வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : டில்லி ஜாமியா பல்கலை.,யில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டித்து , போலீஸ் தலைமை அலுவலகம் முன்பு நேற்று முதல் போராட்டம் நடத்தி வந்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டில்லி ஜாமியா மிலியா பல்கலை. யில் கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் சிலர் காயம் அடைந்தனர்.இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஜாமியா மிலியா பல்கலை. யிலிருந்து மகாத்மா காந்தி சமாதி நோக்கி நேற்று(ஜன., 30) மாணவர்கள் பேரணியாக சென்றனர். பல்கலை. அருகே உள்ள ஹோலி பேமிலி மருத்துவமனை பகுதியில் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டித்து மாணவ - மாணவியர் கோஷமிட்டனர். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் கையில் துப்பாக்கியுடன் வந்தார் .இதைப்பார்த்த மாணவர்கள் அவரை பிடித்து தடுத்தனர்.

அப்போது அந்த நபர் 'எடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் சுதந்திரத்தை' என கூறியபடி சுட்டார். இதில் ஓருவர் காயம் அடைந்தார். அதற்குள் அந்த நபரை தடுத்து அவரிடமிருந்து துப்பாக்கியை பறித்த போலீசார் அவரை கைது செய்தனர். காயம் அடைந்தவரை எய்ம்ஸ் மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர்.இதனால் பேரணியில் பரபரப்பு ஏற்பட்டது. 'துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பே அந்த நபரை தடுக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என பேரணியில் சென்ற மாணவர்கள் தெரிவித்தனர்.பேரணியில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பற்றி விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து டில்லியின் ஐடிஓ பகுதியில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகம் முன்பு நேற்று இரவு முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE