சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

காங்., தவறுக்கு வங்கி ஊழியர்கள் பொறுப்பா?

Added : பிப் 07, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 காங்., தவறுக்கு வங்கி ஊழியர்கள் பொறுப்பா?

வ.ப.நாராயணன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வங்கிகள் வேலை நிறுத்தம் நியாயம் தானா?' என்ற தலைப்பில், வாசகர் ஒருவர், இதே பகுதியில் கடிதம் எழுதி இருந்தார்; அது பற்றி, விளக்கம் கூற விரும்புகிறேன்!

இடைநிலை அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியரின் ஊதியத்தை விட, வங்கி கிளை மேலாளரின் ஊதியம், மிகவும் குறைவு. அதே போன்று, சாதாரண அரசு இளநிலை உதவியாளரின் ஊதியத்தை விட, வங்கி அதிகாரி ஊதியம் குறைவு.

வங்கி ஊழியர்கள் வேலை பளு அதிகம்; பொறுப்பும் அதிகம். மற்ற அரசு அலுவலகங்கள் போல, மாலை, 5:00 மணியானதும், அப்படியே போட்டு வரக்கூடிய பணி இல்லை. நிதியை கையாள்வதால், வங்கி பணி ஊழியர்களுக்கு, இடர்கள் நிறைந்ததாகவே உள்ளது. கடந்த, 2014 முதல், வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. அதே சமயம், மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும், ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது.'
பொதுத் துறை வங்கிகள், வாராக்கடன் சுமையால், நஷ்டத்தில் இயங்குகின்றன. அதை வசூல் செய்யும் வரை, வங்கி ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு கிடையாது' என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

முந்தைய காங்கிரஸ் அரசு, விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்ற பணக்கார தொழிலதிபர்களுக்கு, வள்ளல் போல், வாரி வழங்கியது; வங்கிகளின் நிதி நிலையை கட்டுக்குள் கொண்டு வர தவறியது; இதனால், பொதுத்துறை வங்கிகளின் கடன் சுமை, மலை போல் உயர்ந்தன. அதற்கு, வங்கி ஊழியர்கள் என்ன செய்வர்?

காங்கிரஸ் ஆட்சியில் செய்த தவறுக்கு, தற்போது ஆட்சியில் இருப்போர், எப்படி பொறுப்பேற்க முடியும்? எதற்காக, வங்கி ஊழியர்கள், ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து, பழி வாங்க வேண்டும் என்று கேட்கவும் தோன்றுகிறது.எனவே, வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு விஷயத்தில், மாற்றாந்தாய் மனப்போக்குடன் செயல்படுவதை, மத்திய அரசு கை விட வேண்டும்.வங்கி சேவையும், நாட்டிற்கு இன்றியமையாதது என்பதை உணர்ந்து, வங்கி ஊழியர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும்!

தமிழர்களின் சாபக்கேடு! ச.ஜான் பிரிட்டோ, திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்:

'கோவா மாநில மக்கள், அம்மாநிலத்தில் நடைபெற்று வரும் சூதாட்ட மையங்களில் நுழையவோ, பங்கேற்கவோ கூடாது' என, பா.ஜ., வை சேர்ந்த, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தடை விதித்துள்ளார்; அவரது உத்தரவு, சற்றே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், மதுக்கடைகளை மூடினால், அண்டை மாநில மதுவகைகள், தாராளமாக புழங்கும் என, சப்பைக்கட்டு கட்டி, 'டாஸ்மாக்' வாயிலாக, கல்லா கட்டுகிறது, தமிழக அரசு. தமிழகத்தை ஒப்பிடுகையில், உண்மையில், கோவா மாநிலத்தில் பின்பற்றி வரும் சட்டம் - ஒழுங்கு நடைமுறையை, பாராட்டியே தீர வேண்டும். தமிழகத்தில், பல ஆண்டுகளாக, லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், தடையை மீறி, மூன்று நம்பர், நான்கு நம்பர் என, கள்ளத்தன லாட்டரி விற்பனை, ஆனந்த தாண்டவம் ஆடி வருகிறது.இது போக, அப்பாவி மக்களின் அன்றாட வாழ்விற்கு, ஊறுவிளைவிக்கும், 'டாஸ்மாக்' மது கடைகளை தொடர்ந்து நடத்துவது தான், தமிழக அரசின் நிர்வாக திறமையா!
அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியான, படிப்படியான மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும். அதற்கு, இன்று முதல், தினமும், 20, 'டாஸ்மாக்' கடைகளையாவது, மூடியே தீர வேண்டும்.

காந்தியடிகள் பிறந்து, 150 ஆண்டுகளாகின்றன. அதை நினைவுகூரும் வகையில், கடந்த ஆண்டு, ஜனவரி, 30 நினைவு நாளில் மட்டும், 'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.இந்த ஆண்டு, 'டாஸ்மாக்' கடைகள் அனைத்தும், ஜனவரி, 30ல் அடைக்கப்படாமல் கல்லா கட்டின. இதைக், காணும் போது, மதுவிலக்கு கொள்கையில், காந்தி பிறந்த நாள் அன்று கடைகளை மூடுவதும், இறந்த நாள் அன்று கடைகளை திறந்து, வசூல் பார்ப்பதும், அரசுக்கு வாய்ப்பாக உள்ளது. காந்தி நினைவு நாளில், தமிழகத்தை ஆளும் கட்சிக்கு, மதுக் கடைகளை மூட அதிக நாட்டமில்லை என்பது, அப்பட்டமாகவே தெரிகிறது. தமிழர்களுக்கு, இது ஒரு சாபக்கேடு!

பணி நியமன ஆணை எப்போது?

வி.மோகனசுந்தரம், மதுரையிலிருந்து எழுதுகிறார்:'2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி நியமன ஆணை வழங்கப்படாதவர்களுக்கான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு வாரத்தில், அவர்களுக்கு பணி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது' என, கடந்தாண்டு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

இப்போது, கிணற்றில் போட்ட கல் ஆகி விட்டது, அமைச்சரின் பேச்சு. 2013 தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசின் பணி நியமன ஆணையை எதிர்பார்த்து, ஏழு ஆண்டுகளாக பலர் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது, 'மீண்டும், 2020 ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும்' என, தமிழக அரசு அறிவித்து, அட்டவணை வெளியிட்டுள்ளது. ஆக, ஏற்கனவே தேர்ச்சி பெற்ற, 70 ஆயிரம் பேர், 'அய்யோ பாவம்' என ஆகி போயினர்.

ஆசிரியர் தகுதி தேர்வை எதிர்கொள்ள, ஐந்து லட்சம் பேர், விண்ணப்பிக்க இருக்கின்றனர். ஏகப்பட்ட பணம் செலவழித்து தேர்வு எழுதினாலும், அவர்களில் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவர் என்று சொல்ல முடியாது. அப்படியே போராடித் தேர்ச்சி பெற்றாலும், அவர்களுக்கும் இதே கதி தான்!

தமிழக அரசே, இதை செய்ய துணிந்தால், அது எந்த வகையில் நியாயம்?

வேலை இல்லாதோர், பணி கேட்டுப் போராடுவர். அவர்களுக்கு அரசு ஆயிரக்கணக்கில் செலவு வைத்து, தேர்ச்சி பெற்ற பின், வேலையும் இல்லையென்றால், இது, ஆசை காட்டி மோசம் செய்யும் செயல்; நம்பிக்கை துரோகம்!

எனவே, கடந்த ஆண்டு அறிவித்தபடி, பணி நியமன ஆணையை வழங்க வேண்டும். அதுவரை, தற்போது அறிவித்த, 'டெட்' தேர்வு அறிவிப்பை ரத்து செய்து, தேர்ச்சி பெற்றவர்களை வேலையில் அமர்த்த வேண்டும்!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
08-பிப்-202012:35:15 IST Report Abuse
Dr. Suriya //அதற்கு, வங்கி ஊழியர்கள் என்ன செய்வர்?காங்கிரஸ் ஆட்சியில் செய்த தவறுக்கு, தற்போது ஆட்சியில் இருப்போர், எப்படி பொறுப்பேற்க முடியும்? எதற்காக, வங்கி ஊழியர்கள், ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து, பழி வாங்க வேண்டும் என்று கேட்கவும் தோன்றுகிறது// காங்கிரஸ் ஆட்சியில் வாரி வழங்கியது...காங்கிரஸ் ஆட்சியில் தான் வங்கிகளின் நெலமை மோசமடைய தொடங்கியது என்பதை வாசகர் ஒத்து கொண்டாரே அதுவரையில் பாராட்டுக்கள்....அப்போ அதிகாரிங்கல்லாம் வங்கி சட்ட திட்டத்துக்கு உட்பட்டு தானே கடன் கொடுத்தார்கள்...அல்லது அதை மீறி கொடுக்க எவ்வளவு லஞ்சம் வாங்கி இருப்பார்கள் என்பது இவருக்கு தெரியாதோ...
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
08-பிப்-202011:54:40 IST Report Abuse
karutthu வங்கி மற்றும் வங்கி ஊழியர்ககுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் ஒரு நாள் ஸ்டேட் பேங்க்கில் போய் பாருங்கள் அவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்று தெரியும் நானும் ஸ்டேட் பாங்கில் ஈ பீ எப் பென்ஷன் ( Rs 1800/=) வாங்கும் மூத்த குடிமகன் தான் .ஆனாலும் சுலபமாக உதவி செய்ய மாட்டார்கள் .இதுவே ஒரு சில தனியார் வங்கியில் வீட்டிற்கு வந்தே உதவி செய்கிறார்கள் ........
Rate this:
Share this comment
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
08-பிப்-202008:02:49 IST Report Abuse
venkat Iyer திரு.மோகனசுந்தரம் கூறியது போல ஆசிரியர் பணிக்கு மணிக்கணக்கு வைத்து ஆசிரியர்களை பணி அமர்ந்தாள்.அது போல தனியார் துறையிலும் கஸ்ட் ஆசிரியர் பணிகளை உருவாக்க ஆணை பிறப்பிக்கலாம்.இதன் மூலம் தனியார் பள்ளிகளின் செலவு குறைவதோடு மாணவர்களின் படிப்பு கட்டணம் கூட குறையும்போது ஏராளமான மாணவர்கள் சேர வாய்ப்பு இருக்கும்.மூன்று பாடத்தை ஒருவர் நடத்த நன்கு தேர்ச்சி பெற்ற நிலையில் பல்வேறு பள்ளிகளுக்கு பாடம் நடத்த சொல்லலாம்.இது நடைமுறை சாத்தியமாகாது என்று பலர் சொன்னாலும் சங்கிலி தொடர் போல உள்ள தனியார் பள்ளிகளில் பல நாடுகளில் மட்டும் அல்லாமல் நமது நாடுகளிலும் நடக்கின்றது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X