தஞ்சை பெரிய கோவிலில், வரும், ௫ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. 23 ஆண்டுகளாக நடத்தப்படாமல், இப்போது தான் நடத்த, நாள் குறித்துள்ளனர். 'இத்தனை ஆண்டுகளாக ஏன் நடத்தவில்லை...' என்ற கேள்வியை, இங்கு யாரும் கேட்கவில்லை.
மாறாக, கும்பாபிஷேகத்தை, தமிழில் தான் நடத்த வேண்டும் என்கின்றனர்; நீதிமன்றத்திற்கு இந்த விவகாரம் போனதை அடுத்து, 'தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் வழக்கம் போல நடத்தப்படும்' என, தமிழக அரசு தெரிவித்ததை, உயர்நீதிமன்ற மதுரை கிளையும் ஏற்றுள்ளது.இறைவனை வழிபட, இறை சடங்குகளை செய்ய என, ஹிந்து மதத்தில் ஓர் ஒழுங்கு உள்ளது. அதை, ஆகமம் அல்லது வழிபாட்டுச் சடங்குகள் என்கிறோம். என்னென்ன வழிபாடுகளை, எப்படி செய்ய வேண்டும்; எந்த நாளில் செய்ய வேண்டும் என்ற குறிப்புகள், அதில் உள்ளன.
இப்படித் தான், பல ஆயிரம் ஆண்டு காலமாக, ஹிந்து கோவில்கள் கட்டப் பட்டுள்ளன; கும்பாபிஷேகங்கள் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்படு கின்றன; பூஜைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.எங்களைப் பொறுத்தவரை, கடவுளை வழிபடவோ, கடவுளுக்குரிய பூஜைகள் செய்யவோ, மொழி பேதம் இல்லை. தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளுமே, உயர் தனிச் செம்மொழிகள் தான். ஆகவே, இவற்றில் எந்த மொழியில் வழிபாடு செய்தாலும், குடமுழுக்கு செய்தாலும், அது இறைவனை நிச்சயம் சென்றடையும்.
இன்னும் சொல்லப் போனால், தமிழ் மொழியிலோ, சமஸ்கிருதத்திலோ குடமுழுக்கு முறைகள் இல்லை. ஆகமம் என்ற, 'கிரந்த லிபி'யில் தான், கும்பாபிஷேக மந்திரங்கள் உள்ளன. எனவே, மொழியை வைத்து பிரச்னை செய்வதை தவிர்க்க வேண்டும்.ஹிந்து கோவில் கோபுரங்களைப் பழிப்பதும், கடவுளைத் துவேஷம் செய்வதும், ஹிந்து சமய கோவில் வழிபாட்டு முறைகளில் தலையிடுவதும், ஆகம விதிகளின்படி நடைபெறும் பூஜைகளில், மரபை மீறி மொழி மாறுதல் செய்யச் சொல்வதும், ஹிந்துக்களுக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது.
கும்பாபிஷேகம், பூஜை முறை என்பது வேறு; வழிபாடு என்பது வேறு என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வழிபடும் இறைவனுக்கு, தமிழும்,
ஆகமமும் இரண்டு கண்கள்.ஆகமம், தம்மை முறைப்படி பூஜிக்கவும், விதிப்படி கிரியைகள் மேற்கொள்ளவும் இறைவன் அருளிச் செய்துள்ளார்; வழிபடுவதற்காக அடியார்களைத்
தோற்றுவித்து, திருமுறைகளை அருளியுள்ளார்.ஆனால், தமிழகத்தில் மட்டுமே, தமிழால் தான் எல்லா கைங்கர்யங்களும் செய்ய வேண்டுமென சிலர் வாதிடுகின்றனர். மற்ற மாநிலங்களில், அவரவர் தாய்மொழி வேறாக இருப்பினும், பூஜை மொழியாக, சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.தமிழகத்தில் பிறந்து, தமிழை, தாய் மொழியாகக் கொண்ட நாங்களும் தமிழன்னையின் புதல்வர்கள் தான்; தமிழுக்கு விரோதிகள் அல்ல. ஆனால், 'தமிழை காட்டுமிராண்டி மொழி' எனக் கடுமையாக விமர்சனம் செய்தவர்களும், தமிழுக்கு ஆதரவாக இப்போது குரல் எழுப்பும் சிலரும், தமிழர்கள் கிடையாது.
கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில், 'எந்த வயது பெண்களும், சபரிமலை சென்று வழிபடலாம்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு, பெரும்பான்மை மக்களின் இறை நம்பிக்கையை காயப்படுத்தியது.
எனினும், காலம் காலமாக பின்பற்றப்பட்டு வந்த மரபை, துாக்கி எறிய அந்த மாநில மக்கள் முன்வரவில்லை. நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும், அம்மாநில பெண்கள், சபரிமலை சென்று வழிபடவில்லை. எனவே, பல்லாண்டு காலமாக பின்பற்றப்படும், மக்களின் மத, இறை நம்பிக்கையை யாரும் மாற்ற முடியாது.அது போலவே, ஆகம சாஸ்திரங்கள், திருமுறை தோத்திரங்களில் காலம் காலமாக உள்ளதை மாற்ற, மொழிப் பிரச்னையை சிலர் எழுப்புகின்றனர். 'தஞ்சை பெரிய கோவிலில், தமிழில் குடமுழுக்கு செய்யப்படா விட்டால், தமிழ், இரண்டாம் மொழி ஆகி விடும்' என, தமிழ் போர்வையாளர்கள், பிரிவினையை துாண்டி
விடுகின்றனர்.
தமிழ் மொழி ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் போன்றோர், அமைதியாக இருக்க, 'தமிழ்' என்ற அழகிய வார்த்தையை சரியாகக் கூட உச்சரிக்க தெரியாத பலர், தமிழின் காவலர்கள் போல தங்களை நினைத்து, சாதாரண விவகாரங்களைக் கூட, விஸ்வரூபம் ஆக்குகின்றனர்.தரணிக்கே தமிழைத் தாரக மந்திரமாக்கி, உலக கோபுரத்தின் மீது ஏற்றி, ஒளி வீசச் செய்தவர், திருவள்ளுவர். அவரின் சாகாவரம் பெற்ற திருக்குறளை, அது எழுதப்பட்டுள்ள தமிழ் மொழியை, நாங்களும் எங்கள் உயிர் மூச்சாக நேசிக்கிறோம்.சமீபத்தில், திருவள்ளுவரையும் விட்டு வைக்காமல், அரசியல் சதுரங்கத்துக்குள் இழுத்து வந்து விட்டனர், சிலர். அவரின் உடையை, காவி நிறத்தில் மாற்றியதற்கு ஏகப்பட்ட எதிர்ப்பு. 'நாடு, மதம், மொழி, இனத்தை கடந்து, உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வேதம் தந்தவருக்கு, காவிச் சாயம் பூசாதீர்கள்' என கொதித்து எழுந்தனர். சரி தான், ஒப்புக் கொள்கிறோம்...
ஆனால், உங்களுக்கு வந்தால் ரத்தம்; பிறருக்கு வந்தால் தக்காளி சட்னியா...ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியாக, எல்லாவற்றையும் கடந்து, எல்லாமுமாகி, எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் எங்கள் பரம்பொருள், மொழி மதங்களைக் கடந்தவர். பன்னெடுங்காலமாக, அவருக்கு ஆகம விதிப்படி செய்யப்பட்டு வரும் கும்பாபிஷேகத்தை மட்டும், வழக்கத்துக்கு மாறாக, மரபை மீறி, தமிழ் மொழியில் மட்டும் செய்யச் சொல்வது, எந்த விதத்தில் நியாயம்?
'திருவள்ளுவர், ஹிந்து ஞானி தான்' என, காலம் காலமாக கருதி வந்ததை, சில போர்வையாளர்கள் மாற்றி, 'அவர் எந்த மதத்தையும் சாராதவர்' எனச் சொல்லி, ஹிந்து மதத்திற்கும்,
அவருக்கும் சம்பந்தம் இல்லை என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.
