வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சூரத்: குஜராத்தில், ஓர் இளம் ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், மணமகனின் தந்தைக்கும், மணமகளின் தாய்க்கும் திடீரென காதல் மலர்ந்ததால், இருவரும் வீட்டை விட்டு ஓடினர். இதனால், இளம் ஜோடியின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தின், சூரத் மாவட்டத்தை சேர்ந்தவர், ராஜேஷ், 48. தொழில் அதிபரான இவரது மகனுக்கு, அதே மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன், சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுக்கு, அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில், சூரத்தில் திருமணம் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், ராஜேஷை கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக காணவில்லை. இது குறித்து அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். அப்போது தான், மணமகளின் தாய் ஸ்வாதியையும், ஒரு வாரமாக காணவில்லை என்ற தகவல் தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறியதாவது: ராஜேஷ், ஸ்வாதி ஆகியோர், இளம் வயதில் அருகருகே உள்ள வீடுகளில் வசித்துள்ளனர். இருவரது குடும்பத்துக்கும் நல்ல பழக்கம் இருந்திருக்கிறது.

அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். கால சுழற்சியில், அவர்களது காதல் கைகூடவில்லை.இருவரும், வேறு வேறு நபர்களை திருமணம் முடித்தனர். இந்த நிலையில் தான், நண்பர்கள் மூலமாக அவர்களது பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்க ஏற்பாடு நடந்தது. இதற்கிடையே, ராஜேஷ் - ஸ்வாதி இடையே, இளமைக் காதல் மீண்டும் மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் வீடுகளை விட்டு வெளியேறி, தலைமறைவாகி விட்டனர். பெற்றோரின் திடீர் காதலால், இளம் ஜோடியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களது திருமணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE