வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 1971ல் நடக்காத ஒரு விஷயத்தை பேசுவதற்குப் பதில் ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடந்த 'துக்ளக்' வார இதழ் விழாவில், 1971ல் ஈ.வெ.ரா., நடத்திய பேரணி குறித்து துக்ளக் இதழில் செய்தி வந்ததாக பேசினார். ஆனால், தவறான கருத்தை பேசியதாக அவர் மீது புகார் கூறப்பட்டு, இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் போர்க்கொடி தூக்கினர்.
இந்நிலையில், நேற்று (ஜன.,21) செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, நான் இல்லாதது எதையும் சொல்லவில்லை. 'அவுட்லுக்' என்ற பத்திரிகையில் வந்த செய்தியை தான் சொன்னேன். எனவே, மன்னிப்பு கேட்க முடியாது, என்றார். ரஜினியின் இந்த விளக்கத்திற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

இது குறித்து , அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈ.வெ.ரா., மதிப்புமிக்கவர். 1971ல் நடைபெறாத விஷயத்தை பேசி, மக்களை ரஜினி திசை திருப்பி மலிவான அரசியல் செய்யக்கூடாது. எந்த ஆதாயத்திற்காக நடக்காத ஒன்றை பேச வேண்டும்? தேவையில்லாத ஒன்றை பேசுவதற்கு முன்பாக ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும்.
துக்ளக் பத்திரிகையில் வந்த செய்திக்கு அவுட்லுக் பத்திரிகை எப்படி ஆதாரமாக முடியும். ரஜினியை கண்டு திமுக.,வுக்கு வேண்டுமானால் பயமிருக்கலாம், அதிமுக.,வுக்கு பயமில்லை. எத்தனை ரஜினிகள் வந்தாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE