புதுடில்லி: ஜாமியா பல்கலை அருகே மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து தலைநகர் டில்லியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் பல்வேறு பல்கலை மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் போராட்டம் நடத்துபவர்களிடம் சிஏஏ குறித்து விவரித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்திருந்தார். இருப்பினும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தலைநகர் டில்லியில் உள்ள ஜாமியா பல்கலைகழகத்தின் 5வது கேட் அருகே இன்று (2 ம் தேதி) நள்ளிரவில் மர்ம நபர்கள் இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பல்கலைகழகத்தின் முன்னர் மக்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.