பொது செய்தி

தமிழ்நாடு

கிரைய பத்திரம் கிடைக்குமா? 13 ஆண்டுகளாக ஒதுக்கீட்டாளர்கள் காத்திருப்பு

Added : பிப் 05, 2020
Advertisement

தாம்பரம், கடப்பேரி பகுதியில், குடிசை மாற்று வாரியம் செயல்படுத்திய திட்டத்தில், முழு தொகையை செலுத்தியும், ஒதுக்கீட்டாளர்கள், 13 ஆண்டுகளாக, கிரைய பத்திரம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏழை மக்களுக்கு, குறைந்த விலையில் வீடு, மனைகள் வழங்குவது, குடிசை மாற்று வாரியத்தின் முதன்மை பணி. அந்த வகையில், 1995ல், சென்னை புறநகரின் பல பகுதிகளில், குடியிருப்பு திட்டங்களை வாரியம் செயல்படுத்தியது.அதில், தாம்பரம் கடப்பேரி பகுதியில், மவுலானா நகரில், புறநகர் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது. அங்கு, 115 மனைகள் ஒதுக்கப்பட்டன.


திட்டம்



அதற்காக, ஒவ்வொரு ஒதுக்கீட்டாளரும், மாதம், 216 ரூபாய் செலுத்த வேண்டும் என, வாரியம் உத்தரவிட்டது.அதன்படி, ஒதுக்கீடு பெற்றவர்களில், 36 பேர், 2007ல் அசல் தொகையாக, தலா, 24 ஆயிரத்து, 843 ரூபாய்; வட்டியாக, 48 ஆயிரத்து, 300 ரூபாய் என, ஒவ்வொருவரும், தலா, 73 ஆயிரத்து, 143 ரூபாய் செலுத்தினர்.வாரிய விதிப்படி, மொத்த தொகை செலுத்திய நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகளுக்குள், சம்பந்தப்பட்ட ஒதுக்கீட்டாளர்களுக்கு, கிரைய பத்திரம் வழங்க வேண்டும்.ஆனால், அவர்களுக்கு இன்று வரை, கிரைய பத்திரம் வழங்கப்படவில்லை.

இது குறித்து, மவுலானா நகரைச் சேர்ந்த, ஆர்.மகாலிங்கம் கூறியதாவது:கடப்பேரி, மவுலானா நகரில் உள்ள நிலத்தை, வருவாய் துறையிடம் இருந்து முறையாக பெறாமல், குடிசை மாற்று வாரியம், திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.வருவாய்த் துறையிடம் இருந்து, நுழைவு அனுமதி மட்டும் பெற்று, தங்களுக்கு சொந்தமில்லாத நிலத்தை, எங்களிடம் விற்று, பணம் வசூலித்துள்ளனர்.


கேள்வி



தவணை தவறியவர்களுக்கு அபராதம் விதித்த, கடமை தவறாத குடிசை மாற்று வாரிய நிர்வாகம், கிரைய பத்திரம் வழங்காமல், 13 ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறது.இதை கேட்டபோது, 'நீங்கள் செலுத்திய பணத்தை திரும்ப அளிக்கிறோம்; இடத்தை காலி செய்கிறீர்களா' என, அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியபோது, 'நிலத்தை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு, கால வரையறை நிர்ணயிக்கப்படவில்லை' என, 2017ல் பதில் அளிக்கப்பட்டது.இது குறித்து, குடிசை மாற்று வாரிய தலைமை அலுவலகம், வீட்டுவசதி துறை, முதல்வரின் தனிப்பிரிவு என, பல இடங்களிலும் மனு அளித்துஉள்ளோம். இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது ஒருபுறமிருக்க, 2007ல், நான் முழு தொகையான, 73 ஆயிரத்து, 143 ரூபாயை செலுத்தியும், 71 ஆயிரத்து, 423 ரூபாய் மட்டுமே, குடிசை மாற்று வாரியத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளது.


வழக்கு



அதாவது, முழு தொகையை செலுத்தியும், 1,720 ரூபாய் நான் பாக்கி வைத்துள்ளதாக, வாரிய நிர்வாகம், 2010ல் கூறியது. அப்பணத்தை நான் செலுத்தவில்லை.கிரைய பத்திரம் வழங்காததை கண்டித்தும், செலுத்திய தொகையை வரவு வைக்காததை கண்டித்தும், விரைவில், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X