பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையை அதிர வைத்த 'அறிவுக் கொண்டாட்டம்' தினமலர் -பட்டம் வினாடி வினா இறுதி போட்டியில் 'தெறிக்க' விட்ட மாணவர்கள்

Added : ஜன 24, 2020
Advertisement
 மதுரையை அதிர வைத்த 'அறிவுக் கொண்டாட்டம்' தினமலர் -பட்டம் வினாடி வினா இறுதி போட்டியில் 'தெறிக்க' விட்ட மாணவர்கள்

மதுரை : தினமலர் மாணவர் பதிப்பு- பட்டம் சார்பில் 'பதில் சொல் அமெரிக்கா செல்' என்ற மெகா வினாடி வினா போட்டியின் கோலாகலமான இறுதிச்சுற்று மதுரையில் நடந்தது. சிவகங்கை டி.புதுார் ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் கிரிஷா மால்னி - கீதணி அணி அசத்தலாக வென்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா' செல்லும் அற்புத வாய்ப்பை பெற்றது.தினமலர் நாளிதழ், கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் இணைந்து நடத்திய மெகா வினாடி வினாவுக்கான முதற்கட்ட போட்டிகள் கடந்த அக்டோபரில் துவங்கியது. மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் 200 பள்ளிகளில் முதற்கட்ட போட்டிகள் நடந்தன.
ஆக்ஸ்வர்ட் பள்ளி முதலிடம்
முதற்கட்ட போட்டியில் வென்ற ஒவ்வொரு பள்ளியிலும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான இறுதிச்சுற்று மதுரை தல்லாகுளம் லட்சுமிசுந்தரம் ஹாலில் நேற்று நடந்தது. சொல்லி அடித்து தெறிக்க விடும் கில்லிகளாக களம் இறங்கிய மாணவர்களுக்கு இறுதிச்சுற்றின் முதற்கட்டமாக எழுத்து தேர்வு நடந்தது.'எக்ஸ் குவிஸ் இட்' நிறுவனர் ஷ்ரவண தீபன் போட்டியை நடத்தினார். எட்டு பள்ளிகளை சேர்ந்த 16 பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். மாணவர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்ட எட்டு அணிகளுக்கும் 'குறுக்கெழுத்து', 'பதில்கள் வேறு; ஒற்றுமை ஒன்று', 'வெற்றியை உறுதி செய்', 'பட்டம் - வேகம் - விவேகம்' என்ற நான்கு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.ஆர்வமும், 'த்ரிலும்', திருப்பமும் கலந்த இறுதி போட்டியில் சிவகங்கை டி.புதுார் ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கிரிஷா மால்னி, கீதணி முதலிடத்தை தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற அணியினர் படித்த பள்ளிக்கு பிரமாண்ட சுழற்கோப்பை வழங்கப்பட்டது. தினமலர் மாணவர் பதிப்பு சார்பில் மாணவர்கள் இலவசமாக அமெரிக்காவின் 'நாசா' மையத்துக்கு செல்லலாம். அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.சூரக்குளம் ஆக்ஸ்வர்ட் பள்ளி 2ம் இடம்இரண்டாம் இடம் வென்ற சிவகங்கை சூரக்குளம் ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அபிநந்தன், ஆதிகேசவனுக்கு தலா ரூ.54 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், பள்ளிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.மூன்றாம் இடம் வென்ற ஸ்ரீவி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் விஜயமதி, ஹரிநாத்துக்கு வசந்த் அன் கோவின் தலா ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள காசோலை மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி
(கே.ஆர்.எஸ்.,) மாணவர்கள் அருணாசலம்- நந்தினி ஜோடி நான்காம் இடம் வென்றது. சிவகாசி விநாயகா மெட்ரிக் பள்ளி ஜெயசூர்யா, கோகுல் ஐந்தாம் இடம், காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் காவிய மீனா, ஜெயதுர்கா ஆறாம் இடம், விருதுநகர் ஆவியூர் சுந்தரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சதீஷ்குமார், பவுன்ராஜ் ஏழாம் இடம், சிவகாசி கம்மவார் எஸ்.என்.எம்., மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முத்துலட்சுமி, தர்ஷினி எட்டாம் இடங்களை வென்றனர்.இவர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள கைக்கடிகாரம், உதயம் வேட்டி வழங்கும் ரூ.1,000 மதிப்புள்ள பரிசுகள், லலிதா ஜுவல்லரியின் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.பார்வையாளர்களாக பங்கேற்று வினாக்களுக்கு பதில் அளித்த 25 மாணவர்களுக்கு தலா ரூ.1,000 மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.தினமலர் நாளிதழுடன் போத்தீஸ், வீனஸ் எலக்ட்ரானிக்ஸ், உதயம் வர்ணா வேட்டி சட்டைகள், லலிதா ஜுவல்லரி மார்ட் பிரைவேட் லிமிடெட், மதுரை குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி ஆகியன இணைந்து வழங்கின.


