வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அரிசோனா: அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, எலும்புக்கூட்டிற்கு உடை அணிவித்து தன்னுடன் காரில் அழைத்து சென்றவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அமெரிக்காவின் சில மாகாணங்களில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதனால், 'பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிக்க வேண்டும். ஒருவர் மட்டுமே பயணிப்பதற்கு, காரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்' என, அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இரண்டிற்கும் மேற்பட்டோர் பயணிக்கும் கார்களுக்கு, தனிப் பாதையும் அமைத்துக் கொடுத்துள்ளது. இது, சாதாரணப் பாதையை விட போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும். இந்தப் பாதையில் பயணிக்க விரும்பிய, 62 வயதான முதியவர் ஒருவர், தன்னுடன் பயணிக்க யாரும் இல்லாததால், ஒரு விபரீத முடிவை எடுத்திருக்கிறார்.

அவர் தன்னுடன், ஒரு மனிதனின் எலும்புக் கூட்டை எடுத்துச் சென்றிருக்கிறார். மனித எலும்புக்கூட்டுக்கு உடையும், தொப்பியும் அணிவித்து, உயிருள்ள ஒருவர் போல சித்தரித்து, பயணிகள் இருக்கையில் கயிற்றைக் கட்டி அமர வைத்தபடி, போக்குவரத்து நெரிசல் இல்லாத பாதையில் பயணித்திருக்கிறார்.
இதைக் கண்டறிந்த, அரிசோனா பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்புத் துறையினர், அந்த நபருக்கு, அபராதம் விதித்ததோடு, 'இனி, இவ்வாறான செயல்களில் ஈடுபடக் கூடாது' என, எச்சரித்துள்ளனர். அந்த முதியவர் காரில் கட்டிவைத்திருந்த எலும்புக் கூட்டின் படம், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.