சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

Added : ஜன 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
  இது உங்கள் இடம்

பொங்கல் தான் தமிழனை அடையாளம் காட்டுகிறது!

என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொங்கல் பண்டிகை அன்று மட்டும், தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, நாகரிகம் எல்லாம் ஆண்டிற்கு ஒரு முறை, அத்தி பூத்தாற் போல, உயிர் பெற்று வருவது, மெய் சிலிர்க்க வைக்கிறது.பாஞ்சாலி போல, எப்போதும் அவிழ்த்துபோட்ட கூந்தலோடு, நாகரிக பெண்மணிகள் வலம் வருகின்றனர். பொங்கல் அன்றாவது, ஜடை போட்டு, காட்சி அளிப்பது, ஆண்கள் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. இதற்காகவே, தமிழர்களை அடையாளம் காட்டும் பொங்கல் பண்டிகைக்கு, அவசியம் நன்றி சொல்ல வேண்டும்.நாத்திகம் பேசும் செம்மல்கள் கூட, பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனரே, அது பாராட்டுக்குரியது.'புலியை சாதாரண முறத்தால், விரட்டி அடித்தாள் தமிழச்சி' என, பழம்பெருமை எல்லாம் பேசுகிறோம். ஆனால், இக்காலத்து தமிழச்சிகள், சாதாரண கரப்பான் பூச்சிக்கே பயந்து ஓட்டம் பிடிக்கின்றனரே... அந்தக் காலத்தில் தமிழர்களிடம் இருந்த வீரம், மொழிப்பற்று, கம்பீரம் எல்லாம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டதோ?இப்போதும், இதை நினைக்கும் போது, தமிழர் என சொல்லிக் கொள்ளவே, ரொம்பவே வெட்கமாக இருக்கிறது.'தமிழர் என்றோர் இனம் உண்டு; தனியே அவருக்கு ஒரு குணம் உண்டு' என, பெருமைப்பட்டு கொள்கிறோம். பண்டிகைகள், திருமணம் என, விசேஷங்கள் வந்தால் தான், இவர்களுக்கு, 'தாங்கள் தமிழர்கள்' என்ற நினைப்பே வரும். பொங்கல் பண்டிகையின் போது மட்டும் தான், இவர்களுக்கு தமிழன் என்ற உணர்ச்சி ஊற்று போல, பெருக்கெடுத்து ஓடுகிறது.வழக்கமாக, லெக்கின்ஸ், சுடிதார் அணியும் கல்லுாரி தமிழ்ப் பெண்கள் பொங்கல் பண்டிகையின் போது மட்டும், அழகாக சேலை, கட்டி தேவதை போல, காட்சி அளிக்கின்றனர். வீட்டில் சமையலறை பக்கமே போகாத, மாதர் குல மாணிக்கங்கள், கல்லுாரியில் பொங்கல் வைத்து, 'டிவி'க்கு, 'போஸ்' கொடுக்கின்றனர்.பெண்களுக்கே உரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம், இவர்களது வேல் விழிகளில் பளிச்சென்று தெரியும். 'பெண்தானா இவள்' என்ற ஐயம், பெற்றோருக்கு வருவதுண்டு.மாதர்கள் தான், இப்படி உண்மையான தமிழச்சிகளாக மாறி விட்டனர் என்றால், கட்டிளங் காளைகளான மாணவர்களும் வேட்டி, சட்டை அணிந்து, தம்மை தமிழர்களாக அடையாளம் காட்ட தவறுவது இல்லை!

இப்படி செய்தால்மாணவர் சேர்க்கை,கல்வி தரம் உயரும்!

