இந்த செய்தியை கேட்க
புதுடில்லி : காங்., தலைவர் சோனியாவை உதாரணமாக வைத்து நிர்பயா குற்றவாளிகளையும் நிர்பயாவின் தாய் மன்னிக்க வேண்டும் என மனிதஉரிமைகள் கமிஷன் அமைப்பின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கேட்டுள்ளார். இவருக்கு நிர்பயாவின் தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டில்லியில் 2012 ம் ஆண்டு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜன.,22 ல் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்திருந்ததால் தூக்கு நிறைவேற்ற டில்லி கோர்ட் இடைக்கால தடை விதித்தது. கருணை மனுவை ஜனாதிபதி நேற்று நிராகரித்ததை அடுத்து, தூக்கு தண்டனை தேதியை ஜன.,22 க்கு பதில் பிப்.,1 அன்று காலை 6 மணிக்கு நிறைவேற்ற உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து குற்றவாளிகளின் தண்டனை ஒத்திவைக்கப்படுவது தொடர்பாக நிர்பயாவின் தாய் ஆஷா தேவி அதிருப்தி தெரிவித்தார்.

சோனியாவை போல் மன்னிக்கணும் :
அவர் கருத்து தெரிவித்து சிறிது நேரத்திலேயே டுவிட்டரில் கருத்து பதிவிட்ட வழக்கறிஞர் இந்திரா, ஆஷா தேவியின் வலியை முழுமையாக என்னால் உணர முடிகிறது. ஆனால், முன்னாள் பிரதமர் ராஜீவை கொன்ற நளினிக்கு தூக்கு தண்டனை வேண்டாம் என சோனியா மன்னித்தார். இதனை, உதாரணமாகக் கொண்டு, நிர்பயா குற்றவாளிகளை ஆஷா மன்னிக்க வேண்டும். நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம். அதே சமயம் தூக்கு தண்டனையை எதிர்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
கொதித்த நிர்பயா தாய் :
இந்திராவின் கருத்திற்கு பதிலளித்துள்ள ஆஷா, எனக்கு இது போல் கோரிக்கை வைக்க இந்திரா ஜெய்சிங் யார்? குற்றவாளிகளில் தூக்கிலிடப்பட வேண்டும் என ஒட்டுமொத்த நாடே விரும்புகிறது. இவரை போன்ற சிலரால் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை. அவர் எப்படி இப்படி கேட்கிறார் என புரியவில்லை. அவரை பலமுறை நான் சுப்ரீம் கோர்ட்டில் சந்தித்துள்ளேன். ஒருமுறை கூட அவர் என்னிடம் இப்படி கேட்டதில்லை. இன்று குற்றவாளிகளுக்காக பேசுகிறார். பாலியல் குற்றவாளிகளுக்கு வாழ்வு அளிக்க ஆதரவு அளிக்கும் இவர்களை போன்றவர்கள் இருக்கும் வரை பாலியல் குற்றங்களை நிறுத்த முடியாது என்றார்.

வழக்கறிஞருக்கு நோட்டீஸ் :
இதற்கிடையில் நிர்பயா குற்றவாளிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர் ஏ.பி.சிங், ஐகோர்ட்டில் உத்தரவு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என டில்லி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சமீபத்தில், நிர்பயா குற்றவாளிகளுக்காக வாதாடிய ஏ.பி.சிங் மீது டில்லி பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ரூ.25,000 அபராதம் விதித்தும் டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து ஏ.பி.சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE