புதுடில்லி: டில்லியை உலகத்தர நகரமாக மாற்றுவோம் எனவும், அதை செய்யாவிட்டால் தன் காதை பிடித்து கேளுங்கள் எனவும் டில்லி மக்களிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.
டில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் பிப்.,08ம் தேதி நடக்கிறது. இதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி, பாஜ., உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜ., வேட்பாளர்களை ஆதரித்து பாபர்பூர் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது:
டில்லியை காங்., 15 ஆண்டுகளும், ஆம்ஆத்மி 5 ஆண்டுகளும் ஆட்சி செய்தன. நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் டில்லியை உலகத்தர நகரமாக மாற்றுவோம் என உறுதியளிக்கிறேன். அதுநடக்கவில்லை எனில், நீங்கள் வந்து என் காதை பிடித்து கேளுங்கள்.

நாடு முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் சுத்தமான நீர், சாலை வசதிகள், மின்சார வசதிகள் என ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொன்றில் முதலிடத்தில் உள்ளன. ஆனால் கெஜ்ரிவாலின் அரசு, பொய்யர்களின் பட்டியலில் மட்டுமே முதலிடத்தை பிடித்துள்ளது.
பொய்யான வாக்குறுதிகள் அளிப்பது பற்றி ஆய்வு நடத்தினால் இந்த அரசு முன்னணியில் இருக்கும். தேசத்தை பிளவுப்படுத்த நினைக்கும் சிறு சிறு கும்பலை சேர்ந்தவர்களை ஓட்டுவங்கிக்காக கெஜ்ரிவால், காங்.,சின் ராகுல் ஆகியோர் காப்பாற்ற நினைக்கின்றனர். டில்லியில் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இரு அறை கொண்ட வீடு கட்டித்தரப்படும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.