புதுடில்லி : கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ், சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளான்.

2012 ம் ஆண்டு டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்.,1 ம் தேதி காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகள் 4 பேரும் மாறி மாறி சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை தாக்கல் செய்து வந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் அனைத்து கோர்ட் மற்றும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்டது.

ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டதால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி என்ற நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் என்பவன், ஜனாதிபதி தனது கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளான். தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் அவன் கேட்டுள்ளான்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, பிப்.,1 ம் தேதி யாராவது தூக்கிடப்படுவார்கள் என்றால் அதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.