மூளைச்சலவை செய்வது, பயங்கரவாதத்திற்கு மட்டுமல்ல, விதண்டாவாத
விவாதங்களுக்கும் உதவுகிறது. அதனால், விளம்பரம் என்ற வியாபாரம், மிகச் சுலபமாகவே கிடைத்து விடுகிறது. அடாவடி செயல்களாலும், அவதுாறு பேச்சுகளாலும், மூளைச்சலவை செய்வோருக்கு விளம்பரம் கிடைத்து விடுகிறது.
அதற்காகத் தான் அவர்கள், அவ்வாறு செய்கின்றனர் என்பது, அதில் உள்ள மறைபொருள். எனினும், முதலில் அது அவர்களுக்கு சாதகமாகி, பின், பாதகமாகவும் ஆகி விடுகிறது.எதை எடுத்தாலும், விதண்டாவாதம் பேசுவது, நன்மைக்கு அறிகுறி அல்ல. அதற்கு நல்ல உதாரணம், 1971ல், சேலத்தில் நடந்த, மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு. அங்கே, ஹிந்துக்களின் மனதை புண்படுத்திய நிகழ்ச்சிகள் அரங்கம் கண்டன.
அன்று அங்கே ஆர்ப்பரித்தவர்களில் சிலர், இன்று, அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து, 'சாமியே சரணம்' என்கின்றனர்.அன்று, ஹிந்து தெய்வ படங்களை, பிறந்த மேனியாக காட்டி, அவதுாறு பரப்பிய சிலர் அடைந்த மகிழ்ச்சி, பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு அருவருப்பையும், மனக் கொதிப்பையும் கொடுத்தது; இப்போதும் கொடுக்கிறது. எனினும், அவர்களை கண்டு கொள்ளாமல் விடுவது தான் சிறந்தது.
இதற்கு உதாரணமாக, 'சூரியனைப் பார்த்து, நாய் குரைக்கும்; சூரியன் பதிலுக்கு குரைக்காது' என்ற கிராமத்து பழமொழியை நினைவில் கொள்ளலாம். ஏனெனில், ஹிந்துக்கள் தான் சகிப்புத் தன்மை மிக்கவர்கள். தங்கள் இறை நம்பிகையை பிறர் ஏசினாலும், பேசினாலும், திட்டினாலும், கொட்டினாலும் பொறுத்துக் கொள்பவர்கள்; எப்போதும் கோபம் கொள்ளாதவர்கள்.
ஹிந்துக்களை நிந்திப்பவர்களால், தைரியமாக, பிற மதத்தினர் மீது அவ்வாறு பேச முடியுமா; முடியாது. அதை அந்த நபர்கள், நன்கு அறிந்துள்ளனர். அதனால் தான், பொறுமைசாலிகளான ஹிந்துக்களை நிந்திக்கின்றனர்; இதனால் அவர்கள் வயிறும், பையும் நிறைகிறது; நிறையட்டும்.
ஹிந்து மதம் தான், உலகிலேயே பழமையான மதம். அதன் பின் தான், கிறிஸ்துவம், இஸ்லாம், புத்தம், சீக்கியம் போன்றவை தோன்றின. குடும்பத்தில் மூத்தவர், வெகுண்டெழுந்தால், குடும்பம் சிதைந்து விடும். அவர் அமைதியாக இருந்தால் தான், குடும்பம் கட்டுக்கோப்பாக இருக்கும்.
எனவே, குடும்பம் என்ற இந்த சமுதாயம் கட்டுக்கோப்பாக இருக்க, இந்த
புல்லுறுவிகளின் பேச்சுகளுக்கு, முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. அவர்களுக்கு நாம் சொல்லும் பதிலாக, வழக்கம் போல இல்லாமல், இன்னும் கூடுதலாக கோவில்களுக்கு செல்வோம்; ராமரை வணங்குவோம்; புனித யாத்திரை மேற்கொள்வோம்.
ராமபிரான் படத்தை, செருப்பால் அடித்த அவதுாறு செயல், 50 ஆண்டுகளுக்கு பின் இப்போது மீண்டும் ஒலிக்கிறது; கேட்கும் போதே, ஆத்திரம் வருகிறது. முதலில் தோன்றிய மதம் என்பதால் தான், மதம் பிடிக்காமல் பொறுமை காக்கிறது.அதே சமயம், நான் வாழும், சிவகங்கை மாவட்டம், திருப்பத்துாரில், ஹிந்துக்கள், முஸ்லிம்கள், அண்ணன் - தம்பிகளாக பழகுவது பெருமிதம் தருகிறது.
அதிலும், ஒரே சுவரில், ஒரு பக்கம் விநாயகர் கோவில்; மறுபக்கம் பெரிய பள்ளிவாசல். பள்ளிவாசலில் பாங்கு ஒலிக்கும் நேரம், விநாயகர் கோவிலில் அமைதி காப்பதும், விநாயகர்
கோவிலில் திருவிழா என்றால், பள்ளிவாசலில் அமைதி காப்பதும், தேசத்திற்கே நல்லது சொல்லும் அன்றாட நிகழ்வு.இது மாதிரி, எல்லா இடமும் அமைய வேண்டும் என்பது தான், மனிதநேயம் காப்பவர்களின் பிரார்த்தனை. அதை குலைக்க நினைப்பவர்கள் தான், ஹிந்துக்களை
கொதிக்க வைக்க முயல்வர்; கொதிக்காமல் இருப்பது தான், ஹிந்துக்களின் கடமை.
