திருச்சி ஜல்லிக்கட்டு ஒரு படவிழா

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020
Advertisement






திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரியசூரியூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது. பல ஆண்டுகளாக தொன்று தொட்டு இந்த கிராமத்தில் மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்படுகிறது.





ஜல்லிக்கட்டில் பங்கேற்க திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600 ஜல்லிக்கட்டு காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். காலை 5 மணியில் இருந்தே காளைகளை அதன் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு நடக்கும் இடம் அருகே வாகனங்களில் ஏற்றி வந்து இறக்கினர். அக்காளைகளுக்கு கால்நடை மருத்துவர்களால் உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர் அடையாள அட்டை சரிபார்த்தல், மாடுபிடி வீரர்கள் 21 வயதுக்கு மேற்பட்டவர்களா? என சரிபார்த்து பெயர் பதிவு செய்தல் ஆகியவை வாடிவாசல் அருகே நடந்தது.




Advertisement


முதலில் வாடிவாசல் வழியாக சூரியூர் ஸ்ரீநற்கடல் கருப்பண்ணசாமி கோவில் காளை, ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் காளை ஆகியவை சீறிப்பாய்ந்து வெளியேறின. கோவில் மாடுகள் என்பதால், அவற்றை மாடுபிடி வீரர்கள் பிடிக்காமல் விட்டு விட்டனர். கோவில் மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரட்டைமலை ஒண்டிகருப்பன் கோவில் மாடு துள்ளாட்டம் போட்டபடி வந்தது.





தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. வீரர்கள் 50 பேர் குழு ஒரு பேட்ஜ் என 8 பேட்ஜ்களாக பிரிக்கப்பட்டு களத்தில் இறக்கப்பட்டனர். ஒவ்வொரு பேட்ஜ்-க்கும் வெவ்வேறு சீருடைகள் மாடுபிடி வீரர்களுக்கு வழங்கப்பட்டன. காளைகள் வாடிவாசல் வழியாக வெறிப்பிடித்தாற்போல சீறிப்பாய்ந்தன. மாடா...வீரனா.. என போட்டியே நிகழ்த்தப்பட்டது. சில காளைகள் தன்னை 'தொட்டுப்பார்' பார்க்கலாம் என வீரர்களை நெருங்க விடாமல் துவம்சம் செய்ய தொடங்கின. மாட்டின் பயமுறுத்தலுக்கு பயந்த காளையர்கள், உயிர் பிழைக்க வாடிவாசல் திடலின் பக்கவாட்டு தடுப்பு கம்பிகளில் ஏறி தொற்றிக்கொண்டனர்.




புதுக்கோட்டை மாவட்டம் நரியப்பட்டியை சேர்ந்த 'வீரா' என்ற காளையும், சூரியூர் அழகர்சாமி காளையும் வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் ஆட்டம் காண்பித்தன. வீரர்களுக்கு பிடிகொடுக்காமல் வெளியேறிய காளைகள் மீண்டும் வாடிவாசல் நோக்கி வந்து வீரர்களை நோக்கி சீறிப்பாய்ந்தன. மாடுகளின் உரிமையாளர்களுக்கு உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன. வாடிவாசல் அருகே நின்று கொண்டு அச்சமூட்டிய காளைகளை, மினிசரக்கு வேனில் திடலுக்குள் வந்த போலீசார் கயிறுகட்டி இழுத்து சென்றனர்.




காளைகளின் கொம்புகளை பிடிக்க கூடாது என்றும், கிட்டி போடுதல் கூடாது என்றும், வாலை பிடிக்கக்கூடாது என்றும் விழாக்குழு சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. வாடிவாசல் வழியாக வந்த காளைகள் சிலவற்றை வீரர்கள் சூழ்ந்து கொண்டு கழுத்தை பிடித்தும், அதன் திமிலை பிடித்தபடியும் அடக்க முயன்றனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் வேட்டி, ஹாட்பாக்ஸ், குத்து விளக்கு, பீரோ, சைக்கிள், தங்கக்காசு, வெள்ளிக்காசு, சில்வர் அண்டா, நாற்காலி, செல்போன், பவர் பேங்க் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
















படங்கள்:திருச்சி மணிகண்டன்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X