சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

Added : ஜன 20, 2020
Share
Advertisement

கல்விக்காக நிதி கொடுத்து உதவுவோம்!

அ.குணா, கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திரையுலகில், தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை, ஏழை, எளிய மாணவர்கள் பயன் அடையும் வகையில், நடிகர் சிவகுமார் ஓர் அறக்கட்டளையை, 1979ல் துவக்கினார்.அவர் வழியில், அவரின் புதல்வர்கள், நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும், 2006ல், 'அகரம்' அறக்கட்டளையை துவக்கி, இன்று அது, ஆலமரமாக வளர்ச்சி அடைந்துள்ளது.ஏழை, எளியோர் கல்வி கற்க உதவி செய்வது தான், தானத்தில் சிறந்தது. அந்த கல்வியின் வாயிலாக, அதை பெற்றவர்களின் குடும்பம் வளமை பெறும். அதனால் தான், பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் உருவான கல்வி புரட்சி, இன்று வரை அவர் பெயரை சொல்லி வருகிறது.அது போல், 'அகரம்' அறக்கட்டளை, ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வி கற்க உதவும் அமைப்பாக உயர்ந்து நிற்கிறது. சில வருடங்களில் மட்டும், 'அகரம்' அறக்கட்டளை வாயிலாக, பல ஆயிரம் ஏழை மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.இன்றும், தங்கள் வாழ்க்கையை பலர் வெற்றியுடன் தொடர்கின்றனர். உயர் கல்வி படிக்க, பல லட்சங்கள் செலவு செய்தாக வேண்டும். இந்த சூழலில், 'அகரம்' அறக்கட்டளை போன்ற, சில அமைப்புகள் உதவுவதால் தான், பல ஏழை, எளிய மாணவர்கள், உயர் கல்வி பயில முடிகிறது.சென்னையில், 'அகரம்' சார்பில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நடிகர் சூர்யா பங்கேற்றனர்.'அகரம்' அறக்கட்டளை வாயிலாக, கல்லுாரி பட்டம் படித்த, தஞ்சாவூர் அருகில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த, ஏழை மாணவி கிருத்திகா, தன் வாழ்க்கையில், தான் எதிர் கொண்ட சோக நிகழ்ச்சிகளை கூறினார். அவருக்கு, 'அகரம்' அறக்கட்டளை கல்வி கற்க உதவியதை கண்ணீர் மல்க பேசினார்.இதை பார்த்த, நடிகர் சூர்யா எழுந்து சென்று, அந்த மாணவியை அரவணைத்து கண்ணீருடன் ஆறுதல் கூறினார். மேடையில் இருந்து, அமைச்சரும் கண்கலங்கினார். நிகழ்ச்சியை நேரில், வலைதளத்தில் பார்த்தோரும் சோகமாகி போயினர்.பல நுாறு ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வி கற்க உதவ, இம்மாதிரியான அறக்கட்டளைக்கு நிதி கொடுத்து உதவுவோம்!


டி.என்.பி.எஸ்.சி., மீதுநம்பகத்தன்மையைஏற்படுத்துங்களேன்!