நாம், பிற மதத்தவருடன் கூட, ஒற்றுமை காக்கும் போது, சொந்த மதத்தை சேர்ந்தவர்கள்
பிரச்னைகளை உருவாக்குகின்றனர் என்பதற்காக, ஏன் வேதனைப்பட வேண்டும்?
அதிரடியாக எதிர்வாதம் செய்தால் தான், மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என்பது பயங்கரவாதத்தின் ஒரு பக்கம் தான். அப்படித் தான் ஆரம்பித்து இருக்கின்றனர். அவர்
களுக்கு நாம், வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கக் கூடாது. அது தேவையில்லை!
ஒருவர் சொன்னார், 'ராமர் படத்தை செருப்பால் அடித்தது தப்பு' என்று. இன்னொருவர்
சொல்கிறார், 'ஈ.வெ.ரா., செருப்பால் அடிக்கவில்லை.
'குன்றக்குடி அடிகளாருக்கு விபூதி மடல் கொடுத்த பெருந்தகை. அவரை நோக்கி எறியப்பட்ட செருப்பு, தவறிப் போய் ராமர் படத்தில் பட்டது' என்று. இன்னொருவர் சொல்கிறார். 'ஈ.வெ.ரா., செருப்பால் அடிக்கும் அளவுக்கு துணிச்சல் மிகுந்தவர்' என்று.இவ்வாறு அவர்களுக்கு
உள்ளேயே குழப்பம். ஒருவர் அடித்தார் என்கிறார்; இன்னொருவர், தவறிப்பட்டது என்கிறார். பயம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது; அந்த பயத்தை அப்படியே பராமரிப்போம்.
ஈ.வெ.ரா.,வின் கொள்கை என, சிலரால் கூறப்படும், சுய மரியாதை கொள்கை என்பது, நிச்சயமாக மிக உயர்ந்தது தான். ஆனால், மற்றவர்களை அவமரியாதை செய்வது, மிகவும் கொடுமையான ஒன்று.
ஒருவரின் நம்பிக்கையில் அடுத்தவரின் தலையீடு கூடாது. அது, ஆன்மிகம் ஆனாலும் சரி, அரசியல் ஆனாலும் சரி. தனக்கு ெதளிவாக பட்டதை விமர்சிக்கலாம்; தப்பில்லை.
ஆனால், சேற்றில் கல் எறிந்தால், சேறு நம் மீதும் தெறிக்கும் என்பது, ஏன் சிலருக்கு
புரியாமல் போய் விடுகிறது?நீரில் வாழும் மீன் கரை ஏறினால், இறந்து விடும். நிலத்தில் வாழும் மனிதன், நடுக்கடலில் விழுந்தால் செத்து விடுவான். இதில் இருந்து தெரிவது என்ன... யார், யாருக்கு, எது, எது உரிமையோ, உடமையோ, அது, அதில் தான் அந்த
அளவுக்குத் தான் பற்று கொள்ள வேண்டும்; மீறினால் இற்றுப் போக நேரிடும்.
பழையதை எடுத்து இன்று ஏன் பந்தாட வேண்டும். ஒருவர், ஒரு கருத்து சொன்னால், அது அவரின் கருத்து. அதை குழப்புவது ஏன்; குட்டையில் இல்லாத மீனை பிடிக்க துாண்டில் ஏன் போட வேண்டும்?
செருப்பு என்பது காலுக்கு; கிரீடம் என்பது தலைக்கு. அவதார புருஷன் என்ற நம்பிக்கையைப் பெற்றவர் ராமர். அவர் இன்றும், சேது பாலம் காட்சியாக நிற்கிறார்; கோடானு கோடி மக்களின் உள்ளத்தில் உறைகிறார். அவர் புகழை இவர்களால் மறைக்க முடியுமா?
எனினும், 'எத்தனை காலம் தான், இளைய ஹிந்து சமுதாயம் பொறுமை
காக்கும்...' என்ற கேள்வியும் எழுகிறது. பொறுமை என்பதற்கு, எல்லையே இல்லை. பொறுமை காத்தால், பெருமை கிடைக்கும்.எதையும், ஊதிப் பெரிது ஆக்குவது என்பது, அரசியல் குள்ள நரித்தனம். அந்த நரிகளுக்கு நாம் இரையாகக் கூடாது. நரிகளை தொடர்ந்து ஊளையிட செய்வோம்; அதை மட்டும் தான் நரியால் செய்ய முடியும். அமைதியாக இருப்பதே நமக்கு சிறந்தது.
குறிப்பாக, இளைய சமுதாயம், இனிமேல் தான் பொறுமை காக்க வேண்டும்.
