வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோழிக்கோடு: '' காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை எம்.பி.,யாக தேர்வு செய்து கேரள மக்கள் அழிவுக்கான அறிகுறியை ஏற்படுத்தியுள்ளனர் '' என வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.
வாரிசு அரசியல்வாதி

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடக்கும் 'கேரள இலக்கிய திருவிழா' நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பார்லிமென்டிற்கு ராகுலை கேரள மக்கள் அனுப்பி வைத்தது ஏன்? தனிப்பட்ட முறையில், எனக்கு ராகுலுக்கு மீது எந்த விரோதம் இல்லை. அவர் நாகரீகமானவர். நன்கு படித்தவர். ஆனால், இந்தியாவிற்கு, 5ம் தலைமுறை வாரிசு அரசியல்வாதி தேவையில்லை. 2024 லும் ராகுலை கேரள மக்கள் மீண்டும் தேர்வு செய்தால், அது பிரதமர் மோடிக்கு சாதகமாக அமையும். மோடிக்கு பெரிய நன்மை கிடைப்பதற்கு முக்கிய காரணம், அவர் ராகுல் அல்ல. இந்தியாவிற்காக நிறைய நல்ல விஷயங்களை கேரளா செய்துள்ளது. ஆனால், பார்லிமென்டிற்கு ராகுலை தேர்வு செய்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
ராகுலுக்கு பாதகம்

பிரதமர் மோடி சுயமாக உருவான தலைவர். அவருக்கு நிர்வாக அனுபவம் உள்ளது. கடினமாக உழைக்கிறார். ஐரோப்பாவில் ஓய்வு எடுத்தது இல்லை. இதனை நான் உண்மையாக சொல்கிறேன். ராகுல், அறிவாளியாக இருக்கலாம் கடினமாக உழைக்கலாம். ஐரோப்பாவில் விடுமுறை எடுக்காமல் பணிபுரியலாம். ஆனால், சுயமான உருவான தலைவருக்கு எதிராக இருப்பது என்பது, ஒரே குடும்பத்தின் 5ம் தலைமுறை வாரிசு அரசியல்வாதியான ராகுலுக்கு பாதகமாகத்தான் இருக்கும்.
ஜனநாயக நாடு

இந்தியா, இன்னும் ஜனநாயக நாடாக மாறி வருகிறது. ஆனால், சோனியா குடும்பத்தினர் இதனை உணரவில்லை. சோனியா டில்லியில் இருக்கிறார். உங்களது ராஜ்ஜியம் சுருங்கி வருகிறது. ஆனால், உங்களுக்கு ஜால்ரா போடுபவர்களோ, நீங்கள் தான் மன்னர் என புகழ்ந்து வருகின்றனர்.
நேரு குறித்து விமர்சனம் ஏன்

ஜவஹர்லால் நேரு விஷயத்தில், அடுத்த 7 தலைமுறையினர் செய்த பாவங்கள் , மீண்டும் அவர் மீது பட்டுள்ளது. தேசிய விவாதத்தின் போது, ஒவ்வொரு முறையும் நேரு இழுக்கப்படுகிறார். காஷ்மீர் விவகாரம், சீன விவகாரம், முத்தலாக் விவகாரத்தில், ஒவ்வொரு முறையும் நேருவை மோடி விமர்சிப்பது ஏன்? இதற்கு காரணம், ராகுல் அரசியல் களத்தில் இருப்பதுதான். ஒரு வேலை ராகுல் இல்லையென்றால், மோடி தனது கொள்கை குறித்தும், ஏன் தோல்வியடைந்தோம் என்பது குறித்தும் பேச வேண்டியிருக்கும்.
ஹிந்துத்துவா எழுச்சி
இந்திய இடதுசாரிகள், இந்தியாவை விட மற்ற நாடுகளை அதிகம் நேசிக்கின்றனர். உலகளவில் ஆக்ரோஷமான தேசியவாதத்தின் எழுச்சி, அண்டை நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதம் எழுச்சி பெறுவது மற்றும் சில காரணங்களால், சமீப காலமாக இந்தியாவில், ஹிந்துத்துவா எழுச்சி பெறுவதற்கு காரணமாக உள்ளது. இவ்வாறு ராமச்சந்திர குஹா பேசினார்.