எம்.அறிவானந்தம், திருமங்கலம், மதுரை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகம் முழுவதும், குரூப் - ௪ க்கான தேர்வுகள், ௫,௫௭௫ மையங்களில், செப்டம்பரில் தேர்வு நடைபெற்றது. இதில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், கீழ்க்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியோரில் சிலரது பெயர்கள் தர வரிசை பட்டியலில், ௧௦௦ இடங்களில், ௪௦ இடங்களை பிடித்து இருந்தது.இதில், முறைகேடு நடந்திருப்பதாக, மற்ற தேர்வர்கள் புகார் தெரிவித்து இருந்தனர். தேர்வு எழுதியோரில், ௪௦ பேர், வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.சென்னையைச் சேர்ந்தோர் மற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பலர், குறிப்பாக தேர்வு எழுத, ராமநாதபுரம் மாவட்டத்தையே தேர்வு செய்துள்ளனர். இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.கடந்த, ௨௦௧௭ ஆகஸ்ட் ௬ல், டி.என்.பி.எஸ்.சி.,யின், குரூப் - 2ஏ எழுத்துத் தேர்வு நடந்தது. இதற்கான, முடிவுகள் வெளியானது. இந்த தர வரிசை பட்டியலிலும், ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு எழுதியோர் தான், அதிக இடம் பிடித்திருந்தனர்.அதாவது, முதல், ௫௫ இடங்களில், 30 இடங்கள், ராமேஸ்வரம் பகுதிகளில் இருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியோர் தான். இதிலும், முறைகேடுகள் நடந்திருப்பதாக, மற்ற தேர்வர்கள், குற்றம் சாட்டுகின்றனர். இது பற்றி, தமிழக அரசு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.கடினமாக உழைத்து உணவு, உறக்கமின்றி, படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களின் மத்தியில், இப்படி முறைகேடாக, குறுக்கு வழிகளில், அரசுப் பணியில் அமர்வது, ஆண்டவனுக்கே பொறுக்காது.இதில், குரூப் - ௨ பணியில் சேர்ந்தோர், ஓராண்டு சம்பளமும் பெற்று விட்டனர். இவர்கள் மத்தியில் கிலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக அரசு தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டு, அதன் வாயிலாக, அரசு பணிகளில் அமர்ந்தோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போது தான், உண்மையாக படித்து வேலையில் அமர்வோருக்கு நம்பிக்கை பிறக்கும்; டி.என்.பி.எஸ்.சி., மீதும், நம்பகத்தன்மை ஏற்படும்!

விழலுக்குஇறைத்த நீர்போலாகி விடுமே!

சொ.கவிச்செல்வம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது, உள் கட்டமைப்பு வசதிகள் தான்.அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் மேம்படுத்தப்பட்ட சாலை, குடிநீர், சுகாதாரம், மின்சாரம் என, முக்கிய உள் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்ட பின் தான், அந்த நாடுகள் பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றம் கண்டன; வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை இது.இந்தியாவில், உள் கட்டமைப்பு திட்டங்கள், இதுவரை சரியான முறையில் இல்லை. இதை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயர்த்த, நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, 1.02 லட்சம் கோடி ரூபாய் செலவிட முன் வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாராட்டலாம்.முதலில், நீர், காற்று, உணவுக்கு, அடுத்து மனிதர்களின் அடிப்படை தேவைகளில் மின்சாரமும் இடம் பிடித்துள்ளது. மின்சார உட்கட்ட மேம்பாட்டு திட்டங்களுக்கு, 24.54 லட்சம் கோடியும், புறநகர் மற்றும் சிற்றுாரில் தரமான சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, 19.63 லட்சம் கோடியும் செலவிடப்பட உள்ளது.தொழில்துறை கட்டமைப்பை மேம்படுத்த, 3 லட்சம் கோடியும், சமூக உள் கட்டமைப்புக்கு, 3 லட்சம் கோடியும், விவசாயம் தொடர்பான உள் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு, 7.72 லட்சம் கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, போதுமானது அல்ல.மத்திய அரசு எதிர்பார்த்த அளவுக்கு வருமான வரி வசூல் இல்லை. நஷ்டத்தில் இயங்கும், 'ஏர் - இந்தியா' உள்ளிட்ட, அரசு நிறுவனங்களில் இருக்கும் முதலீட்டை திரும்பப் பெற முடியாததால், போதிய அளவு நிதி திரட்ட முடியவில்லை.உச்சபட்ச கடன் சுமை, நிதி பற்றாக்குறை போன்றவற்றால் திணறி வரும் மத்திய அரசு, எந்த வகையில் நிதி திரட்டும் என்பது புரியாத புதிராக உள்ளது.போதாக்குறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், சரி பாதியை மாநில அரசுகளுக்கு வழங்கப் போகிறதாம்!பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை சரியான முறையில், இனம் காண வேண்டும். அந்த திட்டங்களை நிறைவேற்ற, மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும்.இல்லையெனில், மத்திய அரசின் இந்த முயற்சி, விழலுக்கு இறைத்த நீர் போல், வீணாகி விடும்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X