சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ஸ்டாலின் பேச்சை மதித்து செயல்படுவரா?

Added : பிப் 06, 2020
Share
Advertisement
 ஸ்டாலின் பேச்சை மதித்து செயல்படுவரா?

ஸ்டாலின் பேச்சை மதித்து செயல்படுவரா?
அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 2001ல் நடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு பின், அன்றைய பிரதமர் வாஜ்பாய் உத்தரவுப்படி, அன்றைய மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் தலைமையில், மும்பையில் மாநாடு நடந்தது. அதில் அன்று, தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியில் வெற்றி பெற்று, முதன்முறையாக தேர்வு பெற்றவர்களுக்கு பயிற்சி வகுப்பு, நல்ல வழிகாட்டுதலாக அமைந்தது.

அதே போல, ஊரக, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற, ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, கிராம வார்டு கவுன்சிலர்களுக்கு, தி.மு.க., சார்பில், சமீபத்தில் திருச்சியில் மாநாடு நடைபெற்றது. அதற்காக எடுத்த முயற்சிக்காகவும், ஆற்றிய உரைக்காகவும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை பாராட்டலாம். அந்த மாநாட்டில், உண்மையான எதார்த்தங்களை, அனுபவங்களை, வழிமுறைகளை, வழிகாட்டுதல்களை, உள்ளாட்சி பிரதிநிதிகளின் மனதில் பதியும்படி, ஸ்டாலின் பேசினார்.

இந்த ஆரோக்கியமான பேச்சை, தி.மு.க.,வை சேர்ந்த பிரதிநிதிகள் அனைவரும் மனதில் நிறுத்தி செயல்பட்டால், நிச்சயமாக பெரிய மாற்றம் ஏற்படும். தமிழக அரசின் சார்பில், அனைத்து மாவட்டங்களிலும், இது போன்ற பயிற்சி வகுப்புகளை, அதிகாரிகள் தலைமையில் நடைபெறச் செய்தால், நன்றாக இருக்கும்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் பேச்சை வேதவாக்காக எடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் செயல்படுவரா அல்லது வழக்கம் போல, 'கூடிக் கலைந்தோம்; அசைவ உணவு உண்டு மகிழ்ந்தோம்; தலைவரின் பேச்சு, ஊருக்குத் தான் உபதேசம்' என, வழக்கம் போல எண்ணி செயல்படுவரா?

***

நேர்மையாக வரி செலுத்துவோர் இளிச்சவாயன்களா?
என்.சாண்டில்யன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆண்டுக்கு, 5 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வருமான வரி செலுத்த வேண்டிஉள்ளது. ஆனால், ஆண்டுக்கு, பல கோடி ரூபாய் சம்பாதிக்கும் நடிகர்கள், உண்மையான வருமானத்தை காட்டாமல், வரி ஏய்ப்பு செய்கின்றனர். அன்று, வருமான வரி ஒழுங்காக கட்டாததால், முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயிடம், தமிழக முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., சிக்கி முழித்த கதை எல்லாம், தமிழக மக்களுக்கு தெரியும்.

கோடிக்கணக்கில் சொத்துக்கள் குவித்த போதும், முறையாக வருமான வரி செலுத்தாமல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே ஏமாற்றினார்; அதையும் மக்கள் அறிந்தே இருக்கின்றனர். இத்தருணத்தில், 'நெருங்கிய நண்பர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்தேன். ஆனால், எனக்கு வட்டியும் கிடைக்கவில்லை; அசலும் கிடைக்கவில்லை. அதனால் தான், வருமான வரி கட்ட முடியாமல் போனது' என, நடிகர் ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.