அந்த கும்பலுக்கு பதிலடியாக, கிராமங்கள் தோறும், தெருக்கள் தோறும் ஆன்மிக சாலைகளை உருவாக்குங்கள். இது வரை கற்காத, ஹிந்து மத கருத்துகளை, கோட்பாடுகளை கற்று, அதன் வழி நடக்க முயற்சியுங்கள்.
விளம்பரம் தேடுவோருக்கு பதிலடி கொடுப்பதற்காகத் தான், கவிஞர் கண்ணதாசன், 'நாத்திகன் தான், அடிக்கடி கடவுளை நினைத்துக் கொள்கிறான். அதன் மூலம் அவன், குடும்ப வியாபாரத்தை பெருக்கிக் கொள்கிறான்' என்கிறார். மேலும் அவர், 'ஜால்ரா போட்டால், காசு வரும் என்று, சில நாத்திக போலிகள், தங்களுக்கு போட்டுக் கொள்ளும் திரை தான், பகுத்தறிவு. உலகம் முழுவதுமே, நாத்திகம் பேசியவன் வென்றதாக சரித்திரமே இல்லை' என்கிறார்.
பகுத்தறிவு போர்வையில் ஒளிந்து கொண்டு, பணம் பண்ணுபவர்களை, உலகம் கண்டு கொள்கிறது.
மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டால் தான், 138 ஆக இருந்த, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, அடுத்த தேர்தலில், 183 ஆனது என்கின்றனர். அப்படியானால், அந்த எண்ணிக்கையில் இப்போது ஏன் சுருக்கம் ஏற்பட்டது? மக்களுக்கு என்ன செய்வோம் என, அரசியலுக்கு வந்தவர்கள், ஒரு காலத்தில் சிந்தித்தனர். ஆனால், தான் பெற்ற மக்களுக்கு, என்ன செய்யலாம் என்று சிந்திக்கின்றனர், பெரும்பாலான அரசியல் வியாபாரிகள்.
மதப் பிரச்னையை அரசியல் ஆக்கினால், மக்களை மூளைச்சலவை செய்யலாம். ஹிந்துகள் தான் அப்பாவிகள் ஆயிற்றே என்று, சிலர் நினைப்பது தவறு என்பதை, காலம் நிச்சயமாக அவர்களுக்கு காட்டும். சூடும், சொரணையும் உள்ளவர்கள் ஹிந்துக்கள் என்பதையும் சொல்லும்!
கர்ணனை, குந்தி தேவி பெற்றாள் என்று சொல்வதை கேவலப்படுத்தியவர்கள், இன்னொரு மதத்திலும், அது மாதிரி நிகழ்வு உண்டு என்பதை அறிந்து, அந்த மதத்தின்
நம்பிக்கையை கேவலப்படுத்தி பேச மாட்டார்கள்.
அவர்களால் பேச முடியாது. பேசினால் சிக்கல் என்பதை அறிவர். அது தான் அவர்களின் தோல்வி; ஹிந்து மதத்தின் வெற்றி; ஹிந்துக்களின் உயர்வு.எனவே, எதிர்வினை எதுவும் வேண்டாம் என்பது தான், நல்லவர்கள் கருத்து; அதை அனைவரும் பின்பற்றுவது தான் சிறந்தது.கோவில்களும், தர்ம மடங்களும் நல்ல காரியங்களுக்காக துவங்கப்பட்டவை. அவற்றில் சில குற்றங்கள், குறைகள், தவறுகள் நடக்கத் தான் செய்யும்.
ஏனெனில், அவற்றை நடத்துபவர்கள் மனிதர்கள் தானே... நேர்மையாகவும், வெகு நியாயமாகவும் நடந்து கொண்டால், கடவுள் இருக்கும் இடத்திற்கு மனிதர்கள் சென்று விடுவரே!
எனவே, குற்றங்கள் சொல்பவர்களை, நாம் குறை சொல்ல வேண்டாம். வயிற்றுப் பிழைப்பிற்காக அவர்கள் அவ்வாறு கூறுகின்றனர் என்பது, நமக்கு நன்கு தெரிந்தது தானே! அதுபோல, எதிர்ப்பலைகளை வீசினால், தங்கள் பலவீனங்கள் மறைக்கப்பட உதவும் என, சிலர் நினைப்பது புரிகிறது.பலவீனங்களை மறைப்பதைக் காட்டிலும், பலவீனங்களை மாற்ற முயற்சிப்பது
சமுதாயத்திற்கு நல்லது.
கடந்த, 1971ல், உண்மை சொன்ன ஒரு பத்திரிகையை தடை செய்து, உச்ச நீதிமன்றம் தலையிட்டு, அந்த பத்திரிகை ெவளிவந்தது சரித்திரம். உண்மை அப்படி இருக்கும் போது, இத்தனை ஆண்டுகள் போன பின், ஏன் வீண் மறுப்புகள்; விதண்டாவாதங்கள்?கண்ணதாசன் வரிகள், மீண்டும் நினைவுக்கு வருகின்றன. 'நாத்திகன் தான், கடவுளை அதிகம் நினைக்கிறான்!'
தொடர்புக்கு:
send2subvenk@gmail.com