வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'முரசொலி மூலப்பத்திரம் தொடர்பாக, சவால் விட்டவர், அரசியலில் இருந்து விலகுவாரா' என, ஸ்டாலினுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
'டுவிட்டர்' பக்கத்தில், ராமதாஸ் கூறியிருப்பதாவது:
* முரசொலி அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்குகிறதாமே. அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது; அரசியலில் இருந்து விலகத் தயாரா என, சவால் விட்டதெல்லாம், வழக்கம் போல வெற்றுச் சவாடல் தானா?.
* அரசியல் உலகில், எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும், சிறந்த பல்டி, முரசொலி நிலம் மீதான பழியை துடைப்போம் என, வீரவசனம் பேசி விட்டு, இப்போது, நாங்களே வாடகைக்கு தான் இருக்கிறோம் என, சரண் அடைந்தது தான்.

* முரசொலி அலுவலகம், வாடகை கட்டடத்தில் தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா; மூலப் பத்திரத்தை தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம், வாடகை ஒப்பந்தத்தையாவது, முரசொலி நிர்வாகம் வெளியிடுமா; கூடவே சவால் விட்டவர், அரசியலில் இருந்து விலகுவாரா?.
* அகில இந்தியாவில் மட்டுமல்ல, ஈரேழு லோகத்திலும், வாடகை கட்டடத்தில் இருந்து கொண்டு, உரிமையாளர் சார்பில், அவதுாறு வழக்கு தொடர்ந்த, ஒரே கம்பெனி, முரசொலி தான். வெறும் கையால் முழம் போடுவதில், இவர்களை வெல்ல ஆளே இல்லை போலிருக்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.