சேலம்: சேலத்தில், ஈ.வெ.ரா., நடத்திய ஊர்வலம் குறித்து, நடிகர் ரஜினி பேசியது, தி.க., மற்றும் தி.மு.க.,வினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம், ரஜினியைப் பாராட்டி, 'மீம்ஸ்'கள் வலம் வருகின்றன.

ரஜினி வீட்டு முன், திராவிடர் கழகத்தின் ஒரு பிரிவினர், போராட்டம் நடத்த வந்த நிலையில், தமிழக அரசு, அவருடைய வீட்டிற்கு பாதுகாப்பு அளித்துள்ளது. இதற்கிடையே, ரஜினி விவகாரத்தில், உள்துறை அமைச்சகத்திற்கு ரகசிய அறிக்கை ஒன்றை, மத்திய உளவுத்துறையும் அளித்துள்ளது. ரஜினிக்கு எதிரான போராட்டத்தால், அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என, இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதாம்.

இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியும் ஆலோசனை நடத்திஉள்ளனர். ரஜினியும், கட்கரியும் நீண்ட கால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ரஜினிக்கு, மத்திய அரசு விரைவில் துணை ராணுவப் படை பாதுகாப்பு அளிக்கும் என சொல்லப்படுகிறது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு தரப்பட்ட அதே பாதுகாப்பு, ரஜினிக்கு தரப்படவிருக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE