சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020
Advertisement

கஞ்சா விற்ற ஆறு பேர் கைது

எண்ணுார்: எண்ணுார், ஆதிதிராவிடர் தெருவில், கஞ்சா விற்பதாக, எண்ணுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அப்பகுதியில் நடத்திய சோதனையில், நால்வர் கும்பல் கஞ்சா விற்றது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், எண்ணுார், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரவிசந்திரன், 27, நாகராஜ், 26, ராம்கி, 30, கோபி, 23, என்பது தெரியவந்தது. நால்வரையும் போலீசார் கைது செய்து, மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

துரைப்பாக்கம், சுப்பராயன் தெருவைச் சேர்ந்தவர்கள் ஜாகிர், 22, அருண்குமார், 23. இருவரும் சேர்ந்து, கண்ணகி நகர் பேருந்து நிலையத்தில், பயணியரை குறிவைத்து கஞ்சா வியாபாரம் செய்தனர். கண்ணகி நகர் போலீசார், நேற்று முன்தினம், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மோசடியில் ஈடுபட்டவரிடம் விசாரணை

நொளம்பூர்: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன், 34. இவரை, சில தினங்களுக்கு முன், சென்னை, பாடியநல்லுாரைச் சேர்ந்த சுபாகர், 25, என்பவர் வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி, 5 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால், சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. மேலும் கொடுத்த பணத்தையும் தராமல், அலைக்கழித்து வந்துள்ளார்.இது குறித்து கலைச் செல்வன் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சுபாகரை பிடித்து விசாரிக்கின்றனர்.

மொபைல் பறித்தவர் சிக்கினார்

ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம், ஐ.ஏ.எப்., சாலை பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ், 28. கடந்த ஜூன் மாதம், ரயில் பயணத்தில் துாங்கியபோது, மர்ம நபர் அவரது மொபைல்போனை பறித்து தப்பினார். ஆவடி ரயில் நிலைய போலீசார் விசாரித்தனர். கணேஷ் மொபைலின், ஐ.எம்.ஐ., எண்ணை பயன்படுத்தி, இருப்பிடத்தை கண்டறிந்து, நேற்று இந்து கல்லுாரி ரயில் நிலையத்திற்கு போலீசார் சென்றனர்.

அங்கு நின்ற சந்தேக நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் கணேஷ் மொபைலை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அந்த நபர், அம்பத்துாரைச் சேர்ந்த அஜித், 25, என்பதும், வழிப்பறி திருடர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

புகையிலை விற்றவருக்கு, 'கம்பி!

'விருகம்பாக்கம்: விருகம்பாக்கம், காந்தி நகரில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக தெரிந்த வீட்டில், திடீரென ஆய்வு செய்தனர்.இதில், அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தயாரித்து சுற்று வட்டாரப்பகுதிகளில், விற்பனை செய்வது தெரிய வந்தது. தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த, மோகன், 48, என்பவரை கைது செய்த போலீசார், 80 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

வாலிபர் கொலையில் ஒருவர் கைது

அனகாபுத்துார்: அனகாபுத்துார், கரிகாலன் தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ், 21. இவர், 2019, ஏப்ரல் முதல் காணாமல் போன, இவரை, அதே பகுதியைச் சேர்ந்த ஆறு பேர், கொலை செய்து, அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள, பாழடைந்த கிணற்றில் வீசியது தெரிய வந்தது.

இது சம்பந்தமாக, பிரவீன், 20, நித்திஷ், 21, ஆகிய இருவரை, சங்கர் நகர் போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம், கிணற்றில் இருந்த தண்ணீர் அகற்றப்பட்டு, லோகேஷின் எலும்புக்கூடு கைப்பற்றப்பட்டது. இவ்வழக்கில், தலைமறைவாக இருந்த மூன்று பேரில், ரவி, 36,என்பவரை, போலீசார், நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X