கைகலப்பு! மத்திய அமைச்சரை தாக்க முயன்ற தமிழக எம்.பி., .ராகுலை விமர்சித்ததால் லோக்சபாவில் கடும் அமளி

Added : பிப் 07, 2020 | கருத்துகள் (1)
Advertisement
கைகலப்பு! மத்திய அமைச்சரை தாக்க முயன்ற தமிழக எம்.பி., .ராகுலை விமர்சித்ததால் லோக்சபாவில் கடும் அமளி

ராகுலை விமர்சித்ததற்காக, மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனை சபைக்குள்ளேயே தாக்குவதற்கு, தமிழக காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் பாய்ந்ததால், லோக்சபாவில் கைகலப்பு
ஏற்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.

டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசுகையில், 'வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இதே நிலை நீடித்தால், இன்னும் ஆறு மாதத்திற்குள்
இளைஞர்கள், பிரதமர் நரேந்திர மோடியை தடி வைத்து அடிப்பது நிச்சயம்' எனக் கூறியிருந்தார்.


மருத்துவ கல்லுாரிசர்ச்சைக்குரிய இந்த பேச்சுக்கு பதிலடி தரும் வகையில், நேற்று முன்தினம் லோக்சபாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'தினந்தோறும் கூடுதலாக சூரிய நமஸ்காரம் செய்து, என் முதுகை வலிமையாக்கிக் கொள்வேன். அவதுாறு பேச்சுக்களை தாங்கும் வல்லமை எனக்கு புதிதல்ல' என்றார். இந்நிலையில், நேற்று லோக்சபா கூடியதும் வழக்கம்போல கேள்வி நேரம் துவங்கி அலுவல்கள் நடந்தன. சில கேள்விகள் முடிந்திருந்த நிலையில், இடைப்பட்ட
கேள்விகளை விட்டு விட்டு, ராகுல் கேட்க வேண்டிய கேள்வி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, தன் சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டில், மருத்துவக் கல்லுாரி அமைப்பது தொடர்பான கேள்வியை கேட்க துவங்கினார் ராகுல். அவர் முடிப்பதற்குள்ளாகவே குறுக்கிட்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், ''மன்னிக்கவும் சபாநாயகர் அவர்களே... அன்புக்குரிய ராகுலின் இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன், அவர், இந்த
நாட்டின் பிரதமர் பதவியில் உள்ள வரை வரம்புமீறி பேசியதை கண்டிக்க விரும்புகிறேன்,''
என்றார்.

சபாநாயகர் ஓம் பிர்லாவோ, ''கேள்விக்கான பதிலை மட்டும் அளிக்க வேண்டும். அதை தாண்ட கூடாது,'' என்றார். ஆனாலும் அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தொடரவே, காங்கிரஸ் எம்.பி.,க்கள் எழுந்தனர்; சபை பதற்றமானது. காங்கிரஸ் எம்.பி.,க்கள் கடுமையாக கூச்சலிட்டு, 'தேவையற்றதை பேசக்கூடாது. இது கேள்வி நேரம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்' என, ஆவேசம் காட்டினர். சபாநாயகர் இருக்கையை சிலர் முற்றுகையிட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த, காங்கிரஸ், எம்.பி.,யான மாணிக்கம் தாகூர், கடுமையாக எச்சரித்தபடியே, அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனை நெருங்கினார்.

ஆளும் தரப்பில், இரண்டாவது வரிசையில் சற்று தள்ளி அமைச்சர் இருந்த போதும், சற்றும் தயங்காமல் அந்த பகுதிக்கு வந்து, அமைச்சரை தாக்க முயற்சிப்பதுபோல மாணிக்கம் தாகூர் முன்னேறினார். இதனால் அப்பகுதி முழுவதும் உள்ள, பா.ஜ., - எம்.பி.,க்களும் எழவே,
அசாதாரண சூழ்நிலை உருவானது.

பிரிஜ் பூஷண் ஷரண்சிங் என்ற, பா.ஜ., - எம்.பி., மாணிக்கம் தாகூரை பிடித்து இழுக்க துவங்கவும், காங்கிரஸ், எம்.பி., ஹிபி இடனும், அந்த தள்ளுமுள்ளுவில் இணைந்ததால் நிலைமை களேபரமானது. அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனை நெருங்கிவிட்ட மாணிக்கம் தாகூரை, பலரும் சூழ்ந்து இழுக்கவே, ஒருசில நிமிடங்கள் சபையே ஸ்தம்பித்தது. அமைச்சர் ஸ்மிருதி இரானி, ''என்ன செய்கிறீர்கள்... என்ன நடக்கிறது இங்கே,'' என, கோபமாக கேட்டபடி, அனைவரையும் விலக்கி விட முயன்றார்.

