே இறங்கி, விசாரித்து விட்டு வந்தார். கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும், எம்.ஜி.ஆர்., நலம் பெற, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, அர்ச்சனை செய்யப் போகின்றனராம் அவ்வளவு பேரும்!இப்படி, எங்கேயும் நடக்குமா? எனவே தான், அதிசயம் அனேகம் உள்ள தலைவர் அவர் என்கிறேன்.
திரைத்துறையில், தாம் பங்கு பெறும் படத்தின் பாடலை பற்றியோ, இசையை பற்றியோ, சக கலைஞர்கள் பற்றியோ எத்தனை பேருக்கு ஆர்வம் இருக்கும்... ஆனால், எம்.ஜி.ஆர்., வித்தியாசமானவர். தாம் நடிக்கும் படத்தின் பாடல்களை கேட்டு வாங்கி கேட்பார்; இசையமைப்பில் கவனம் செலுத்துவார். அதனால் தான், 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே...' என, அவரால் பாட முடிந்தது.'உன்னை அறிந்தால் - நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்' என்று, அறிஞர் சாக்ரடீஸ் போல, அறிவுரை தர முடிந்தது.அண்ணாதுரையின் அமர வரியான, 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்பதை மனதில் ஏற்று, 'ஒன்றே குலமென்று பாடுவோம்' என, அனைவரையும் இணைத்துக் கொள்ள அவரால் முடிந்தது. பாடல்களில் அவர் கவனம் செலுத்த, என்ன காரணம் என்று நினைத்துப் பார்க்கிறேன்.திரைப்படங்களின் வசனத்திற்கு, அப்போது, தனியாக புத்தகம் வெளியிடுவதில்லை; ஆனால், பாடல்களுக்கு வெளியிடுவதுண்டு. இசைத் தட்டுகள் பாடல்களை பிரபலப்படுத்துகின்றன; மக்கள் மனதில் பாடல் வரிகள் சிம்மாசனமிட்டு, அமர்ந்து கொள்கின்றன. அந்தப் பாடல்களில் நல்ல கருத்துகள் அமையுமானால், மக்கள் மனதில் அக்கருத்துகள் படியும் அல்லவா?தெரிந்து பாதி, தெரியாது பாதிஇரண்டு முறை அவரை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 1967ல், தி.மு.க., ஆட்சியமைத்த பின், 1968ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில், மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகே, கிழக்கு அபிராமபுரம் ஸ்துாபி பகுதியில், கவுன்சிலர் வேட்பாளர்களுக்காக, திறந்த ஜீப்பில் இரு விரல்களை அசைத்து, பிரசாரம் செய்த போது பார்த்தேன். பின், 1981ல் முதல்வராக இருந்த போது, 'வார்த்தை சித்தர்' வலம்புரி ஜானை ஆசிரியராக வைத்து, 'தாய்' வார இதழ், ஏ.வி.எம்.ராஜேஸ்வரி மண்டபத்தில் வெளியிடப்பட்டது. எம்.ஜி.ஆர்., அவ்விழாவில் கலந்து, அந்த இதழை வெளியிட்டு, சிறப்புரையாற்றினார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளும், இன்றும் என் நினைவலைகளில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், எம்.பி.பி.எஸ்., மருத்துவ பட்டப்படிப்பு முடித்த பின், 1979ல், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில், எம்.டி., பொது மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு, 'சீட்' கிடைத்தது என்றால், அதற்கு முழு முதல் காரணம், எம்.ஜி.ஆர்., தான். தெரிந்து பாதி, தெரியாது பாதி, அவரிடம் உதவி பெற்றவர்களை யார் கணக்கெடுக்க முடியும்.மக்கள் மனதில் நிற்பவர்அவரின் மக்கள் பண்பு, இன்னொரு அதிசயம். ஒரு சமயம், சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி வெளிநடப்பு செய்ய எழுந்த போது, தன் இருக்கையை விட்டு எழுந்து, அன்புடன் அவர் தோளில் தட்டி, அமைதிப்படுத்தி, இருக்கையில் அமரச் செய்தார்.சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில், வியாசர்பாடியில் ஒரு விழா. மத்தியமைச்சர் சிக்கந்தர் பக்த் அந்த விழாவில் பங்கேற்கிறார். தொலைவில் மேகம் திரண்டு வருகிறது. நிகழ்ச்சி அறிவிப்பாளர், எம்.ஜி.ஆரை அணுகி, 'இன்னும் நான்கு பேர் பேச வேண்டும். மழை வருகிறது. நீங்கள் பேசுவதாக அறிவித்து விடட்டுமா...' என்று மெதுவாக கேட்டதற்கு, 'பேசட்டும்... மழை வராது' என்றார் எம்.ஜி.ஆர்., என்ன அதிசயம்... அவர் பேசி முடித்து புறப்பட்ட பின் தான், மழையே பெய்தது.'இப்படி ஒருவர் வாழ்ந்தாரா...' என, வியக்க வைக்கும் தனிப்பிறவி, எம்.ஜி.ஆர்., மட்டும் தான்.'வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்கள் மனதில் நிற்பவர் யார்? இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று, ஊர் சொல்ல வேண்டும்!'வேறு என்ன சொல்வது?இன்று, முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., நிறுவனருமான, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்.டாக்டர் மைத்ரேயன்அ.தி.மு.க., அமைப்பு செயலர், ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balu1968 - Doha,கத்தார்
18-ஜன-202001:58:56 IST Report Abuse
Balu1968 தன்னிகர் இல்லா தானைத்தலைவர் ஒருவரே. தலைவரைப்பற்றி கூறினால் பக்கம் போதாது. இரண்டே இரண்டு சொல்லி நிறுத்துகிறேன். அவர் வீட்டில் எப்போதும் உலை கொதித்துக்கொண்டே இருக்குமாம் யார் சென்று பார்க்கப்போனால் அவரின் முதல் கேள்வி சாப்பிட்டாயா, முதல்ல சாப்பிடு அப்பறம் பேசலாம் என்று கூறுவாராம். ஸ்ரீமான் ராமரின் பாதரட்சைகளை வைத்து ஆட்சி செய்தனர் அதே போல் தலைவர் அவர்களின் தொப்பியை மட்டும் வைத்து தேர்தல் பிரச்சாரம் சென்று வென்றனர். உலகில் எனக்கு பிடித்து தலைவர்களில் முதல் இடம் பிடிப்பவர் என் அன்புத்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களே.
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
17-ஜன-202016:38:04 IST Report Abuse
karutthu வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்கள் மனதில் நிற்பவர் யார்? இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று, ஊர் சொல்ல வேண்டும் எல்லாமே புரட்சி தலைவர் தான்
Rate this:
Cancel
Paramasivam Murugappan - Chennai,இந்தியா
17-ஜன-202013:42:15 IST Report Abuse
Paramasivam Murugappan வாழ்க அவர் புகழ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X