பொது செய்தி

தமிழ்நாடு

மொழிகளை நேசித்தால் பிரச்னைகள் வராது! மூத்த மொழிபெயர்ப்பாளர் எச்.பாலசுப்பிரமணியம் அறிவுரை

Added : ஜன 18, 2020 | கருத்துகள் (4)
Advertisement
 மொழிகளை நேசித்தால் பிரச்னைகள் வராது! மூத்த மொழிபெயர்ப்பாளர்  எச்.பாலசுப்பிரமணியம் அறிவுரை

''என் தாய்மொழி உயர்ந்தது என்பது மொழிப்பற்று. என் தாய்மொழியைத் தவிர, மற்றவை தாழ்ந்தது என்பது துவேஷம். எல்லா மனிதர்களையும், மொழிகளையும் நேசித்தால், பிரச்னைகள் வராது,'' என, ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரும், மூத்த மொழிபெயர்ப்பாளருமான,எச்.பாலசுப்பிரமணியம் கூறினார்.

அவருடன் பேசியதிலிருந்து...


உங்களைப் பற்றி சொல்லுங்கள்?தமிழகத்தின் தென் கோடியிலுள்ள தென்காசி மாவட்டம், ஆழ்வார்க்குறிச்சி தான் சொந்த ஊர். சுதந்திரம் பெறுவதற்கு, 15 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவன். எங்கள் பகுதியில், தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் கற்பிக்கப்பட்டன.அப்போது, சுதந்திர போராட்டம் நடந்தது. காந்தி, மக்களை ஒருங்கிணைக்க, ஒரு பொது மொழி தேவை என்றும், அதற்கு, பெரும்பாலான மக்கள் பேசும் ஹிந்தியை, தென்மாநிலங்களில் உள்ளோரும் கற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அவரால் ஈர்க்கப்பட்ட நான், மாணவனாக இருந்த போது, ஹிந்தி பிரசார சபாவில் சேர்ந்து படித்தேன். சென்னையில் தான், ஆராய்ச்சிப் படிப்பு வரை முடித்தேன். பின், மத்திய உள்துறை அமைச்சகத்தில், ஹிந்தி பேராசிரியராக பணியாற்றினேன். 1990ல் ஓய்வு பெற்றேன்.


நீங்கள் மொழிபெயர்ப்புத் துறைக்கு வந்தது பற்றி?பணியில் இருந்த போது, பலமொழி புலமை இருந்ததால், துறை சார்ந்த மொழிபெயர்ப்புகளை, நான் தான் செய்தேன். அதேபோல், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், கவிதை, கட்டுரைகளை எழுதி வந்தேன். மேலும், தமிழ் - ஹிந்தி மொழிகளின் ஒற்றுமை, தனித்தன்மை பற்றியும் நிறைய ஆய்வுகள் செய்து எழுதியுள்ளேன்.ஓய்வு பெற்ற பின், ஹிந்தி யின் மிகச்சிறந்த எழுத்தாளரான பனீஸ்வர்நாத் ரேணுவின், 50 சிறுகதைகளை, 2002ல் மொழிபெயர்த்தேன். இப்படித்தான் என் மொழிபெயர்ப்பு துவங்கியது.


இதுவரை நீங்கள் மொழிபெயர்த்த நுால்கள் பற்றி?சங்கீத நாடக கலைஞர்கள் மற்றும் என்.பி.டி., நிறுவனத்துக்கான மொழிபெயர்ப்புகளை செய்து வந்தேன். தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களான, கி.ராஜநாராயணனின், கரிசல் காட்டு கடுதாசி; தோப்பில் முகமது மீரானின், துறைமுகம், சாய்வு நாற்காலி ஆகிய நுால்களை மொழி பெயர்த்துள்ளேன்.நீல பத்மநாபனின், தலைமுறைகள், இலையுதிர் காலம்; சூர்யகாந்தனின், மானாவாரி மனிதர்கள், கடவுச்சீட்டு; அகிலனின் சிறுகதைகள், ஜெயகாந்தனின் சிறுகதைகள் மற்றும் அவரவர் அந்தரங்கம்; வைரமுத்துவின், 60 கவிதைகள் மற்றும் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் உள்ளிட்டவற்றை, ஹிந்தியில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

மேலும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்காக, தொல்காப்பியம், திருக்குறள், தேவாரம் உள்ளிட்ட நுால்களையும், ஹிந்தியில் மொழிபெயர்த்து வருகிறேன். அத்துடன், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி மொழி படைப்புகளையும், வெவ்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்து வருகிறேன்.


மொழியாக்கத்தில் உள்ள சவால்கள் என்னென்ன?மொழிபெயர்ப்பு என்பது, வெறுமனே வரிக்கு வரி மொழி மாற்றம் செய்யும் வேலையல்ல. அது ஒரு மீள் உருவாக்கும் கலை. சில இடங்களில், நுாலாசிரியரை பின்பற்றி செய்ய வேண்டி இருக்கும். சில இடங்களில், மொழியாக்கம் செய்யப்படும்.மொழிப் பண்பாட்டுக்கு ஏற்ப, சிறப்பாக்கும் முயற்சியில், கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். அதற்கு, கதை சார்ந்த இடங்களோடும், மனிதர்களோடும் நமக்கு பரிட்சயம் இருக்க வேண்டும். இவை தான் முக்கிய சவால்கள்.