தனிநபர் தாக்குதல்

இந்த தள்ளுமுள்ளுக்கு மத்தியில், அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தொடர்ந்து பேசினார்.
அவர் பேசியதாவது: பிரதமர், ஆறு மாதங்களுக்குள் அடித்து துாக்கி எறியப்படுவார் என்கிறார் ராகுல். பிரதமரைப் பற்றி ராகுல் இவ்வாறு இழிவாக பேசியது போல, யார் மீதும், பா.ஜ.,
தலைவர்கள் தனிநபர் தாக்குதல் நடத்தியது இல்லை. மிகவும் மோசமான இந்த பேச்சை ராகுல் வாபஸ் வாங்க வேண்டும். அவரது பேச்சுக்கு இந்த சபை கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

சபையோ கொந்தளித்தபடி இருந்த நிலையில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் எம்.பி.,க்கள்
கைகலப்பிற்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத சபாநாயகர், சூழ்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, சபையை உடனடியாக ஒத்தி வைத்தார். பின், அடுத்தடுத்து கூடிய போதும், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியபடி இருந்ததால் அலுவல்கள் பாதிக்கப்பட்டு, லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

பா.ஜ., தரப்போ, 'அமைச்சரை தாக்க முயன்ற மாணிக்கம் தாக்கூர், சபையில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை சபையிலிருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும்' என, சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதேபோல், மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பபுல் சுப்ரியோ, காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை
கடுமையான வார்த்தைகளால் விமர்சித்ததை, சபாநாயகர் ஓம் பிர்லா கண்டித்தார். அவர் பேசிய வார்த்தைகளையும் சபை குறிப்பில் இருந்து நீக்கினார்.


ராகுல் குற்றச்சாட்டு!


காங்கிரஸ் எம்.பி., ராகுல் பார்லிமென்ட் வளாகத்திற்கு வெளியில் அளித்த பேட்டி: பிரதமர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள், கண்ணியத்துடன் நடக்க வேண்டும். உயர் பதவியில் இருப்பவர்களின் நடவடிக்கைகளிலும் நாகரிகம் இருக்க வேண்டும். ஆனால், பார்லிமென்டில், 'டியூப்லைட்' என்ற வார்த்தைகளை பிரதமர் பயன்படுத்தினார். அவரது நடவடிக்கை, ஒரு
பிரதமருக்கு உரியதாக இல்லை. பார்லிமென்டில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு
அனுமதி மறுக்கப்படுகிறது. எங்களின் குரல் ஒடுக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேட்டி
அளித்தார்.


சபாநாயகரிடம் மனு


லோக்சபாவில் நடந்த களேபரம் குறித்து, சபாநாயகரைச் சந்தித்து, மாணிக்கம் தாகூர் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ராகுல் கேள்வி கேட்பதை தடுத்ததோடு, கேள்விக்குரிய பதிலை தராமல், அமைச்சர் அரசியல் பேசினார். கேள்விக்குரிய பதிலை தரும்படி கேட்க முயன்ற என்னை, பா.ஜ., - எம்.பி., பிரிஜ் பூஷண் ஷரண்சிங் தள்ளிவிட்டதோடு மட்டுமல்லாது, கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்தால், யார் மீது தவறு என்பது தெரிந்துவிடும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்களுடனும், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடனும், சபாநாயகர்
ஓம் பிர்லா, நேற்று தனித் தனியே ஆலோசனை நடத்தினார்.


மோடி பேச்சு நீக்கம்


ராஜ்யசபாவில், நேற்று முன்தினம் பிரதமர் மோடி பேசியபோது, தேசிய மக்கள் தொகை
பதிவேடு விஷயத்தில், எதிர்க்கட்சியினர் பொய்களை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், பொய் என்ற வார்த்தை, பார்லிமென்ட் நடைமுறைகளுக்கு ஏற்றதல்ல எனக் கூறி, அந்த வார்த்தை, சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பேச்சு, சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுவது மிக அரிதானது என்றாலும், இதற்கு முன், மோடி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் பேசிய சில வார்த்தைகள் சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவங்கள் நடந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
08-பிப்-202007:49:10 IST Report Abuse
natarajan s ஒரு எதிர்க்கட்சி தலைவர் ஒரு நாட்டின் பிரதமரை இளைஞர்கள் தடி கொண்டு தாக்குவார்கள் என்று அவையில் கூறினால் அது தப்பில்லை ஆனால் ஏன் அப்படி கூறினார் என்றால் அதர்க்கு எதிர்வினையை ? ஒரு கண்ணியம் வேண்டும் , எதிர்க்கட்சி என்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம், இந்த ராகுல் ஒரு tubelight அல்ல mercury லைட் , நாட்டைப்பற்றி புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X