வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ராணுவத்தில் பெண் அதிகாரிகளை ஆண் வீரர்கள் ஏற்க மாட்டார்கள் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
ஆணுக்கு நிகர் பெண் என வார்த்தையளவில் பேசினாலும், இன்றளவும் ஏற்றத்தாழ்வுகள் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. பல துறைகளில் பெண்கள் காலடி எடுத்து வைத்து முன்னேறினாலும், இந்த பாகுபாடு இருக்கிறது.
இந்நிலையில், ராணுவத்தில் பெண் அதிகாரிகள் நியமனம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த விளக்கம்: ராணுவத்தில் பெண் அதிகாரிகளை ஆண் வீரர்கள் ஏற்க தயாராகவில்லை என்பதால் தலைமை பதவிகளுக்கு பெண்கள் பொருத்தமானவர்கள் அல்ல.

பெரும்பாலான வீரர்கள் கிராமப்புறத்தில் இருந்து வருவதால், அவர்களால் பெண்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில் மனதளவில் சிரமப்படுகின்றனர். மேலும், ஆபத்தான ராணுவ பணிகளில் பெண்களை அமர்த்த முடியாத நிலை உள்ளது. மகப்பேறு, தாய்மை, குடும்ப பொறுப்பு என பலவற்றை பார்த்து கொள்ளும் பெண்கள், அதிகாரி பொறுப்பினால் அதிக வேலைப்பளு, மனஅழுத்தத்திற்கு ஆளாகலாம். தற்போதைய ராணுவ வீரர்களின் மனநிலை மாறும் வரையில் பெண் அதிகாரிகளை நியமிப்பது எளிதாக இருக்காது. இவ்வாறு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.