சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ஆய்வுக்கு நண்பரை அழைத்துச் சென்ற அமைச்சர்!

Added : பிப் 04, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 ஆய்வுக்கு நண்பரை அழைத்துச் சென்ற அமைச்சர்!

''திருவள்ளூர் மாவட்ட, தி.மு.க.,வை மூணா பிரிக்க போறாங்க பா...'' என, பெஞ்சில் அமர்ந்ததுமே பேச்சை துவங்கிய அன்வர்பாயே தொடர்ந்தார்...

''திருவள்ளூர், தி.மு.க., இப்ப, வடக்கு, தெற்குன்னு ரெண்டு மாவட்டங்களா இருக்கு... தெற்குல, ஆவடி நாசரும், வடக்குல, கும்மிடிபூண்டி வேணுவும் செயலர்களா இருக்காங்க பா...

''நாசர் கட்டுப்பாட்டுல இருக்குற சோழவரம், புழல் ஒன்றியங்கள், சென்னை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகள், மாதவரம் தொகுதிக்குள்ள வருது... இந்த தொகுதி, எம்.எல்.ஏ., சுதர்சனம், வடசென்னை வடக்கு மாவட்ட, தி.மு.க., செயலரா இருக்காரு பா...

''இதனால, நிர்வாக ரீதியா, கட்சியில நிறைய பிரச்னைகள் வருது... அதனால, ரெண்டு ஒன்றியங்களையும், மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளையும், வடசென்னை வடக்கு மாவட்டத்துல சேர்த்துட்டு, திருவள்ளூரை மூணு மாவட்டங்களா பிரிச்சுடலாம்னு, தி.மு.க., தலைமை பிளான் பண்ணிட்டு இருக்கு பா...'' என்றார், அன்வர்பாய்.

''தப்பானவா கூட, போலீஸ் அதிகாரிக்கு என்னங்காணும் சகவாசம்கறேன்...'' என, மொபைல் போனை, 'கட்' செய்தபடியே, வந்தார் குப்பண்ணா.

''ஆவேசப்படாம விஷயத்தை சொல்லும்...'' என்றார், அண்ணாச்சி.

''திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் பக்கத்துல, உமராபாத் பகுதியில, ஒரு வீட்டுல, ரெண்டு பெண்களை வச்சு, பாலியல் தொழில் பண்ணிண்டு இருந்த, 50 வயசு பொம்மனாட்டியை, சமீபத்துல போலீசார் கைது பண்ணினா ஓய்...

''அந்த பொம்மனாட்டி, ஆளுங்கட்சி முக்கிய பிரமுகரும் கூட... அவங்க மொபைல் போனை வாங்கி, போலீசார் ஆய்வு நடத்தினா ஓய்... அதுல, கடைசியா, வேலுார் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி ஒருத்தர் பேசினது தெரிஞ்சிருக்கு... ஆனாலும், இதை போலீசார் அப்படியே அமுக்கிப்ட்டா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''விஜயகுமார், இந்த பேப்பரை அங்க வையுங்க...'' என்றபடியே, ''அதிகாரிகள் கூட்டத்துக்கு, முதல்வரின் நண்பரை அழைச்சிட்டு போயிருக்காருங்க...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார், அந்தோணிசாமி.

''யாருப்பா அது...'' என விசாரித்தார், அன்வர்பாய்.

''கூட்டுறவு துறை செயல்பாடு சம்பந்தமா, அனைத்து மாவட்ட இணை பதிவாளர்களுடன், கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு, துறையின் செயலர், பதிவாளர் ஆகியோர், ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை, ஆய்வுக் கூட்டம் நடத்துவாங்க...
''சென்னை, கீழ்ப்பாக்கத்துல இருக்கிற கூட்டுறவு அலுவலகத்துல நடக்கிற இந்தக் கூட்டத்துல, அமைச்சர் ஒருத்தர் தான், அரசியல்வாதியா இருப்பார்... மத்தபடி அதிகாரிகள் தான் கலந்துக்குவாங்க...

''ரேஷன் கடைகளுக்கு ஊழியர்களை தேர்வு செஞ்சதுல, நிறைய முறைகேடுகள் நடந்திருக்காம்... அதனால, கூட்டுறவு அமைச்சர் ராஜு மேல, முதல்வர் கோபமா இருக்கார்னு சொல்றாங்க...

''இதனால, முதல்வரின் நண்பரான, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனை, துறை தொடர்பான ஆய்வுக்கு, ராஜு அழைச்சுட்டு போறாருங்க...

''அவர் மூலமா, முதல்வரின் கோபத்தை தணிக்க தான் இந்த ஏற்பாடாம்... அதே சமயம், இப்படி அரசியல்வாதிகள் வர்றதால, அதிகாரிகள், 'அப்செட்' ஆகுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-பிப்-202006:10:35 IST Report Abuse
D.Ambujavalli சட்ட விரோதமான எல்லா நிகழ்வுகள், குற்றங்கள் நடக்குமிடத்திலும் போலீஸ் இருக்கும். அவர்களை உடன் வைத்திருப்பதுதான் குற்றவாளிகளுக்கு ‘பாதுகாப்பு வளையம்’
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X