திருவள்ளுவர் நிறத்தை மாற்ற விரும்பாத நீங்கள், தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை மட்டும் எப்படி, மாற்ற நினைக்கலாம்?'மாற்றம் என்பது தேவை தான். அது தான் வளர்ச்சி. அந்த மாற்றம், தஞ்சை கோவில் குடமுழுக்கில் தமிழ் முழங்குவதாக இருக்கட்டும்' என, சில கவிஞர்கள் துாண்டி விடுகின்றனர்.சங்க கால புலவர்கள் கூட, தமிழில் குடமுழுக்கு செய்யலாம் எனச் சொல்லவில்லை. சமயக் குரவர்கள் நால்வரும், தேவாரம் மற்றும் திருவாசகத்தை, தமிழில் தான் பாடியுள்ளனர். அவை, உலக மக்களின் நல்வாழ்வுக்காக பாடப்பட்ட வழிபாட்டு முறைகள் மட்டுமே.அந்த பாடல்களை, கும்பாபிஷேகத்திற்காக அவர்கள் அருளிச் செய்யவில்லை. அந்த அருளாளர்கள் நினைத்திருந்தால், அவர்கள் காலத்திலேயே, தமிழில் பாடி, கும்பாபிஷேகங்களை நிகழ்த்தியிருக்கலாம். 'ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க...' என்று தான், மாணிக்கவாசகரும் பாடியிருக்கிறார்.
இறைவன் ஈடேற்ற வேண்டிய ஆன்மாவை, ஈடேற்றும் புனிதமான பணியை, தமிழ் மொழி தான் நிறைவேற்றுகிறது. ஆனால், கோவில் கட்டுதல், கும்பாபிஷேகம் தொடர்பாக, 28 விதிகள், ஆகமத்தில் தான் உள்ளன. சிவலிங்க அமைப்புக்கு ஏற்ப, பொருத்தமான எந்திரங்களை அமைக்க வேண்டும்.இறைவனுடைய ஜீவனை ஒருமுகப்படுத்தி, கும்பத்தில் இருத்தி, திரும்பவும் அந்த ஜீவனை, பிம்பத்தில் சேர்ப்பித்து, மஹா அபிஷேகம் செய்விப்பது தான் கும்பாபிஷேகம். இந்த தத்துவம், சிவ ஆகமத்தில் மட்டுமே காணப்படுகிறது.
வழிபாடு என்பது, கர்ப்பக்கிரகத்தின் வெளியிலிருந்து, மக்கள், தங்கள் நலனுக்காகவும், பக்தியையும், அன்பையும், வெளிப்படுத்தும் விதமாக, இறைவனை தமிழ் மறைகளால் பாராயணம் செய்வதாகும்.சுருக்கமாகச் சொன்னால், சிவ ஆகமம், சப்த லோக சஞ்சாரியான இறைவனை நிலை நிறுத்துவதற்கானது.
தேவாரமும், திருவாசகமும், ரூபத்தில் ஆவாகனம் செய்யப்பட்ட இறைவனை வழிபட்டு, நலம் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட விதிமுறையாகும்; இரண்டும் சேர்ந்தால் தான், அங்கே, தெய்வ அருள் நிலவும்.மொழிகளில் எந்த பேதமும், பக்தர்களுக்கு இல்லை. கோவில்களில், தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய விரும்புவோருக்கு, தமிழிலேயே சிவாச்சாரியார்கள் செய்து வைக்க வேண்டும் என்பது நியதி. ஆனால், 99 சதவீதம் பேர், தமிழில் அர்ச்சனை செய்ய கேட்பதில்லை; சமஸ்கிருத மொழியிலேயே, செய்ய கேட்கின்றனர்.'கடவுள் என்பது மக்களின் நம்பிக்கை; மொழி என்பது மக்களின் உரிமை. எனவே, தாய்மொழி என்ற உரிமைக்காக தமிழர்கள் அணி சேர்ந்துள்ளனர்' எனவும் கூறுகின்றனர். 'யார் அந்த தமிழர்கள்...' என பார்த்தால், அந்த களத்தில் நிற்போர் அனைவரும் கடவுள் மறுப்பாளர்கள் மட்டுமே!
