பொது செய்தி

தமிழ்நாடு

'மாணவர் நலன் சார்ந்த விஷயங்களில் அரசுக்கு, 'பட்டம்' இதழ் வழிகாட்டலாம்!'

Added : பிப் 08, 2020
Advertisement

சென்னை : ''மாணவர்களின் நலன் சார்ந்த விஷயங்களில், 'தினமலர் - பட்டம்' இதழ், அரசுக்கு வழிகாட்டினால், அவற்றை, அரசு பரிசீலிக்கும்,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.'தினமலர்' நாளிதழின், இணைப்பிதழான, 'பட்டம்' சார்பில், 'நாசா' விண்வெளி ஆய்வு மையம் செல்லும் மாணவர்களுக்கான வினாடி - வினா நிறைவு நிகழ்ச்சி, சென்னையில்நேற்று நடந்தது.

அதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கெட்டுகளையும், சுழல் கோப்பைகளையும் வழங்கி, அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிகையான, 'தினமலர்' நாளிதழின் இணைப்பிதழாக வெளியாகும், 'பட்டம்' இதழ் வெளியானதில் இருந்து, நான் படித்து வருகிறேன்; மிகவும் அருமையாக உள்ளது. வெகுமதி'பட்டம்' என்றால், அடுத்த நிலை பட்டப்படிப்பு, உயரே பறக்கும் பட்டம் என்னும் பொருள்படும். இந்தப் பெயர், மிகவும் அருமையாக உள்ளது.

இதில், படித்தவர்கள், தாங்கள் படித்ததை மீள் பார்வை செய்வதற்கும், தற்போது படிக்கும் மாணவர்களுக்கு, அறிவை விசாலமாக்கும் விஷயங்களும், மனதை நெகிழ்வாக்கும் விஷயங்களும், நிறைய உள்ளன.'பட்டம்' தான், தொடர்ச்சியாக மாணவர்களுக்காக, தமிழில் வெளியாகும் இணைப்பிதழ். இதில், பல்வேறு விஷயங்கள் வருகின்றன.அதிலிருந்து, வினாடி -வினாவுக்கான கேள்விகளை தொகுத்து, நான்கு மண்டலங்களாக பிரித்து, மாணவர்களுக்கான பல்வேறு தேர்வுகளை நடத்தி, 'பதில் சொல்; அமெரிக்கா செல்' என்ற, நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது.

தற்போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மண்டல மாணவர்களுக்கான, பதிலளிக்கும் சுற்று, மிகுந்த போட்டிக்கு இடையில் நிறைவடைந்துள்ளது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!வெற்றி பெற உழைத்து, இங்கு வந்து, தோல்வி என்னும் வெகுமதியை பெற்றிருப்போருக்கு கூடுதல் வாழ்த்துகள். ஏனென்றால், தோல்வி தான், சிறந்த வெகுமதி. அதை பெற்றவர்கள், வெற்றிக்கான காரணங்களை, வெகுவாக அலசி ஆராய்வர்.இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றோர், 'நாசா' விண்வெளி ஆய்வு மையம் செல்லப் போகின்றனர்.

போட்டி மனப்பான்மைநம், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில், சமீபத்தில், ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியபோது, கடைசி நிமிடங்களில் தோல்வி அடைந்தது. அப்போது, நம் பிரதமர் மோடி, நம் வீரத் தமிழரும், இஸ்ரோ தலைவருமான சிவனை கட்டியணைத்து, அவரின் கண்ணீரை தோள்களில் வாங்கி, 'நாம், 99 சதவீதம் வெற்றி பெற்று விட்டோம்' என்றார். ஒரு சதவீதம் தோல்விக்கு காரணம் என்பதை, நம் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

இதுபோல், வெற்றி பெற்றவர்கள், ஆராய்வதில்லை. இதனால், பல வெற்றியாளர்கள், எளிதில் தோல்வியடைவர்.இன்று, தோல்வியைத்தழுவியவர்கள், படிப்பினையைக் கற்றுக் கொள்ளுங்கள். இது, வாழ்விற்கு உதவும். இத்தனை மாணவர்களுக்கு மத்தியில், போட்டி மனப்பான்மையை வளர்த்து, தங்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளித்த, 'தினமலர்' நாளிதழை பாராட்டுகிறேன்.தற்போது, கல்வித் துறையில், மிகப் பெரிய மாற்றங்கள் உருவாகி வருகின்றன. நம்மைச் சுற்றி, உலகமே விரைவான மாற்றங்களை சந்தித்து வருகிறது.

முன்பெல்லாம், தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, மாணவர்கள் தரவரிசைப் பட்டியலில், முதல் மூன்று இடங்களைப் பிடித்தோரின் பெயரும், படமும் வெளியாகும். அதேபோல், அந்த பட்டியலில் இடம் பிடிக்க முடியாமல் போனோரின், தற்கொலைப் பட்டியலும் வெளியாகும். ஆர்வம்இப்போதெல்லாம், மாணவர்கள், அவ்வாறு தற்கொலை செய்து கொள்வதில்லை. தற்போது, பாடத்திட்டம், கற்பிக்கும் சூழல், கற்கும் சூழல் என, எல்லாம் புதிதாக மாறி வருகிறது. தற்போது, ஆசிரியர்களுக்கு முன்பாகவே, எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள, மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆசிரியர்களுக்குப் போட்டியாளராக, 'கூகுள்' மாறியுள்ளது. அந்தளவுக்கு, தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. அவற்றை, ஆசிரியர்கள் கற்றுக் கொள்வது எளிதாக அமைவதில்லை. புதிய விஷயங்களை, பாடத்திட்டத்தில் கொண்டு வருவதற்கு முன்பாகவே, அவை நீர்த்து விடுகின்றன. தற்போது, மாணவர்கள், வீட்டிலிருந்தே பல விஷயங்களை கற்கின்றனர். பெற்றோரே கல்வியாளர்களாக இருப்பதால், மாணவர்களுக்கு, ஆசிரியர்களாகவும் உள்ளனர்.


எதிர்பார்ப்பு


அதேசமயம், மாணவர்கள், எதுவாக ஆசைப்படுகின்றனரோ, அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். பெற்றோரின் பார்வையிலிருந்து, பிள்ளைகளுக்கு உலகத்தைக் காட்டாதீர்கள். பிள்ளைகளின் பார்வையிலிருந்து, உலகத்தைப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். பெற்றோரின் நிறைவேறாத கனவுகளை, பிள்ளைகளின் மீது திணிக்காதீர்கள்.நாசாவுக்கு செல்லும் குழந்தைகள், இந்தியாவின் பார்வையிலிருந்து, அதைப் பாருங்கள். அதற்கு, இரண்டு நாள் வழிகாட்டியாக, 'இஸ்ரோ' இருக்க வேண்டும்.

மாணவர்களோடு நெருக்கமாக இருக்கும், 'பட்டம்' இதழ், மாணவர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்திருக்கும். அந்த வகையில், மாணவர்களின் நலன் சார்ந்த எதிர்பார்ப்புகளை, அரசுக்கு தெரிவித்தால், அவற்றை, அரசு பரிசீலிக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X