'இந்த அளவுக்கு பணக் கஷ்டத்தில் மனுஷன் சிக்கித் தவிக்கிறாரே...' என, மனமிரங்கி, அவர் மீது, எடுக்க வேண்டிய நடவடிக்கையை வருமான வரித்துறை கை விட்டது. 'கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால், கேட்பவனுக்குப் புத்தி எங்கே போச்சு?' என, ஒரு சொலவடை உள்ளது. அதே போன்று, 2002- -2003ல், 2.63 கோடி கடன் கொடுத்த வகையில், 1.45 லட்சம் வட்டி கிடைத்ததாம்; உடனே, வருமான வரி கட்டி விட்டாராம்; 2004 - 200-5ல், 1.71 கோடி ரூபாய் கடன் கொடுத்த வகையில், 33.93 லட்சம் ரூபாய் இழப்பாம்!

நெருங்கிய நண்பர்களுக்கு கடன் கொடுத்தும், ரஜினியை ஏமாற்றி விட்டனராம்; 'அதனால் தான், வருமான வரி கட்ட முடியாமல் போனது' என்கிறார், நடிகர் ரஜினி! அன்று, ஒரு படத்திற்கு, லட்சக்கணக்கில் பணம் வாங்கினார். இன்று எத்தனையோ கோடி ரூபாய் சம்பாதித்திருக்கும், நடிகர் ரஜினியால், 34 லட்சம் ரூபாய் இழப்பால், வருமான வரி கட்ட முடியவில்லை என, விளக்கம் அளித்திருப்பது, காதுகளில் மலர் சூடுவது போல இருக்கிறது. இந்த, 34 லட்சம் ரூபாய், ரஜினிக்கு, 'பாக்கெட் மணி' மாதிரி!

'நாட்டில், 'சிஸ்டமே' கெட்டுப் போச்சு; அரசியல் கெட்டுப் போச்சு' என, நியாயம், நீதி எல்லாம் பேசுகிறார். இப்படிப்பட்ட யோக்கியதை உள்ள ரஜினி தான், 'நாட்டை ஆள வேண்டும்' என, தமிழருவி மணியன் உள்ளிட்ட சிலர், 'ஜால்ரா' போடுகின்றனர். அப்படி பார்க்கையில், நாட்டில், நேர்மையாக வரி செலுத்துவோர் எல்லாம், இளிச்சவாயன்கள் தான்!

***

நிர்பயா தாய்க்கு எப்போது நிம்மதி?
சுப.அகிலா விசுவநாதம், அன்னை தெரசாபொதுநல இயக்கம், திருப்பாதிரிப்புலியூர், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: டில்லியில், ஏழு ஆண்டுகளுக்கு முன், ஓடும் பஸ்சில் மருத்துவக் கல்லுாரி மாணவி நிர்பயாவுக்கு ஏற்பட்ட கொடுமை, உலகில் வேறெங்கும் நடைபெறா வண்ணம், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை, நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

இந்த குற்றத்தில் ஈடுபட்ட மனித மிருகங்கள், ஆறு பேர். இவர்களில் ஒருவன் சிறுவன். ஆனால், இன்று, அவன் மேஜர்; 18 வயதை தாண்டியவன். இந்த சம்பவத்திற்காக, நீதிமன்றம் எடுத்துக் கொண்ட அவகாசம் ஏழு ஆண்டுகள். குற்றவாளிகளுக்கு ஆதரவாக, வழக்கறிஞர்கள் சிலரும் ஆஜராகி வருகின்றனர். இதுபோல் நடந்தால், யாருக்கு பயம் வரும்? கருணை மனு என்பதற்கும், சில விதிமுறைகள் வேண்டும். துாக்கு தண்டனை பெற்றவர்கள் கருணை மனு போடலாமா... இதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

தெலுங்கானா மாநிலத்தில், கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள், போலீசாரால், 'என்கவுன்டர்' செய்யப்பட்டு, கொல்லப்பட்டனர். நிர்பயா வழக்கிலும், இது போன்று நடந்திருந்தால், அவர் தாய் எவ்வளவு மனநிறைவு அடைந்திருப்பார்! நீதி மீது, நம்பிக்கை வைத்து பொறுமை காக்கிறார். காலம் கடத்தாமல், குறிப்பிட்ட தேதியில் துாக்கு தண்டனையை நிறைவேற்றினால், அன்றைய தினம் தான், நிர்பயாவின் தாய்க்கு நிம்மதி பிறக்கும்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X