ஒன்றரை லட்சம் தலைப்பில் ஒப்பற்ற நூல்கள் : 35 ஆண்டுகளாய் புத்தகத் திருவிழா| Dinamalar

ஒன்றரை லட்சம் தலைப்பில் ஒப்பற்ற நூல்கள் : 35 ஆண்டுகளாய் புத்தகத் திருவிழா

Added : பிப் 02, 2020
Share
அள்ள, அள்ள குறையாது அறிவை அள்ளித் தரும் அட்சய பாத்திரம் புத்தகம். உலகம் கற்க சிறந்த ஊடகமும் இதுவே. புத்தகத்தை நண்பனாக்கியோருக்கு தாழ்வு இல்லை. மனிதனை பக்குவப்படுத்துவதிலும், இருள் படர்ந்த வாழ்க்கை பாதையில் வெளிச்சம் காட்டுவதிலும் புத்தகங்களுக்கு இணையான இன்னொன்றை காண்பது அரிது. கற்றலை உயர்வாய் கருதிய தமிழ்ச்சமூகத்தில் வாசிப்பை நேசிப்போர் சொற்பமாகி வரும்
ஒன்றரை லட்சம் தலைப்பில் ஒப்பற்ற நூல்கள் : 35 ஆண்டுகளாய் புத்தகத் திருவிழா

அள்ள, அள்ள குறையாது அறிவை அள்ளித் தரும் அட்சய பாத்திரம் புத்தகம். உலகம் கற்க சிறந்த ஊடகமும் இதுவே. புத்தகத்தை நண்பனாக்கியோருக்கு தாழ்வு இல்லை. மனிதனை பக்குவப்படுத்துவதிலும், இருள் படர்ந்த வாழ்க்கை பாதையில் வெளிச்சம் காட்டுவதிலும் புத்தகங்களுக்கு இணையான இன்னொன்றை காண்பது அரிது. கற்றலை உயர்வாய் கருதிய தமிழ்ச்சமூகத்தில் வாசிப்பை நேசிப்போர் சொற்பமாகி வரும் ஆச்சரியம் நிகழ்கிறது. படிக்கும் பழக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் புத்தகத் திருவிழாக்களின் பங்கு முக்கியமானது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் இப்பணியை செவ்வனே செய்கிறது அரை நுாற்றாண்டு பாரம்பரியம் கொண்ட சர்வோதயா இலக்கியப் பண்ணை புத்தக விற்பனை நிலையம். படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக 35 ஆண்டுகளாய் புத்தகத் திருவிழாவை நடத்துகிறது.

இந்தாண்டு திருவிழா ஜன.27ல் துவங்கியது. பிப்.10 வரை நடக்கிறது. 15 நாட்களும் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்கப்படுகின்றன. தமிழ், ஆங்கில நாவல்கள், இலக்கியங்கள், அரசியல், அறிவியல், ஆன்மிகம், வழிகாட்டி புத்தகங்கள் 1.5 லட்சம் தலைப்புகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

டி.என்.பி.எஸ்.சி., நீட், சிவில் போட்டித் தேர்வுகளுக்கென பிரத்யேக அரங்கம் உள்ளது. இங்கு 25 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. அனைத்து வகை அகராதிகளும் கிடைக்கின்றன. அனைத்து புத்தகங்களும் கிடைப்பதால் இத்திருவிழா வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனையாகின்றன.

சர்வோதயா இலக்கியப் பண்ணை செயலாளர் புருஷோத்தமன் கூறியதாவது: ஆண்டுதோறும் நாங்கள் நடத்தும் புத்தகத் திருவிழாவிற்கென்று தனி வாசகர் பட்டாளம் உள்ளது. இத்திருவிழாவின் போது வாங்கும் புத்தகங்கள் அனைத்திற்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. 25 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட அரிய பல புத்தகங்களை மீண்டும் அச்சிட்டுள்ளோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சத்திய சோதனை புத்தகத்தை எழுத்தாளர் தர்மராஜ் 'கவி வானில் காந்தியடிகள்' என்ற தலைப்பில் கவிதையாக வடித்துள்ளார். இதை எங்கள் பதிப்பு வெளியிட்டுள்ளது. இப்புத்தகமும் அதிகம் விற்பனையாகும் பட்டியலில் உள்ளது. சத்திய சோதனை, அர்த்தமுள்ள இந்துமதம், அக்னி சிறகுகள் போன்ற புத்தகங்களுக்கு எப்போதும் போல் மவுசு நீடிக்கிறது. சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது வென்ற சோ.தர்மனின் 'சூல்' நாவலுக்கும் வாசகர் வட்டம் விரிந்துள்ளது' என்றார்.
மேலும் அறிய 98946 42007ல் பேசலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X