சீனாவை முடக்கியது, 'கொரோனா வைரஸ்' போக்குவரத்து தடையால் 4 கோடி பேர் பாதிப்பு

Added : ஜன 24, 2020
Advertisement
 சீனாவை முடக்கியது, 'கொரோனா வைரஸ்'  போக்குவரத்து தடையால் 4 கோடி பேர் பாதிப்பு

பீஜிங் :சீனாவில் பரவி வரும், 'கொரோனா வைரஸ்' பாதிப்பால், பல நகரங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நான்கு கோடி பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 25 ஆக அதிகரித்துள்ளது.அண்டை நாடான சீனாவில், சமீபகாலமாக, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடுமையான சளி, தொடர் இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள். வூஹான் நகரில், இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தடுப்பு நடவடிக்கைவைரஸ் பாதிப்பை குறைக்கும் மருந்துகளுக்கு போதிய பலன் கிடைக்காததால், மற்ற நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. ஜியான்னிங், ஜியோகான், என்ஷி, ஜியாஜங் ஆகிய நகரங்களிலும் இந்த வைரஸ் பரவி, உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் மட்டும், இந்த நோய்க்கு, நேற்று வரை, 25 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோருக்கு தொற்று ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் காரணமாக, சீனா முழுவதும் பீதி நிலவுகிறது. தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையே, சீனாவில், வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், வூஹான், ஜியான்னிங், ஜியோகான், என்ஷி, ஜியாஜங், ஜிபி, லிசுவன் உள்ளிட்ட எட்டு நகரங்களில், ரயில், பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நகரங்களில் இருந்து, சீனாவின் மற்ற நகரங்களுக்கு மக்கள் செல்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், நான்கு கோடி பேரின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் உள்ள பொழுது போக்கு மையங்களும் மூடப்பட்டுள்ளன. சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற ஷாங்காய் டிஸ்னிலேண்ட் பொழுது போக்கு மையமும் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே, தென் கொரியா நாட்டிலும், இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தென் கொரிய விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கொண்டாட்டம் ரத்துவரும், 26ல், குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாட, பீஜிங்கில் உள்ள இந்திய துாதரகம் ஏற்பாடு செய்திருந்தது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.மும்பையில் 2 பேருக்கு பாதிப்பு?கொரோனா வைரஸ், நம் நாட்டில் பரவாமல் தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம், விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மும்பை விமான நிலையத்தில், சில நாட்களில் மட்டும், சீனாவில் இருந்து வந்த, 1,789 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் இருவருக்கு மட்டும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அவர்கள் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இதேபோல, கேரளாவில், சீனா சென்று திரும்பிய 80 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், ஏழு பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் யாருக்கும் வைரஸ் நோய் தாக்குதல் உறுதி செய்யப்படவில்லை.10 நாளில் மருத்துவமனைசீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவமனைகளில் போதிய இடவசதி இல்லை என, புகார்கள் வந்தன. இதையடுத்து, சீன அரசு அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளது. வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள வூஹான் நகரில், 10 நாட்களில் பிரமாண்ட மருத்துவமனையை கட்டுவதற் கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. 20 ஆயிரம் சதுர மீட்டரில், 1,000 படுக்கைகள் உடையதாக இந்த மருத்துவமனை கட்டப்படுகிறது. நவீன இயந்திரங்கள், கருவிகள் உதவியுடன், ஏராளமான தொழிலாளர்களும் மருத்துவமனை கட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பிப்ரவரி, 3ம் தேதிக்குள் மருத்துவமனை கட்டும் பணி முடிவடைந்து, இங்கு நோயாளிகள் அனுமதிக்கப்படுவர் என, தகவல் வெளியாகிஉள்ளது. கடந்த, 2003ம் ஆண்டிலும், சீனாவில் வேறு ஒரு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, பீஜிங் புறநகர் பகுதியில், ஒரே வாரத்தில் அதி நவீன மருத்துவமனை கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.'எய்ம்ஸ்' தயார் நிலைடில்லியில் உள்ள, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த வைரசால், யாராவது பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அவர்களை உடனடியாக இந்த வார்டில் அனுமதித்து, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறுகையில், ''கொரோனா வைரஸ் பாதிப்பால் யாரும் பீதியடைய தேவையில்லை. சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ''போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைளும் செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், தனி வார்டில் படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X