தினந்தோறும் குறள்!

Added : பிப் 05, 2020
Advertisement

சொன்னது பகவத் கீதை. மனிதன் இறைவனுக்குச்சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள். இன்றைய வாழ்வியல் பிரச்னைகளையம் அதற்கான தீர்வுகளையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நம் முப்பாட்டன் வள்ளுவன் சொல்லியிருக்கிறான் என்பதே விந்தை தான். அதனால் தான் 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்துவான்புகழ்கொண்ட தமிழ் நாடு' என்று பெருமிதமாய் பாடி விட்டு சென்றான் பாரதி.

"வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" என்று பாரதிதாசனும், 'எல்லாப் பொருளும் இதன் பால் உள' என்று மதுரைத் தமிழ் நாகனாரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.தான் தமிழ் கற்க விரும்புவதற்குக் காரணம் வள்ளுவனின் வாய் மொழியை அவருடைய தாய்மொழி மூலம் படித்தறிவதற்கே என்று தேசப்பிதா குறிப்பிட்டு உள்ளார். தமிழுக்கு கதி என்று கம்பனையும், திருவள்ளுவரையும் அடையாளப்படுத்துகின்றனர் சான்றோர்கள். வாழ்க்கையில் எதைப் பற்றி சந்தேகங்கள் தோன்றினாலும் வள்ளுவரிடம் கேட்கலாம். எல்லாவற்றிற்கும் குறளில் பதில் வைத்திருப்பார். ஒவ்வொருவரும் தன் வாழ்வியலை இதனோடு பொருத்திப் பார்த்து நமக்கு இதில் எது பொருந்தும் என்று தேர்வு செய்து அதன் படி நடக்க முடியும்.

வள்ளுவரிடம் எந்த முயற்சியும் செய்யாமல் சோம்பேறியாக இருக்கும் ஒருவன் செல்கிறான். வள்ளுவரோ 'தெய்வத் தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்' என்றும் 'முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்' என்றும் முயற்சி செய், முயற்சிகளே வெற்றி தரும் என்கிறார்.


அறிவுரை


ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள பத்து குறள்களையும் நன்கு படித்தால் ஒரு ஒற்றுமை புலனாகும். முதல் நான்கு குறள்களில் இப்படிச் செய்யக் கூடாது என்று அறிவுரை கூறியிருப்பார். அப்படியும் கேட்காதவர்களை இது செய்தால் என்ன பயன் கிடைக்கும் என்று மீதியுள்ள குறள்களில் அம்மாவைப் போலவே கனிவுடன் கூறுவார். இல்வாழ்க்கை என்றால் என்ன என்று கேள்விக்கு 'அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று'என்பது பதிலாக இருக்கும். திருமண அழைப்பிதழ்களில் 'அன்பும் அறனும் உடைத்தாயின்இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்ற குறளை படித்து விட்டு எளிதில் கடந்திருப்போம். ஆனால் இந்த ஒன்றே முக்கால் அடியில் வாழ்க்கையின் மொத்த சூட்சுமத்தையும் உள்ளடக்கியிருப்பார். இல்லறத்திற்கு அடிப்படை தேவை அன்பு. கணவன், மனைவியிடம் இருக்கும் அன்பானது பல்கிப் பெருகி அறம் சார்ந்த வாழ்க்கைக்குத் திட்ட மிடுகிறது.
அதன் அடுத்த கட்ட நகர்வாக மக்கட் பேறு பற்றிக் கூறும் வள்ளுவர் தந்தையின் கடமையை இப்படிச் சொல்கிறார். 'தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்' என்று கூறுபவர் அப்படியானால் மகனின் பங்கு என்ன என்ற கேள்விக்கு 'மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்' என்கிறார்.தாயின் மகிழ்வு


ஒரு தாய் எப்போது மகிழ்வாள் என்ற கேள்விக்கும் பதில் உண்டு வள்ளுவனிடம். 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்'
என்று பதில் அளிக்கிறார். குடும்ப வாழ்வின் நல்லறங்களைக் கூறும் குறள் மனித மாண்புகளை எடுத்துக் கூறுகிறது. இனம், மொழி, மதம் என்ற எந்த வரையறைகளுக்கும் உட்படவில்லை. அதனாலே தான் உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. மனிதன் என்பவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பண்பு நலன்களை வரையறுத்துக் கூறியிருக்கும் திருக்குறள். மானிட சமுதாயத்திற்கான அறங்களை உயர்த்திப் பிடிக்கிறது. பொருளை மட்டுமே தேடும் மனித சமூகத்தைத் தடுத்து நிறுத்தி அறத்தை முதன்மையாக கொள்ள வேண்டும் என்று கூறி அறத்தைப் பின்பற்றி பொருளைத் தேடினால் இன்பத்தை அடையலாம் என்று அறத்துப் பால், பொருட் பால், காமத்துப் பால் என்று அதிகாரங்களை வரையறுத்து இருப்பார் வள்ளுவர். இந்த அறத்திற்கு மட்டுமல்ல மறத்திற்கும் அன்பு தான் துணை என சொல்லி விட்டு, அன்பில்லாதவனின் உயிரை அறமாகிய வெயில் எலும்பில்லாத புழுவின் உடலை வருத்துவது போல துன்பமாக்கும் என்று கூறுகிறார்.எண்ணத்தில் உயர்வு

எண்ணத்தில் உயர்வு வர வேண்டி ஒருவன் யோசித்தால் அவன் எடுக்க வேண்டிய குறள் எது தெரியுமா? 'வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு' என்ற குறளைப் படித்தாலே போதும். நுாறு யானைகளின் பலம் தந்து விடும். இன்று மனச் சோர்வுடன்இருக்கும் பலர் யாரோ ஒருவர் நமக்கு தன்னம்பிக்கை தர மாட்டாரா என்றும், மேலை நாட்டு அறிஞர்கள் சொன்ன தத்துவங்களை தேடியும் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நம்மிடமே அதற்கான மருந்தாக வள்ளுவம் இருக்கிறது என்பதை அறியவில்லை. மனதைக் கட்டி ஆள வேண்டும் என்று பல சான்றோர்கள் கூறும் நீண்ட விளக்கங்களை விட எளிமையாக வள்ளுவன் தரும் விளக்கமே போதும். மகாபாரதத்தில் காற்றை விட வேகமானது எது என்ற கேள்விக்கு மனம் என்று பதில் அளித்திருப்பர். கண்ணதாசனோ மனதால் நடப்பவனே மனிதன் என்று சொல்லுவார். வள்ளுவரோ மனதில் குற்றமற்றவனாக இருத்தலே நல்ல அறம் என்று கூறியிருப்பார்.

திருக்குறளைப் படிக்கும் போதே கதை ஒன்று நினைவில் வந்தது. மரக்கடை வைத்திருக்கும்தந்தையிடம் மகன் 'அப்பா நீங்கள் பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி படித்து விட்டு மரக் கடையில் போய் வேலை செய்கிறீர்களே' என்று கேட்கிறான். தந்தை அமைதியாக ''சரி, இப்ப நீ சைக்கிள் ஓட்டுறேதானே... அது எப்படி ஓடுகிறது?'' என்றார். 'அது டயர் இருக்கறதால ஓடுதுப்பா!' 'அந்த டயர்ல காற்று இல்லன்னா என்னவாகும்?' ''சைக்கிளை ஓட்ட முடியாது.'

''ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் டன்லப் என்ற விஞ்ஞானி தான் அதைக் கண்டுபிடித்தவர். ஆனால், அவர் விஞ்ஞானி கிடையாது: கால்நடை மருத்துவர். அவருக்கும் டயருக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் தன் மகனின் முச்சக்கர சைக்கிளை வேகமாக நகர வைக்க என்ன வழி என்று யோசித்தார். இந்த காற்று அடைக்கும் டயரைக் கண்டறிந்தார். அதைப் பயன்படுத்தும்போது சைக்கிள் வேகமாக ஓடியது. அந்த காற்று அடைக்கும் டயர் முறை பிரபலமாகி, அதைக் கண்டுபிடித்த பெருமையும் ஜான் டன்லப்புக்கு வந்து சேர்ந்தது.''

'கால்நடை மருத்துவரா காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்' என்று ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஜான் டன்லப், தான் கற்ற கல்வியை ஒரு துறை சார்ந்த கல்வியாக பார்க்கவில்லை. எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்து ஆராயும் முறையைத்தான் அவர் கல்லுாரியில் கற்றுக் கொண்டதாக நினைத்தார். அதனால்தான் தன் மகனின் சைக்கிளைக் கூட தனது துறையைச் சார்ந்ததாக இல்லாவிட்டாலும் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்.

நான் பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி படித்துவிட்டு மரக்கடை வைத்து இருக்கலாம். ஆனால், கெமிஸ்ட்ரியை எப்படி ஆராய்ந்து புரிந்து படித்தேனோ, அதே போன்று தான் வியாபாரத்திலும் செயல்படுத்துகிறேன். அந்த வகையில், நான் கற்ற கல்வி எனக்கு உபயோகமாக இருக்கிறது. எந்த துறையைப் படித்தாலும், கல்வி கல்விதான். அது நம் அறிவை வளர்த்து நன்மையைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஆகையால் எந்த துறையானாலும் விருப்பத்துடன் படிக்க வேண்டும்'' என்று அப்பா சொல்லி முடித்தார்.

இந்த நீளமான கதையை வள்ளுவர் 'ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து' என்று எளிமையாக கூறி விடுகிறார். ஒரு பிறவியில் ஒருவர் கற்கும் கல்வி அவரது ஏழு பிறப்பிலும் தொடரும் என்கிறார். இப்படி வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் பொருந்திப் போகிறது வள்ளுவரின் குறள்கள். தினந்தோறும் குறள் படிப்போம். வாழ்வை வளமாக்குவோம்.
- ம.ஜெயமேரி, ஆசிரியை , ஊராட்சி ஒன்றியதொடக்க பள்ளிக.மடத்துப்பட்டிbharathisanthiya10@gmail.comAdvertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X