மீசைக்கார நண்பா...!

Added : பிப் 02, 2020
Share
Advertisement
மீசைக்கார நண்பா...!

'ஏம்ப்பா... அந்த மீசைக்காரரை கூப்பிடுப்பா. ஆளை பார்த்தாலே 'டெரர்ரா' இருக்காப்ல. மிரட்டல் காட்சிக்கு அவருதான் சரியான ஆளு' என மதுரையைச் சுற்றி படம் எடுக்கும் சினிமா இயக்குனர்களின் தேடுதல் நடிகராக மாறி இருக்கிறார் அப்துல் ஜப்பார். 60 வயதான இவர், மதுரையை சேர்ந்தவர். சினிமாவில் தனக்கென்று அடையாளம் வேண்டும் என்பதற்காக இவர் போராடியது 20 ஆண்டுகள்.

தான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறார்...
''சின்ன வயசுல டூரிங் டாக்கீஸில் மண் தரையில் உட்கார்ந்து படம் பார்க்கும்போது, நாமெல்லாம் இந்த திரையில வருவோமா என நினைத்து ஆதங்கப்பட்டதுண்டு. பிறகு இது நமக்கெல்லாம் 'செட்' ஆகாது என மனதை தேற்றிக்கொண்டு சித்த மருத்துவம் பார்க்க ஆரம்பித்தேன். ஆனாலும் மனசு ஓரத்தில் சினிமா ஆசை இருந்தது. பிள்ளைகளும் பெரியவங்களாகி 'செட்டில்' ஆகிவிட்டதால், தைரியமாக சினிமா சான்ஸ் தேட ஆரம்பிக்கலாம் என களத்தில் குதித்தேன்.

நமக்கு ஏதாச்சும் அடையாளம் வேணுமே என யோசித்தபோது கிடா மீசை வச்சு சான்ஸ் தேடலாம் என முடிவு செய்தேன். நான் நினைச்ச மாதிரி சின்ன சின்ன கேரக்டர் கிடைச்சது. பெரும்பாலான படங்களில் எனக்கு அமைஞ்சதெல்லாம் கிராம பஞ்சாயத்து காட்சியில் பேசுவது, அரசியல்வாதியாக வருவது போன்ற கேரக்டர்தான் அதிகமாக தேடி வருது. டயலாக் நிச்சயம் இருக்கும். கிடாரி படத்தில் அரசியல்வாதியான என்னை கொலை செய்துவிடுவார்கள். அதுதான் கதைக்கே திருப்புமுனையாக இருக்கும்.

இப்படி கதையோடு பயணிக்கிற வகையில் ரஜினிமுருகன், சிங்கம் 2, பொதுவாக என் மனசு தங்கம், பாண்டியநாடு, வீரம் என பல படங்களில் கேரக்டர் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.பல படங்களில் நான் நடித்த காட்சிகளை 'எடிட்டிங்'கில் 'கட்' செய்து விடுகிறார்கள். இது தெரியாமல் தியேட்டருக்கு சென்று பார்த்து பலமுறை ஏமாந்தது உண்டு. சமீபத்தில்கூட பேராசிரியர் மு.ராமசாமி நடித்த 'கேடி என்ற கருப்பு' படத்தில் எனக்கு வழக்கறிஞர் கேரக்டர்.

மதுரையில் நண்பர்களுடன் படம் பார்க்க தியேட்டருக்கு போனேன். படம் முடியும் வரை நான் நடித்த காட்சி வரவில்லை. பிறகுதான் தெரிந்தது வழக்கம் போல் 'எடிட்டிங்'கில் நம்மை துாக்கிவிட்டார்கள் என்று. சினிமாவில் இது சகஜம். ஆனால் தொடர்ந்து வாய்ப்பு வருகிறதா என்பதுதான் முக்கியம்.

இப்போது விஜய்சேதுபதியின் ரணசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன். ஜெயம் ரவியின் பூமி படத்தில் ஒரு டான்சும் ஆடி இருக்கிறேன். மதுரையை சுற்றி படம் எடுத்தால் நிச்சயம் எனக்கு அதில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறது என்பது என் உழைப்புக்கேற்ற அங்கீகாரமாக கருதுகிறேன்'' என நெகிழ்கிறார் அப்துல் ஜப்பார்.இவரை பாராட்ட 98421 68829

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X