தஞ்சை பெரிய கோவிலில் ஆகம விதிப்படி குடமுழுக்கு : ஐகோர்ட் அதிரடி

Updated : ஜன 31, 2020 | Added : ஜன 31, 2020 | கருத்துகள் (75) | |
Advertisement
மதுரை : தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. ஆகம விதிப்படி குடமுழுக்கு நடக்க உள்ளது.தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் எனக்கூறி ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு
தஞ்சாவூர், பெரியகோயில், குடமுழுக்கு, ஐகோர்ட்மதுரைகிளை, உயர்நீதிமன்றமதுரைகிளை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை : தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. ஆகம விதிப்படி குடமுழுக்கு நடக்க உள்ளது.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் எனக்கூறி ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு விசாரித்தது.

தமிழக அறநிலையத்துறை, 'பிப்.,1ல் துவங்கும் யாகசாலை பூஜை முதல் பிப்.,5ல் நடக்கும் குடமுழுக்கு வரை தமிழில் திருமுறை பாராயணம் பாடப்படும். தமிழை விலக்கி வைத்துள்ளதாக கூறுவது சரியல்ல. தமிழ், சமஸ்கிருதத்தில் ஆகம விதிகள்படி குடமுழுக்கு நடத்தப்படும்,' என பதில் மனு செய்தது.

நேற்று (ஜன.,30) அரசுத் தரப்பில், 'இதற்கு முன் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதுபோல் தற்போது நடத்தப்படும். இதற்கு முன் முழுக்க தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை,' என தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ஹிந்து சமய அறநிலையத்துறை ஏற்கனவே அளித்த உறுதிமொழிப்படி, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடத்த வேண்டும். இதனை உறுதி செய்து அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இதனையடுத்து ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்படும் என தெரிகிறது.


latest tamil news
ஆகமம் இல்லாமல் பெரிய கோவில் குடமுழுக்கா?


தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை மையமாகக் கொண்டு எழுந்துள்ள சர்ச்சையில், ஆகமங்களுக்கு எதிராக, பல கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த கருத்துகளின் உண்மைத் தன்மையை பக்தர்கள் கணிக்க வேண்டுமானால், ஆகமம் என்றால் என்ன, கோவில்களின் இயக்கத்தில் அவற்றின் பங்கு என்ன, ஆகமங்களைப் பற்றி தமிழ் இலக்கியத்தில் என்ன குறிப்பிடப்பட்டு உள்ளது ஆகிய கேள்விகளுக்கு, விளக்கம் தேவைப்படுகிறது.ஆகமம் என்றால் என்ன?


இஸ்லாமியர்களின் பள்ளி வாசலுக்குள் தொழுகைக்குச் செல்லும் முன், தலையில் துணியோ, தொப்பியோ இருக்க வேண்டும்; கால், கைகள் சுத்தமாக கழுவப்பட வேண்டும் உள்ளிட்ட விதிகள் உள்ளன. அதே போல், எந்தெந்த நேரத்தில் தொழுகை நடத்தப்பட வேண்டும், எந்த திசையை பார்த்து தொழ வேண்டும், என்ன ஓதப்பட வேண்டும் என்றெல்லாம் விதிகள் உள்ளன. ஹிந்து மதத்திலும், இது போன்ற வழிபாட்டிற்கான விதிகள் உள்ளன. வழிபாட்டு முறைகளை விளக்கி, அதற்கான விதிகளை, வழிகாட்டுதல்களை முன்வைக்கும் நுால்களே, ஆகமங்கள். இவற்றில், வழக்கமாக நான்கு பகுதிகள் இருக்கும்.

