வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங் : சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவ, ஏற்கனவே இரு அவசர தொலைபேசி எண்களை அறிவித்திருந்த, பெய்ஜிங்கில் உள்ள இந்திய துாதரகம், தற்போது மூன்றாவது உதவி எண்ணையும் அறிவித்துள்ளது.

சீனாவில் இதுவரை, கொரோனோ வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்திருக்கிறது. வைரஸ் தாக்குதலால், 2,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வுஹான் நகரில் மாணவர்கள் 250 பேர் உள்ளிட்ட இந்தியர்கள் சிலர் வசித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் வுஹான் நகரில் மருத்துவம் பயின்று வருகின்றனர். இவர்களை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்தியா மற்றம் சீன அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏற்கனவே 12 மாகாணங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் வசிக்கும் அமெரிக்க மாணவர்களை வெளியேற அறிவுறுத்தி உள்ள சீனா, இந்திய மாணவர்களையும் பத்திரமாக இந்தியா அனுப்பி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வுஹான் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சுமார் 700 இந்திய மாணவர்கள் தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சீன புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வுஹான் நகரை விட்டு பல மாணவர்கள் வெளியேறி விட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்களுக்கு உதவுவதற்காக +86 1861 208 3629 மற்றும் +86 1861 208 3617 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த எண்களுக்கு கடந்த 2 நாட்களில் 600 க்கும் அதிகமான அழைப்புக்கள் வந்துள்ளது. அவசர எண்களின் தேவை அதிகரித்திருப்பதால் 3வது உதவி எண்ணாக +86 1861 095 2903 அறிவிக்கப்பட்டுள்ளது.