'தினமலர் நாளிதழின் அறிவுத் திருவிழா'
தினமலர் மாணவர் பதிப்பு - பட்டம் இதழ் பொறுப்பாசிரியர் ஆர்.வெங்கடேஷ் பேசியதாவது:பட்டம் இதழ் துவங்கியவுடன் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவர்களின் அறிவையும், திறமையையும் மேம்படுத்த வினாடி வினா போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.கடந்த அக்டோபரில் பட்டம் சார்பில் சென்னையில் இருந்து இருவர் 'நாசா' சென்று வந்தனர். இப்போட்டியில் பொது அறிவு, வரலாறு உள்ளிட்ட பாடங்களை சோதிப்பது போல்தான் வினாத்தாள் அமைக்கப்பட்டது. தகுதிச் சுற்றில் 20 வினாக்கள் கேட்கப்பட்டன. இதில் அதிக மதிப்பெண் பெற்ற எட்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. இறுதிப் போட்டி மூன்று மணிநேரம் நடந்த 'அறிவு திருவிழா'. மாணவர்களை உற்சாகமூட்டி அழைத்து வந்த பள்ளிகளின் ஆசிரியர்கள், முதல்வர்கள், தாளாளர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.இவ்வாறு பேசினார்.


காளையர்கள் போல் மாணவர்கள்

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் 'கெத்து' காளைகளை அவிழ்த்து விடுவதுபோல் வினாடி வினா களத்தில் வினாக்கள் வீசப்பட்டன. 'வீரத் தமிழன்டா... நாங்க' என வெறித்தனம் காட்டி அடக்கும் காளையர்கள் போல் மாணவர்கள் 'பட்... பட்' என பதில் சொல்லி ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.குறிப்பாக நான்காவதாக நடந்த 'பட்டம்... வேகம்... விவேகம்' சுற்றில் வினாடி வினா நடத்தும் ஷ்ரவண தீபன் வினாக்களை முழுமையாக குறிப்பிடுவதற்குள் மாணவர்கள் பதில்களை சொல்லி அரங்கத்தையே 'தெறிக்க' விட்டனர்; பார்வையாளர்களிடம் இருந்து அபாரமான கைத்தட்டலை அள்ளினர்.

'தினமலர்- பட்டம்' நல்ல தலைவர்களை உருவாக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை
மதுரை: வினாடி வினா போட்டியின் மற்றொரு நிகழ்வாக தினமலர் நாளிதழ் சார்பில் 90 பள்ளிகளுக்கு 'தங்கத்தாமரை' விருதுகள் வழங்கப்பட்டன.'தங்கத்தாமரை' விருது, வினாடி வினாவில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:மாணவர்கள் நலனில் தினமலர் நாளிதழ் தனிக்கவனம் செலுத்துகிறது. தினமலர் 'லோகோ' தாமரை. இந்த தாமரை தான் தேசிய அளவில் ஆட்சி செய்கிறது. தமிழக மக்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளது.தினமலர் மாணவர் பதிப்பு- பட்டம் இதழ் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது மட்டுமல்ல ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., பட்டங்கள் வாங்க வைக்கவும் போகிறது. மாணவர்களுக்கு இதற்கான களத்தை ஏற்படுத்தி 'நாசா' செல்வதற்கான வாய்ப்பை தினமலர் உருவாக்கி கொடுத்துள்ளது. இது வரலாற்று பதிவு.தினமும் தினமலர் நாளிதழை படித்தபின் தான் மற்ற வேலைகளே ஓடும். சரியான நாட்டு நடப்புக்களை அறிய முடியும். நம் ஒவ்வொருவருக்கும் தினமும் வழிகாட்டியாக விளங்குகிறது தினமலர்.மாணவர்களுக்கு 'கேட்டல்' (லிசர்னிங்) மிக முக்கியம். அதன் மூலம் 'கற்றல்' (லேர்னிங்) அவசியம். இவற்றை முறையாக வளர்த்துக்கொண்டால் நல்ல தலைவர்களை உருவாக்க முடியும். அந்த வகையில் பட்டம் இதழ் மூலம் நல்ல தலைவர்களை உருவாக்கும் பணியில் தினமலர் ஈடுபட்டுள்ளது. பல மாணவர்களின் 'நாசா' செல்லும் கனவு நனவாகிறது. பட்டம் இதழை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.பட்டம் இதழ் குறித்து முதல்வர் பழனிசாமி, கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் எடுத்துக்கூறி அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும். மாணவர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். சாதிக்கும் இலக்கு வேண்டும். அந்த வகையில் மறைந்த ஜெயலலிதா விட்டு சென்ற, பழனிசாமி தலைமையிலான இந்த அரசு மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தி பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களுக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சார்பில் தமிழ்--ஆங்கில அகராதி வழங்கப்பட்டது.அமைச்சருக்கு தினமலர் இணை இயக்குனர் ஆர்.ஸ்ரீனிவாசன் நினைவுபரிசு வழங்கினார்.அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பேராசிரியர் மணிகண்டன், போத்தீஸ் நிர்வாக இயக்குனர் முருகேஷ், குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாக இயக்குனர் அபிநாத் சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தினமலர் மாணவர் பதிப்பு-பட்டம் இதழ் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது மட்டுமல்ல ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., பட்டங்கள் வாங்க வைக்கவும் போகிறது.