அவை:
* ஆன்மிக தத்துவம்
* உடல் மற்றும் மன ஒழுக்க நெறிகள்
* கோவில் வடிவமைப்பு, கட்டுமானம், சமய ஒழுக்கம் ஆகியவற்றுக்கான விதிகள்
* வழிபாடு, பண்டிகை, சடங்கு, சிறப்பு சடங்கு ஆகியவற்றுக்கான விதிகள்

ஹிந்து மதத்தின் ஆறு பெரும் சமயங்களும், தங்கள் கோவில்களை, ஏதேனும் ஒரு ஆகமத்தின் அடிப்படையிலேயே அமைத்துள்ளன. சைவ சமயத்தை பொறுத்தவரை, 28 ஆகமங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களும், இதில் ஏதேனும் ஒன்றின்படி அமைக்கப்பட்டவை. தஞ்சை பெரிய கோவில், மகுடாகமம் என்ற ஆகமப்படி அமைக்கப்பட்டது.ஆகமத்தின் முக்கியத்துவம்


'இங்கு நாத! நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால்
உனை அர்ச்சனை புரிய பொங்குகின்றது என் ஆசை'
மேற்படி வரிகள், 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த செந்தமிழரான, சேக்கிழார் சுவாமிகளின் பெரிய புராண வரிகள். அதன் மூலம், 'ஆகமங்கள், சிவபெருமானால் அருளப்பட்டவை; அந்த ஆகமங்களின் படியே இறைவனை அர்ச்சிப்பது / பூஜிப்பது ஆசை' என்பதை புரிந்து கொள்ளலாம். ஆகமங்கள், சிவபெருமானால் தான் அருளப்பட்டவை என்பதற்கு, திருமுறையில் பல சான்றுகள் உள்ளன.

அவற்றில் சில:
* அரவோலி ஆகமங்கள் - திருமுறை 7.100
* தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம் - திருமுறை 03.023
* வேதமொடு ஆகமம் மெய்யாம் இறைவன் நுால் - திருமுறை 10.8.15
* ஆகும் அனாதி கலை ஆகம வேதம் - திருமுறை 10.8.15
* முன் தலைவர் மொழிந்த ஆகமங்கள் - திருமுறை 12.026

திருமுறை தவிர, பிற தமிழ் நுால்களிலும், பல்லாயிரக்கணக்கான சான்றுகள் உள்ளன. இதை விட, ஆகமத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்ற, வேறென்ன சான்று தேவை!பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்துளான்
துங்க ஆகமம் சொன்ன முறைமையால் - திருமுறை 12.004 என்று, சேக்கிழார் சுவாமிகள் பெரியபுராணத்தில் அருளியுள்ளார்.

இதன் கருத்து: வேதங்களைப் புகலிடமாகக் கொண்ட, எங்கும் நிறைந்த சிவபெருமானை பூஜிக்க, கோவில்களும், அவற்றுக்கான நிபந்தனைகளும், ஆகமங்கள்படி அமைக்கப்பட வேண்டும். மேற்படி தமிழ் இலக்கியம், ஆகமத்தை, 'துங்க' அதாவது, 'உயர்ந்த' என்று குறிப்பிடுகிறது. எனவே ஆகமங்களையும், சிவபெருமானின் இருப்பிடமான மறைகளையும் ஒதுக்கினால், பெருமானும் ஒதுங்கி விடுவார்.

திருமுறையில், இன்னும் பல இடங்களில், வேதாகமபடி தான் சிவபெருமானின் கோவில்களில் பூஜை, அர்ச்சனை முதலிய அனைத்து சடங்குகளும் நடைபெற வேண்டும் என்று குறிப்பிடப் பட்டு உள்ளது.
சில உதாரணங்கள்:
* மறையவன் மறைவழி வழிபடு மறைவனம் அமர்தரு பரமனே - திருமுறை 01.022
* செப்பிய ஆகம விதியால் ஆ முறையில் அர்ச்சனை செய்து அந்நெறியில் ஒழுகுவரால் - திருமுறை 12.06
* எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்ப - திருமுறை 12.016
* உம்பர் நாயகர் பூசனைக்கு அவர்தாம் உரைத்த ஆகமத்து உண்மையே தலை - திருமுறை 12.025

மேலும், வேள்விகளை வேதங்கள் விதித்த வழியே செய்ய வேண்டும் என்பதை, திருவீழிமிழலைப் பதிவில் காணலாம்.புந்தியினால் மறை வழியே புல் பரப்பி நெய் /நெல் சமிதை கையில் கொண்டு - திருமுறை 01.132


கல்வெட்டு

தஞ்சை பெரிய கோவில் ஆகம முறைப்படி கட்டப்பட்டிருப்பதை, 'தஞ்சாவூர்' என்ற கல்வெட்டு ஆராய்ச்சி நுாலில், 'மகுடாகமம் எனும் ஆகம நெறியிலும், மகா சாயிகா பதம் என்ற பத-விந்நியாச அடிப்படையிலும் எழுப்பப்பட்டதே ராஜராஜேச்சரம்' என்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் குறிப்பிடப்பட்டு உள்ள மகா சாயிகா பதம் என்பது, கோவில் கட்டப்படும் முன், அதற்கான மனையை பிரித்து அளவிடும் முறைகளில் ஒன்று.
இந்த முறை, ஆகமத்தில் இருக்கிறது. விஜயநகர ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட, ப்ருஹதீஸ்வர மஹாத்மியம் என்ற நூலில், இது பற்றிய சமஸ்கிருத குறிப்பு உள்ளது. இதுவும், பெரிய கோவிலுக்கும் மகுடாகமத்திற்கும் உள்ள தொடர்பை ஊர்ஜிதம் செய்கிறது. சரபோஜி மன்னரின் காலத்தில் எழுதப்பட்ட பெருவுடையார் உலா எனும் நுாலும்,
'ஆதிசைவர் நீடு மகுடாகமத்தில் ஆட்டத்தில்ஓதிசைவில் செய்பூசை உட்கொண்டு'
என்ற வரிகளின் மூலம், இதை உறுதி செய்கிறது.
மகுடாகமம், 28 சைவ ஆகமங்களில், 17வது ஆகமமாகும். 'மகுடம் மகுடம் தந்த்ரம் அங்க-ப்ரத்யங்கம் ஏவ ச' என்ற மகுடாகம வசனத்தை அறிந்து, சைவ ஆகமங்களையே தன் வடிவாகக் கொண்ட சிவபெருமானின் தலையான, மகுடாகம முறைப்படியே, சிவபெருமானுக்குத் தலைசிறந்த கோவிலை எழுப்ப வேண்டும் - என்பதை, ராஜராஜ சோழன் கருதியிருக்கிறார்.வேற்று மந்திரங்கள்தற்போது சிலர் மிக சாமர்த்தியமாகக் கேட்பதாக எண்ணி, 'ஆகமங்களில் வேற்று மந்திரங்களை சொல்லக்கூடாது என்று எங்கேனும் உள்ளதா?' என்று கேட்கின்றனர்.'தமிழில் மொழிபெயர்த்து குரானை ஓதக்கூடாது என்று சொல்லி இருக்கிறதா?' என்பது போன்ற, முட்டாள்தனமான கேள்வி தான் மேற்படி கேள்வியும். ஆகமங்கள் போன்ற வழிபாட்டு நெறி நுால்களில், என்ன செய்ய வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டு இருக்கும்.