ஒரு படைப்பை மொழிபெயர்க்கும் முன், கவனிக்க வேண்டியவை என்னென்ன?

தோப்பில் முகமது மீரானின், துறைமுகம் நாவல், தேங்காய்ப்பட்டினம்முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பற்றியது. அதில், முஸ்லிம்கள், மீனவர்கள், இலங்கைத் தமிழர்கள் தான் கதாப்பாத்திரங்கள்.அவர்கள், தமிழ், அரேபிய உருது, இலங்கைத் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளை கலந்து பேசுவர்.

அவர்களின் சமயம் சார்ந்த சொற்கள் நிறைய வரும். அவர்களின் சடங்குகள் பற்றிய செய்திகளும் நிறைய வரும். நான் தென் மாவட்டத்தில் பிறந்தவன் என்பதாலும், முஸ்லிம் நண்பர்களுடன் பழகியவன் என்பதாலும் தான், அதை மொழிபெயர்க்க முடிந்தது.அதேபோல், மானாவாரி மனிதர்கள் நாவலில், கொங்கு தமிழ் பேசும் மக்கள் கதாப்பாத்திரங்களாக இருப்பர். அவற்றை பற்றி அறியாவிட்டால், மொழி தெரிந்தாலும், உயிரோட்டமாக மொழிபெயர்க்க முடியாது.


உங்களுக்கும் நுாலாசிரியருக்குமான உறவு எப்படி உள்ளது?சில நுால்கள், பதிப்பாளர்கள், சாகித்ய அகாடமி போன்ற அமைப்புகள் வழியாக வருவ தால், நுாலாசிரியர்களுடன் தொடர்பு ஏற்படாது. சில மொழிபெயர்ப்புகளில், நுாலாசிரிய ருடன் கலந்து பேசியபின் மொழிபெயர்ப்பேன். சிலர், நட்பை தொடர்வர். பலர் மறந்துவிடுவர்.


மொழிபெயர்ப்பாளர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கிறதா?எனக்கு, சாகித்ய அகாடமி விருது, நல்லி திசையெட்டும் விருது, பொள்ளாச்சி மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருது உள்ளிட்டவை கிடைத்துள்ளன. ஆனாலும், எழுத்தாளர்கள் கூட, மொழிபெயர்ப்பாளர்களைப் பற்றி பேசுவதில்லை.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இருந்து, நான் ஹிந்தியில் மொழியாக்கம் செய்த நுால்களுடன், கவர்னர், பிரதமர் உள்ளிட்டோரை, எழுத்தாளர்கள் சந்திப்பர். அவர்கள், ஹிந்தியில் படித்து, என் எழுத்தின் வழியாகத் தான், எழுத்தாளரை அங்கீகரிப்பர். ஆனால், என்னிடம் அதைப்பற்றி அவர்கள் தெரிவிக்க மாட்டார்கள். என் மேன்மையான எழுத்தினால் தான், அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆனால், அவற்றைப் பற்றி என்னிடம் பகிர்ந்துகொள்வதில்லை.

நான் ஒரு முன்னாள் மத்திய அரசு ஊழியன். எனக்கு, பணக்கஷ்டம் இல்லை. மற்ற மொழிபெயர்ப்பாளர்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.


உங்களின் மறக்க முடியாத அனுபவம்?

டில்லியில் உள்ள தமிழ் மற்றும் மாற்று மொழிக் குழந்தைகளுக்கு, 15 ஆண்டுகளாக, தமிழை இலவசமாக கற்பிக்கிறேன். தமிழ் குழந்தைகளுக்கு, மற்ற மொழிகளையும் கற்பிக்கிறேன். அவர்கள், என் வழியாக மொழியறிவில் வளர்வதில் சந்தோஷம்.


மொழிப்பற்று, மொழிதுவேஷம் பற்றி?

என் தாய்மொழி உயர்ந்தது என்பது மொழிப்பற்று. என் தாய்மொழியைத் தவிர, மற்றவை தாழ்ந்தது என்பது துவேஷம். எல்லா மனிதர்களையும், மொழிகளையும் நேசித்தால், பிரச்னைகள் வராது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
18-ஜன-202022:52:48 IST Report Abuse
oce வயிற்று பிரச்சனைகளில் ஊழலும் மக்கள் எப்படி மொழிகளை நேசிக்க முடியும். அவர்களால் சொந்த மொழியில் வாழ்வதே கடினமாக உள்ளதே.
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
18-ஜன-202013:54:06 IST Report Abuse
Sridhar அதே போல், என் கடவுள் தான் ஒரே கடவுள், மற்ற கடவுள்கள் சாத்தான்கள் என்று சொல்பவர்களை பற்றியும் கருது சொல்லுங்களேன்.
Rate this:
Share this comment
Cancel
selvakumar - chennai,இந்தியா
18-ஜன-202011:48:48 IST Report Abuse
selvakumar Great job behind the screen?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X