தன் கணவர் பற்றி, கேரள முதல்வர் பினராயி விஜயன் மனைவி கமலா: எனக்கு பூர்வீகம், கோழிக்கோடு மாவட்டம், வடகரையில் உள்ள ஓஞ்சியம் கிராமம். என் தந்தை பெயர், ஆண்டி மாஸ்டர்; பள்ளி தலைமை ஆசிரியர்; கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். கல்லுாரியில் நான் படித்து கொண்டிருந்த போது, கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய, கேரள மாணவர்கள் கூட்டமைப்பில் இருந்தேன்.
'எமர்ஜென்சி' எனப்படும், அவசர நிலை காலத்தில், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் விஜயன். வெளியே வந்ததும், 'கம்யூனிச பின்னணியைச் சேர்ந்த பெண்ணை தான் மணம் முடிப்பேன்' என, கூறியுள்ளார். இதை அறிந்த என் தந்தை, விஜயனை சந்தித்து, 'என் மகளை, நீங்கள் மணக்கலாம்... எனினும், அவளின் சம்மதத்தை பொறுத்து தான்' என கூறியுள்ளார். பின், என்னிடம் சம்மதம் கேட்டனர். இருவரும் ஒரு நாள் சந்தித்தோம். என்னை அவர் பார்த்தார்; அவரை நான் பார்த்தேன். 'சரி, நான் கிளம்பட்டுமா?' என்றார். நானும், 'சரி' என்றேன். இவ்வளவு தான், இருவரும் பேசிக் கொண்டது. எங்களின் திருமணம், 1978ல் நடந்தது. கேரள முன்னாள் முதல்வர், இ.கே.நாயனார், எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். மணமான புதிதில், தொடக்கப் பள்ளி ஒன்றில், தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தேன். அவர், அமைச்சரான தும், திருவனந்தபுரம் வந்தோம்; எனினும், ஆசிரியை பணியில் தொடர்ந்தேன். நான் எதை செய்தாலும், அதற்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுப்பார். என் மீது அன்பு, அக்கறை கொண்ட கணவர் அவர். மணமானதும், நாங்கள் எங்கும், தேனிலவுக்காக செல்லவில்லை; ஆனால், கன்னியாகுமரிக்கு மட்டும் சென்று வந்தோம். அப்போது அவர், இந்த அளவுக்கு பிரபலமான தலைவர் இல்லை.அரசியலில் இருப்பதால், பிறர் போல, மனைவியை அடிக்கடி வெளியே அழைத்துச் செல்ல முடியாது என்பதை நன்கு அறிந்ததால், நான் எதிர்பார்ப்பதில்லை.
பார்க்கத் தான் அவர், சிரிக்காதது போல இருப்பார். ஆனால், வீட்டில் சிரித்து சிரித்து தான் பேசுவார்; அவரிடம் நிறைய நகைச்சுவை உணர்வு உண்டு. வீட்டை விட்டு, வேறு எங்காவது வெளியூர் சென்றிருந்தால், தினமும், மூன்று, நான்கு முறை போன் செய்து, அனைவர் நலமும் விசாரிப்பார். உணவுப் பிரியர் தான்; எனினும், இது தான் வேண்டும் என கூற மாட்டார். சாதம் சாப்பிட்டால், மீன் இருக்க வேண்டும். எல்லா காய்கறிகளையும் சாப்பிடுவார்; இரவில், பழங்கள் மட்டும் தான் சாப்பிடுவார்.அரசியல் தொடர்பாகவோ, அரசு தொடர்பாகவோ நான் அவரிடம் பேசுவதில்லை; அவரும் விரும்புவதில்லை. ஓய்வு நேரத்தில் நிறைய புத்தகம் படிப்பார். தமிழ் படங்களை ஆர்வமாக பார்ப்பார். எங்கள் இருவருக்கும், கடவுள் நம்பிக்கை கிடையாது!