ஆகமங்களில் மந்த்ர உத்தாரபடலம் என்ற பகுதியில், எந்தெந்த மந்த்ரங்களைச் சொல்லி வழிபட வேண்டும் என்று ஒரு பெரும் பட்டியல் இருக்கும். அந்த மந்திரங்களைச் சொல்லி தான் பூஜிக்க வேண்டும் என்பது, அந்த ஆகமத்தின் கட்டளை.வேற்று மந்திரங்கள் வடமொழியில் இருந்தாலும், அவற்றைச் சொல்லக் கூடாது என்பது தான் ஆகமங்களின் கருத்தாகும்.அவ்வாறு சொன்னால் அது மந்திரக் கலப்பு. அப்படிப்பட்ட கலப்பு தவறு என்று,
'சிவ சித்தாந்த தந்த்ரேன ஆரப்தம் கர்ஷணாதிகம்|
ந குர்யாத் அன்யதந்த்ரேண குர்யாத் சேத் கர்த்ரு நாசனம்'
என்ற மேற்கண்ட வரிகள் வாயிலாக ஆகமங்கள் தெரிவிக்கின்றன.ஆதீனங்களின் தீர்மானம்இதுவரை ஆகமங்களின் முக்கியத்துவத்திற்கான சான்றுகளாக நாம் பார்த்தவை, 800 ஆண்டு களுக்கு மேல் பழமை வாய்ந்தவை. அவற்றில் பெரும்பாலான சான்றுகள் தமிழ் மொழியில் உள்ளன. இருப்பினும் தற்போது, உண்மையை மறைத்தும் திரித்தும் பேசும் பொய்யர்களுக்கும், பிற மதத்தவர்களுக்கும், நம் செந்தமிழ் வைதிக சைவ முறை விளங்காது என்பதை,
'கையில் உண்ணும் கையரும் கடுக்கடின் கழுக்களும்
மெய்யைப் போர்க்கும் பொய்யரும் வேத நெறியை அறிகிலார்'
என்ற ஆனைக்கா பதிகம் உணர்த்துகிறது.அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், சைவர்களும் அவ்வாறு இருக்கலாமா?

கடந்த, 2002 அக்டோபர், 21 மற்றும் 22ம் தேதி, தருமை ஆதீனத்தின் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனமும் தமிழ்நாடு அர்ச்சகர்களின் ஆகம வல்லுனர் குழுவும் இணைந்து நடத்திய கருத்தரங்கில், 'ஆகம முறைப்படி அமைந்த திருக்கோவில்களில் ஆகம முறைப் படியே பூஜித்தல் வேண்டும்' என்பது தான், முதல் தீர்மானமாக இருந்தது. இதில், 15 சைவ ஆதீன குருமகா சன்னிதானங்கள் கையொப்பமிட்டு உள்ளனர். அதுவும், கருத்தரங்கில் பங்கேற்ற தமிழ் அறிஞர்கள் மற்றும் சிவாச்சாரிய பெருமக்கள் முன்னிலையில்!

இந்த நிலையில், மகுடாகம முறைப்படி எழுப்பப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில், வேதாகம முறையை புறந்தள்ளிவிட்டு, அடிப்படை ஆதாரமற்ற புதிய முறையில் குடமுழுக்கு நடத்துவது சரிதானா என்று, கையொப்பமிட்ட அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். இது, சைவ சமயத்திற்கு செய்யும் பெரும் துரோகம் அல்லவா!

-முனைவர் ஸே.அருணஸுந்தர சிவாச்சார்யர்

-மெட்ராஸ் சமஸ்கிருத கல்லுாரி ஆசிரியர்


பெயரும், ஆகமமும்!


தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில், அங்கு தொண்டு செய்தவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

அவற்றில் சில:சதாசிவன், ஞானசிவன், மனோன்மசிவன், பூர்வசிவன், தர்மசிவன், கவசசிவன், சத்யசிவன், வாமசிவன், நேத்ரசிவன், ஓங்காரசிவன்.ஏன் எல்லா பெயர்களும், 'சிவன்' என்றே முடிவுறுகின்றன என்ற கேள்விக்கு, வேதசிவாகமங்களை ஒழித்து, உலகின் வேறு எந்த நுால்களிலிருந்தும் பதிலை பெற முடியாது.இறைவனுக்கு பணிவிடை செய்ய வேண்டுமென்றால், சைவ ஆகமங்களின்படி தீக்ஷை பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த தீக்ஷை சடங்கின் போது, வேள்விச்சாலையின் மையத்தில் மண்டலம் அமைக்கப்பட்டு, அதில் ஐந்து ஆவரணங்களோடு பரமேச்வரன் பூஜிக்கப்படுகிறார். தீக்ஷை பெற்றுக் கொள்ளும் சிஷ்யனாகிய சிவனடியார், கண் மூடிய நிலையில், அந்த மண்டலத்தில் மலரிடுவார்.

