சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளிர் குழுவில் ரூ.100 கோடி மோசடி ; தர்ணாவில் ஈடுபட்ட 70 பேர் கைது

Added : பிப் 08, 2020
Share
Advertisement

சேலம் : மகளிர் சுய உதவிக் குழுவில், 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்ததாக புகார் அளிக்க வந்து, சேலம் கலெக்டர் அலுவலகத்தில், தர்ணாவில் ஈடுபட்ட, மதுரை சின்னப்பிள்ளை உட்பட, 70 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை, 'தானம்' அறக்கட்டளை நிறுவனர் சின்னப்பிள்ளை. இவரது தலைமையில், ஏராளமான பெண்கள் நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள், 'சேலம் மாவட்ட களஞ்சியம் மகளிர் குழுக்களில் நடந்துள்ள பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக விசாரிக்க வேண்டும்' என, கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் புகார் அளித்தனர்.தொடர்ந்து, மதியம், 12:40 மணிக்கு, உள்புற வளாகத்தில், தரையில் அமர்ந்து, கோரிக்கை அட்டை ஏந்தி, தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், சின்னப்பிள்ளை உட்பட, 70 பெண்களை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர்.

ஒருங்கிணைப்பாளர்நிருபர்களிடம், சின்னப்பிள்ளை கூறியதாவது:தானம் அறக்கட்டளையின் அங்கமான, 'களஞ்சியம்' பெயரில், தமிழகம் உட்பட, 14 மாநிலங்களில், 50 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களில், 20 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 20 ஆண்டுகளுக்கு மேலாக, சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் சிவராணி. அவர், 2019 பிப்ரவரியில், தனியாக, 'ஏஸ் பவுண்டேஷன்' தொடங்கி, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார். இதனால், மகளிர் குழுக்களைச் சேர்ந்த ஏழை பெண்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால், பணத்தை மீட்டுத்தர, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், முதல்வரை சந்திப்பதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு, அவர் கூறினார். தானம் அறக்கட்டளை, சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளர் லோகமாதா கூறியதாவது:சேலம் மண்டலத்தில், 5,000 குழுக்களில், 52 ஆயிரம் பேர் உள்ளனர். குழு பெண்கள் கடன் பெறும்போது, குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படும். கடன் தொகை, முழுமையாக, வட்டியுடன் திருப்பி செலுத்திய பின்பும், பிடித்தம் செய்த தொகையை திருப்பித் தரவில்லை. \

மேலும், செலுத்திய தவணை தொகையை, கடன் நிலுவையில் வரவு வைக்காமல், முதலீட்டில் வரவு வைத்து, கடன், வட்டி தொகை, அப்படியே இருப்பதாக கணக்கு காட்டி மோசடி நடந்துள்ளது. அதிக கடன் பெற்ற பெண்களிடம் வீட்டு பத்திரம் வாங்கி, கடனை அடைத்தும், அதை திருப்பித் தரவில்லை. களஞ்சியம் பெயரில், சில உறுப்பினர்களை, ஏஜன்டாக நியமித்து, பணம் வசூலித்து, உறுப்பினர்களுக்கு தெரியாமல், 'ஏஸ் பவுண்டேஷன்' பெயரில் வரவு வைத்து, 240 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.

அதிகாரிகள் உடந்தைஇதற்கு, வங்கி அதிகாரிகளும் உடந்தை. பணத்தை மீட்கும் வரை, போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.'ஏஸ் பவுண்டேஷன்' நிர்வாகி சிவராணி கூறியதாவது:தானம் அறக்கட்டளை விதிப்படி, நிர்வாக இயக்குனர் பதவியில், 60 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. தற்போதுள்ள, வாசிமலைக்கு, 66 வயது ஆகிறது. அவர், முறைகேடாக பதவி வகிக்கிறார்.இதுவரை, தானம் அறக்கட்டளைக்கு, 3.5 கோடி ரூபாய்க்கு மேல், நன்கொடை கொடுத்தாகி விட்டது. மேலும், பணம் கேட்டு நெருக்கடி கொடுப்பதால், விலகி விட்டோம்.

சேலம் மாவட்டத்தில், 80 கோடி ரூபாய், வங்கி முதலீடாக உள்ளது. 160 கோடி ரூபாய், உறுப்பினர் கடன் கணக்கில் உள்ளது. எங்கள் கட்டுப்பாட்டில், 5,300 குழுக்கள் உள்ளன. முறைகேடு காரணமாக நீக்கப்பட்ட, ஏழு குழுக்களை மீண்டும் ஒருங்கிணைத்து, எங்களுக்கு எதிராக கொம்பு சீவி விடப்பட்டுள்ளது. இந்த உண்மை அனைத்தும், மதுரை சின்னப்பிள்ளைக்கு நன்கு தெரியும். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இந்த மோசடி தொடர்பாக, இதுவரை போலீசில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X