வி.எம்.மகிழ்நன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: முந்தைய, தி.மு.க., அரசால் அமல்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டம், பெரும்பாலான கல்வியாளர்களால் வரவேற்கப்பட்டது. ஆனால், அதை சரியான கோணத்தில் செயல்படுத்த, தி.மு.க.,வும், பின் ஆட்சிக்கு வந்த, அ.தி.மு.க.,வும் செய்ய தவறி விட்டன.அ.தி.மு.க., பதவி ஏற்றவுடன், 'ஸ்மார்ட்' வகுப்புகள், 'ஈ லேனிங்' முறை உடனடியாக அமலுக்கு வந்தது. அதை செயல்படுத்தும் பள்ளிகளின் வசதிகள், ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் என, அள்ளித் தெளித்த கோலத்தில் தான் அரங்கேறி வருகின்றன. ஆனால், அதன் பலன் எல்லா அரசு பள்ளிகளையும் சென்றடையவில்லை.இதை அறிந்த, தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், சி.பி.எஸ்.இ.,க்கு நிகரான பாடத் திட்டத்தை உருவாக்கி, அரசுப் பள்ளிகளில் அமல்படுத்தக் கட்டளையிட்டார்.ஆனால், பாடத் திட்டம், சி.பி.எஸ்.இ.,யை விட, கடினமானதாக இருந்ததால், மாணவர்களும், கற்பிக்கும் ஆசிரியர்களும் திண்டாடினர்.இந்த லட்சணத்தில், 'தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 25 சதவீத அரசுப் பள்ளியின் ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டும். அதற்கான கட்டணத் தொகையை அரசே, தனியார் பள்ளிகளுக்கு வழங்கும்' என, பள்ளி கல்வி துறை அமைச்சர் கூறியுள்ளார்.இதுவரை, 1,600 கோடி ரூபாய் அளவுக்கு, அரசுப் பணம் கை மாறியது, உண்மை தான். ஆனால், அறிவித்தபடி, 25 சதவீத மாணவர்களில் கல்வித் தரம் உயர்ந்து விட்டதா என்றால் இல்லை. இத்தருணத்தில், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என, தமிழக அரசு பயமுறுத்துகிறது.தமிழக கல்வித் திட்டங்கள் அடிக்கடி மாறிக் கொண்டே வருகின்றன. சத்துணவு பள்ளிகள், நர்சரி பள்ளிகளாக மாற்றம் பெற்றுள்ளன. சமச்சீர் கல்வித் திட்டமும் வந்தது; ஆனால், இதில் மெட்ரிக் பள்ளிகள் இணையவில்லை.தன் வசமுள்ள, 54 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், பள்ளி இடவசதி, ஆசிரியர் நியமனம், அவர்களுக்கான புதிய பாடங்களைக் கற்பிக்க, சரியான பயிற்சிகளும், தமிழக அரசு அளிக்க வேண்டும். அது மட்டுமல்ல; அடிக்கடி அரசு பள்ளிகளை பார்வையிட்டு, சரியான வழிகாட்டல் வேண்டும்.இவை எல்லாவற்றையும் விட, தனியார் மெட்ரிக் பள்ளிகள், 12 ஆயிரத்து, 419யையும், தமிழக அரசு, தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்!


அடுத்தாவதுநிறைவேற்றுவாராவிஜயபாஸ்கர்!
கீ.உத்ரன், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னையிலிருந்து, திருநெல்வேலிக்கு இயக்கப்படும் படுக்கை வசதியுடைய ஆம்னி பஸ்களில், சாதாரண நாட்களில் அதிகபட்சமாக, 1,200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.ஆனால், இந்தாண்டு பொங்கல் பண்டிகை சீசனில், ஆம்னி பஸ்களில், 2,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இருக்கை வசதி பஸ்களில், ஒருவருக்கான பயண கட்டணம், சாதாரண நாட்களில் உள்ளதை விட, 400- முதல், 1,000 ரூபாய் வரை அதிகமாக வசூலிக்கப்பட்டது.ஒவ்வோர் ஆண்டும், பொங்கல் பண்டிகை நேரத்தில், ஆம்னி பஸ்களின் அதிக கட்டண வசூல் மக்களை வெறுப்படைய செய்துள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில், ஆம்னி பஸ்களின் தொடர் அட்டகாசத்தால், சாதாரண மக்களின் பண்டிகை உற்சாகம் சூறையாடப்படுகிறது.பொருளாதாரத்தில் பின் தங்கியோரும், நிரந்தரப் பணிகளில் இல்லாதோரும், முன் கூட்டியே திட்டமிட்டு, பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியவில்லை. கடைசி நேரத்தில் கிடைக்கும் பஸ்களை பிடித்து, ஊர் சென்று, உற்றார் உறவினருடன் பண்டிகையை சிலர் கொண்டாடி மகிழ்ந்தனர்.அடிதட்டு மக்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக ஆம்னி பஸ்கள் கட்டணத்தை, இஷ்டப்படி உயர்த்திக் கொள்வது, எந்த விதத்திலும் நியாயம்... இது, ஒரு பகல் கொள்ளை.பெயருக்கு இரண்டொரு மொபைல் போன் நம்பரை கொடுத்து, ஆம்னி பஸ்கள் மீது புகார் தெரிவிக்க சொன்னது, தமிழக அரசு. அதன் வாயிலாக பாதிக்கப்பட்டோருக்கு, எந்தப் பலனும் ஏற்பட்டதில்லை.ஆட்டோ கட்டணத்தையே கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது. இத்தருணத்தில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர், 'தமிழகத்தில் ஆம்னி பஸ்களுக்கென்று தனியாகக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை' என, கூறியுள்ளார்.உடனடியாக, ஆம்னி பஸ்களுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்து, அதை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்துவது தானே முறை. இந்தாண்டிலும் இது நடைபெறவில்லை.அடுத்த பண்டிகைக்கு முன், ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து, அதை வெளியிட, தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-ஜன-202006:14:37 IST Report Abuse
D.Ambujavalli ஆம்னி பஸ்கள் பண்டிகைக்கால ‘கவனிப்பை’ கணிசமாக செய்து பிறகுதான் இந்த ஆட்டம் போடுகிறார்கள். பின் அமைச்சர் கட்டண நிர்ணயம் செய்வார் என்று எப்படி எதிர்பார்க்கலாம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X