அம்மலரானது மண்டலத்தில் உள்ள எந்த தெய்வத்தின் மீது விழுகிறதோ, அதற்கு தகுந்தாற்போல, சிவனடியாருக்கு தீக்ஷை நாமம் சூட்டப்படும்.மையத்தில் சிவபெருமான் மீது மலர் விழுந்தால் சதாசிவன் என்றும், ராஜராஜ என்ற பெயருடைய, அருண்மொழித் தேவனாகிய, குபேரனின் மீது மலர் விழுந்தால், ராஜராஜ தேவன் என்றும், ஞானம், தர்மம் என்ற சிங்கங்களின் மேல் விழுந்தால், ஞானசிவன், தர்மசிவன் என்றும், தீக்ஷை நாமங்கள் சூட்டப்படும். க்ஷத்ரியர்களுக்கு தீக்ஷை செய்யும்போது, 'தேவ' என்று முடிய வேண்டும் என்பது, ஆகம விதி. இப்படி சூட்டப்பட்ட பெயர்களே, கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

இவற்றையெல்லாம் மூலசிவாகம நுால்களிலிருந்தும், 14ம் நுாற்றாண்டை சார்ந்த, சிவபூஜாஸ்தவம் எனும் நுாலின் உரையிலிருந்தும், அகோர சிவாச்சார்ய பத்ததியின், 'ப்ரபா' என்ற உரையில் இருந்தும் அறியலாம். எனவே, தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கும், வேத சிவாகமங்களுக்கும் உள்ள தொடர்பை, யாரும், என்றும் மறுக்க முடியாது.


சட்டத்தின் நிலைப்பாடுதஞ்சை பெரியகோவிலில் தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கோரும் சிலர், அதற்காக முன் வைக்கும் வாதங்கள்:
* பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜன் தமிழ் முறைப்படித் தான் கோவிலை கட்டினார்
* முதல் குடமுழுக்கும், அதன் பின் பல நுாற்றாண்டுகளாக தமிழ் முறைப்படி தான் அர்ச்சனைகள், பூஜைகள் முதலியன நடைபெற்று வந்தன
* பெரிய கோவில் கல்வெட்டுகள், தமிழ் முறைப்படி பூஜைகள் நடைபெற்று வந்தமையை ஆவணப்படுத்தியுள்ளன.

இவை மூன்றுமே பொய்யான வாதங்கள். அவற்றிற்கான எந்த ஆதாரத்தையும், இவர்களால் காட்ட முடியவில்லை. இவர்களிடம் எந்தப் புராதன தமிழ் மந்திரங்களும், தமிழ் ஆகமங்களும் இல்லை.இவர்களாக தற்போது இட்டுக் கட்டிய வசனங்களும், அவர்களாக சுயமாக தொகுத்த பாடல்களுமே உள்ளன.இவ்வாறு செய்யலாம் என, ஒரே ஒரு மகான் கூட அனுமதி கொடுக்கவில்லை. இவையெல்லாம் பக்தர்களை ஏமாற்றும் செயல்கள்.மேலும், தமிழ்நாடு கோவில் நுழைவுச் சட்டம் விதிகள், 8 மற்றும் 9ன் படி, 1947ம் ஆண்டு கோவில்களில் என்ன பூஜை முறைகள் இருந்தனவோ, அவற்றை மாற்றி அமைக்கவோ, கூட்டவோ, குறைக்கவோ, புதிதாக ஒன்றைச் சேர்க்கவோ இயலாது.

