வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : தேசிய குடிமக்கள் பதிவேடு தயார் செய்வதற்கு பதில் நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் பட்டியலை மத்திய அரசு தயாரிக்கலாம் என பிரதமர் மோடிக்கு காங்., தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் யோசனை தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து விமர்சித்தும், போராட்டங்கள் நடத்தி வந்த காங்., தற்போது தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் எதிர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து டுவிட்டரில், பிரதமர் மோடிக்கு அவர் யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில், நமது பிரதமருக்கு மிகவும் நேர்மையான கோரிக்கை. நாடு முழுவதும் சமூகத்தில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயார் செய்வதற்கு பதில், தேசிய படித்த வேலையில்லாத இந்திய குடிமக்கள் பதிவேட்டை அவர் தயாரிக்கலாம். ஆனால் அவர் அதை செய்ய மாட்டார். அவர்களின் நாட்டை துண்டாக்கும் முயற்சியில் இது வராது, என குறிப்பிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பின்மை, பொருளாதார சரிவு, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை தொடர்பாக மத்திய அரசை காங்., கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த பிரச்னைகளை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் எழுப்பி, பார்லி.,யில் போராட காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில் திக்விஜய் சிங் இப்படி ஒரு டுவீட்டை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.