நனவாகிறது 'நாசா' கனவு! மாணவிகள் உற்சாகம்

மதுரை,: ''அமெரிக்காவின் 'நாசா' செல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறப்போகிறது என்பதை நினைத்து பார்க்கும்போது மனம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறது'' என முதலிடம் வென்ற சிவகங்கை டி.புதுார் ஆக்ஸ்வர்ட் பள்ளி மாணவிகள் கிரிஷா மால்னி - கீதணி தெரிவித்தனர்.இவ்வெற்றியின் மூலம் இருவரும் விண்வெளி ஆய்வில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவின் 'நாசா'விற்கு இலவசமாக செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மாணவிகள் கூறியதாவது: ஐ.நா., அதிகாரி ஆவேன்!முதலிடம் வென்ற கிரிஷா மால்னி, பத்தாம் வகுப்பு மாணவி. அப்பா நாகேந்திர செந்தில்குமார், பொறியியல் உபகரணங்கள் விற்பனை செய்கிறார். அம்மா மகேஸ்வரி.மாணவி கூறியது: முதற்கட்ட வினாடி வினா போட்டியில் பங்கேற்ற போதே இறுதிப் போட்டியில் வென்று 'நாசா' செல்வேன் என நம்பிக்கையோடு தெரிவித்தேன். என் நம்பிக்கை பலித்துள்ளது. தினமலர் பட்டம் இதழை 'பைண்டிங்' செய்து சேகரித்துள்ளேன். இதில் மாணவர்களுக்கு தேவையான அறிவியல் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.என் கனவு ஐ.நா.,வின் செகரட்டரி ஜெனரல் பதவி வகிப்பதே. அதை அடையும் இலக்குடன் இப்போது இருந்தே பயணிக்கிறேன். அந்த ஆசை நிறைவேறுவதற்கான துவக்கம் தான் 'நாசா' வாய்ப்பு கிடைத்ததாக நினைக்கிறேன். இதற்காக தினமலர் நாளிதழுக்கு நன்றி. நிச்சயம் சிறந்த விஞ்ஞானியாக உருவாகி செகரட்டரி ஜெனரல் பதவியை எட்டுவேன். அவ்வளவு உயர்ந்த பதவியால் உலகளவில் நன்மை செய்ய வேண்டும். குறிப்பாக என் தாய்நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சிக்கான நன்மை செய்ய வேண்டும் என்பது என் கனவு.
நினைத்துக்கூட பார்க்கவில்லைமுதலிடம் வென்ற மற்றொரு மாணவி கீதணி, ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். அப்பா துரைப்பாண்டி, வழக்கறிஞர். அம்மா தமிழரசி.மாணவி கூறியது: சிவகங்கையை சேர்ந்த நான் அமெரிக்கா செல்லப் போகிறேன் என நினைக்கும் போதே சந்தோஷமாக உள்ளது. அங்கு சென்று அறிவை விரிவாக்கிக்கொள்வேன். தினமும் பட்டம் இதழை நன்றாக படித்தேன். பாடங்கள் போல் இதற்காகவும் நேரம் ஒதுக்கி பொது அறிவை வளர்த்துக்கொண்டு வருகிறேன். பள்ளிக்கு பெருமை இப்பள்ளி நிறுவன தலைவர் ஷியாமளா, தாளாளர் வெங்கடேசன் கூறியதாவது:எங்கள் பள்ளி மாணவர்களுக்கு முதலில் பட்டம் இதழை வழங்க வந்தபோது தமிழ் இதழ் என்பதால் சிறிய தயக்கம் இருந்தது. ஆனால் தாய்மொழியில் பொது அறிவை படித்தால்தான் வேகமாக கற்றுக்கொள்ள முடியும் என இம்மாணவர்களின் வெற்றி மூலம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மிக பின்தங்கியுள்ளது என கூறும்போதெல்லாம் எங்களுக்கு கோபம் வரும். அதை உடைத்துக்காட்டும் வகையில், செழிப்பான மாவட்ட மாணவர்களை எல்லாம் வெற்றிகொண்ட எங்கள் மாணவிகளால் பள்ளிக்கு பெருமை. இந்த வெற்றியை மாணவிகளுக்கும், பெற்றோருக்கும் சமர்ப்பிக்கிறோம். பள்ளி மீது மாணவிகள் வைத்துள்ள நம்பிக்கையை இந்த வெற்றி காட்டுகிறது. படிப்பு மட்டுமின்றி மாணவர்களின் மனநிலைக்கு ஏற்ப கல்வி கற்பிக்கப்படுகிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதற்காக தினமலர் நாளிதழுக்கு நன்றி.அடுத்த முறை வெல்வது உறுதிஇரண்டாம் இடம் வென்ற அபிநந்தன் (பிளஸ் 1)- ஆதிகேசவன் (பிளஸ் 1) மற்றும் மூன்றாமிடம் வென்ற ஹரிநாத் (எட்டாம் வகுப்பு) - விஜயமதி (ஒன்பதாம் வகுப்பு) கூறியதாவது:'நாசா' செல்வோம் என்ற கனவோடுதான் வந்தோம். வாய்ப்பை இழந்தோம். வருத்தமாக உள்ளது. வினாக்கள் கொஞ்சம் கடினமாக இருந்ததாக உணர்ந்தோம். சில வினாக்களுக்கு அவசரப்பட்டு தவறான பதில் கூறி 'மைனஸ்' மதிப்பெண் பெற்றது வெற்றிக்கு தடையாகிவிட்டது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்த்தும், இதற்கென தனி நேரம் ஒதுக்கி அடுத்த வாய்ப்பில் கட்டாயம் வென்று 'நாசா' செல்வோம்.இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X