'அவனன்றி ஓர் அணுவும் அசையாது; சிவனன்றி எங்கள் சித்தம் தெளியாது' என, இறைவன் பால் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட யாரும், 'கும்பாபிஷேகத்தை இந்த மொழியில் தான் நடத்த வேண்டும்' என, கட்டளையிடவில்லை. விளம்பரம் தேட நினைக்கும் சில அரசியல் தலைவர்களும், தமிழ் போர்வையாளர்களும் தான், பிரச்னை ஆக்குகின்றனர்.
'உச்சரிக்கும் மந்திரங்கள் கடவுளுக்கு புரிகிறதோ இல்லையோ, மக்களுக்குப் புரிய வேண்டும்' என்கின்றனர். 'கடவுளே இல்லை' என, இல்லாத பகுத்தறிவை பேசும் இவர்களுக்கு, ஏன் இந்த வீண் கவலை?'கடவுளுக்கும், தமிழர்களுக்கும் இடையே, மொழி பெயர்ப்பாளர்கள் வேண்டாம்' என்பது இவர்களின் மற்றொரு வாதம். அதையே நாங்கள், 'கடவுளுக்கும், பக்தர்களுக்கும் இடையே, கடவுள் மறுப்பாளர்கள் வேண்டாம்' என்கிறோம்.
'அர்த்தம் புரிந்தாலும் சரி, புரியாவிட்டாலும் சரி. ஆகம விதிப்படி தான் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். சன்னிதானத்தில் ஒலிக்கும் அந்த மந்திரங்கள் ஊனையும், உயிரையும் உருக்குவதாக இருக்கிறது. மெய் சிலிர்க்க வைக்கும் அந்த பரமானந்த உணர்வு, எங்கள் மனதுக்கு பேரானந்தம் தருகிறது' என்கின்றனர் பக்த பெருமக்கள்.
'திருவாசகத்துக்கு உருகார், ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்பதை, அடியவர்கள் பாடும் தமிழ் இசை பண்களைக் கேட்டு, உணர்ந்து, இறைவனோடு சேர்ந்து நாங்களும் மெய் மறந்து போகிறோம்.'இசைக்கு மொழி தேவையில்லை; அதை ரசிக்கும் மனம் இருந்தால் போதும்' என்பது போலவே, கடவுளை வழிபடுவதற்கு, எந்த மொழி என்பது, எங்களுக்கு முக்கியமில்லை; இறை நம்பிக்கையும், பக்தியும் தான் வேண்டும்.ஏதோ பிரச்னை என்று வக்கீலிடமும், உடல் நலக் குறைவு என்று மருத்துவரிடமும் செல்கிறோம். நம் குறைகளை அவர்களிடம் எடுத்துரைத்து, நிவர்த்தி செய்யச் சொல்கிறோம். அவர்கள், சட்ட நுணுக்கங்களை அலசி ஆராய்ந்து, தேவையான மருத்துவ முறைகளை தேர்ந்தெடுத்து, சிகிச்சை அளித்து, நம் பிரச்னைகளை தீர்க்க முயற்சிப்பர்.
அவர்கள், தாங்கள் செய்யப் போகும் வழிமுறைகளை, தமிழிலேயே எடுத்துச் சொன்னாலும், அது நமக்கு சரி வரப் புரிவதில்லை. 'பிரச்னை தீர்ந்தால் போதும்' என்று தான் நினைப்போம். தீர்ந்து விடும் என்ற நம் நம்பிக்கை ஒன்றே, அங்கு பிரதானம்.
அதுபோலத் தான், கடவுளிடம் ஆழ்ந்த பக்தியும், அதீத நம்பிக்கையும் கொண்ட பக்தர்கள், 'கோவிலுக்குச் சென்றவுடன், சுக, துக்கங்களை கடவுளிடம் பகிர்ந்து கொள்கிறோம். அங்கு, மனதை லேசாக்கும் மந்திர உச்சாடனங்களில், புத்தியும், மனமும், துாய்மை அடைவதை உணர்கிறோம்' என்கின்றனர்,'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்று சொல்லும் போது, பெரும்பான்மை பக்தர்களின் விருப்பம் தானே, பரமேஸ்வரனின் விருப்பமாகவும் இருக்க முடியும்! தி.வே. சந்திரசேகர சிவாச்சாரியார், அர்ச்சகர்.
தொடர்புக்கு: இ - மெயில்: chandruvedadri64@gmail.com .