கடந்த, 1991ம் ஆண்டு, மத்திய அரசு கொண்டு வந்த வழிபாட்டுத் தலங்கள் சட்டம், பிரிவுகள் 3 மற்றும் 4ன் படி, 15.08.1947 அன்று ஒரு வழிபாட்டுத் தலத்தில் எந்த சம்பிரதாயம் பின்பற்றி வரப்பட்டதோ அதை மாற்ற, நீதிமன்றம் உள்ளிட்ட எவருக்கும், அதிகாரம் கிடையாது. அவ்வாறு மாற்றினால், பிரிவு 6ன் கீழ் மூன்று ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

சமீபத்தில் வந்த உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி வழக்கு அமர்வு, இதை விரிவாக தெளிவுபடுத்தி உள்ளது. புதிது புதிதாக மத விஷயங்களிலும், வழிபாட்டு முறைகளிலும் பிரச்னைகளை உருவாக்கி நீதிமன்றம் செல்வதை, இந்த சட்டம் உறுதியாக தடை செய்கிறது.ஆகவே, தமிழ்நாடு கோவில் நுழைவு சட்டப்படியும், மத்திய வழிபாட்டுத் தலங்கள் சட்டப்படியும், அந்த சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் ஆணித்தரமான தீர்ப்பின் படியும்; ஆதிசைவ தமிழர்களின் பழைய வழிபாட்டு முறையை அழிப்பதையே குறியாக கொண்டிருக்கும், நாத்திகர்களும், முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், பிறரும் சேர்ந்து உருவாக்கியுள்ள (மேலே நோட்டீசை பார்க்கவும்) தமிழின் வேடம் பூண்ட, 'புதிய முறை குடமுழுக்கு' நிராகரிக்கத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
04-பிப்-202015:30:58 IST Report Abuse
narayanan iyer ஆகம விதிகளின்படி குடமுழுக்கு செய்ய உத்தரவிட்ட நீதிமன்றத்திற்கு ஆயிரம் வாழ்த்துக்கள் . முதலில் இந்த தமிழை சரியாக மெல்லினம் இடையினம் வல்லினம் மாறாமல் உச்சரிக்க சொல்லுங்கள் . அதுமட்டுமல்லாது திருக்குறளுக்கு விளக்கம் சொல்லச்சொல்லுங்கள் பார்க்கலாம் . தேவாரம் திருவாசகம் எத்தனை தமிழ்பண்பாளர்களுக்கு தெரியும்? இன்றுவரை வளர்ந்த தமிழுக்கு வேற்று மொழியினர்தான் காரணம் .
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
04-பிப்-202015:26:15 IST Report Abuse
narayanan iyer ஆகம விதிகளின்படி குடமுழுக்கு செய்ய உத்தரவிட்ட நீதிமன்றத்திற்கு ஆயிரம் வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
01-பிப்-202000:43:10 IST Report Abuse
Aarkay நாத்திகர்களெல்லாம் எதற்கு இதில் ஆர்வம் காட்டவேண்டும்? இதுநாள்வரை எப்படி நடந்ததோ, அப்படியே நடக்கட்டும் மசூதியிலும் இனி அராபிக் எதற்கு? தமிழிலேயே வழிபடட்டுமே நான்கு திருக்குறள் கூட சொல்லத் தெரியாதவறெல்லாம், தமிழ் மேல் திடீர் பாசம் காண்பிக்கிறார்கள் இவர்கள் நோக்கமெல்லாம், ஏதாவது குழப்பம் விளைவித்துக்கொண்டே இருக்கவேண்டும். நீங்கள் யார் எங்கள் சார்பாக கருது சொல்ல? An idle mind is an workshop of devils Engage yourselves in some productive activities. Don't disturb our lives
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X