பொது செய்தி

தமிழ்நாடு

அடக்கப்பாய்ந்த வீரர்கள்... பறக்கவிட்ட காளைகள்... அலங்காநல்லூரில் பட்டையை கிளப்பிய ஜல்லிக்கட்டு

Added : ஜன 17, 2020
Advertisement
அடக்கப்பாய்ந்த வீரர்கள்... பறக்கவிட்ட காளைகள்... அலங்காநல்லூரில் பட்டையை கிளப்பிய ஜல்லிக்கட்டு

அலங்காநல்லுார், மதுரை அவனியாபுரம், பாலமேட்டை தொடர்ந்து உலகப் புகழ்ப்பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு நேற்று பட்டையை கிளப்பியது. வாடிவாசலில் சீறிய தீரமிகு காளைகளுடன் வீரமிகு காளையர்கள் மல்லுக்கட்டினர். கோதாவில் வென்ற மாடுபிடி வீரர்களும், மாட்டின் உரிமையாளர்களும் பரிசு மழையில் நனைந்தனர். சிறந்த மாடுபிடி வீரர்களுக்கான முதல் பரிசை அலங்காநல்லுார் ரஞ்சித் பெற்றார். சிறந்த மாட்டிற்கான முதல் பரிசை குலமங்கலம் மாரநாடு என்பவரின் காளை தனதாக்கியது.அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் களமாடிய மாடுகளை பிடிக்க 877 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 685 பேர் களத்திற்கு வந்தனர். 10 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். காலை 7:35 மணிக்கு கலெக்டர் டி.ஜி.வினய் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். 7:40 மணிக்கு போட்டி விதிமுறைகளை கமிட்டியினர் வாசித்தனர்.7:45 மணிக்கு ஜல்லிக்கட்டு வழிகாட்டுதல் குழு நீதிபதி (ஓய்வு) மாணிக்கம், அமைச்சர் உதயகுமார், எம்.எல்.ஏ., மாணிக்கம், கலெக்டர் டி.ஜி.வினய், ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன், டி.ஐ.ஜி., ஆனி விஜயா போட்டியை துவக்கி வைத்தனர்.36 பேர் காயம்பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்தன. பிற இடங்களை காட்டிலும் அலங்கா நல்லுாரில் காளைகள் நின்று விளையாடி ரசிகர்களை ஆரவாரப்படுத்தின. சில காளைகள் தன் நிழலை கூட தொடாதபடி களத்தை சுழன்றடித்து வீரர்களை கலங்க வைத்தன.காளைகளுக்கு சற்றும் சளைக்காத கைதேர்ந்த மாடுபிடி வீரர்களும் இருந்தனர். அவர்கள் திமிலை அணைத்து காளைகளை அடக்கினர். மொத்தம் 688 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 36 பேர் காயமடைந்தனர். சோழவந்தான் சங்கம்கோட்டையை சேர்ந்த ஸ்ரீதர் 27, பலியானார்.முதல் பரிசு கார்16 காளைகளை அடக்கிய அலங்காநல்லுார் ரஞ்சித் முதல் பரிசான காரை தட்டிச்சென்றார். இவர் ஒரே சுற்றில் 16 காளைகளையும் அடக்கி மற்றவர்களை பின்னுக்குத்தள்ளியது குறிப்பிடத்தக்கது. 14 காளைகள் அடக்கிய அழகர்கோயில் ஆயத்தம்பட்டி கார்த்திக் 2வது பரிசாக டூவீலர், 13 காளைகள் அடக்கிய அரிட்டாப் பட்டி கணேசன் 3வது பரிசாக ரூ.10 ஆயிரம் பெற்றனர்.இதே போன்று களத்தில் 53 நிமிடம் நின்று விளையாடிய மதுரை குலமங்கலம் மாரநாடு என்பவரின் காளை 12 மதிப்பெண்களுடன் முதல் இடத்தை பிடித்தது. உரிமையாளருக்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டது. 4 காங்கேயம் பசுக்களும் வழங்கப்பட்டன.45 நிமிடம் போக்குகாட்டிய புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதாவின் காளை 2ம் இடத்தையும், 40 நிமிடம் விளையாடிய மதுரை கார்திக்கின் காளை 3வது இடத்தையும் பிடித்தன. சிறந்த மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு பரிசுகளுடன் வெற்றிக்கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாட்டை அடக்கிய அனைத்து வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் கிடைத்தன.அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.பி., ரவீந்திரநாத்குமார், எம்.எல்.ஏ.,க்கள் மூர்த்தி, பெரியபுள்ளான், பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன், மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.வீரர்களுக்கு அரசு வேலைவருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு தகுதியின் அடிப்படையில், வேலைவாய்ப்பு அளிக்க முன்னுரிமை வழங்கப்படும். இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடு, மாடுபிடி வீரர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் பெயரில் ஜெயலலிதா பேரவை சார்பில் கார்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இம்முறையும் அவர்கள் சார்பில் இரு கார்கள் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் முதல்வர் கையால் இப்பரிசுகள் வழங்கப்படும்.இவ்வாறு கூறினார்.

தெறிக்கவிட்ட சின்னக்கொம்பன்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வளர்க்கும் இரு காளைகள் நேற்று களம் கண்டன. சின்னக்கொம்பன் என்ற காளை ஆடுகளத்தை தெறிக்கவிட்டது. நின்று விளையாடிய சின்னக்கொம்பன், தன்னை தொட்டவர்களை துாக்கி எறிந்து ஆகாயத்தில் பறக்கவிட்டது. எனினும் ஒரு வீரர் மடக்கிப்பிடித்தார். ஆனால் விதிகளை முறையாக பின்பற்றாததால் பிடிமாடு இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் சர்ச்சை எழுந்தது. இன்னொரு காளையும் வீரர்களிடம் பிடிபடாமல் லாவகமாக நழுவியது.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X