பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டிற்காக தங்கம் வெல்வதே இலக்கு! தடகள வீராங்கனை ருத்திகா உற்சாகம்

Updated : பிப் 08, 2020 | Added : பிப் 08, 2020
Advertisement
 நாட்டிற்காக தங்கம் வெல்வதே இலக்கு!  தடகள வீராங்கனை ருத்திகா உற்சாகம்

அசாமில், ஜனவரியில் நடந்த, தேசிய அளவிலான, 'கேலோ இந்தியா' தடகள போட்டியில், 100 மீ., ஓட்டப்பந்தயத்தில், வெள்ளி வென்றவர், சென்னை வீராங்கனை ருத்திகா, 15. இந்த போட்டியில், பந்தய துாரத்தை, 12.26 நொடிகளில் கடந்து, புதிய சாதனை படைத்தார். தடகளத்தை பொறுத்த வரை, இவர் தான் தமிழகத்தின் சமீபத்திய அடையாளம். ''சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, நாட்டிற்காக பதக்கங்களை குவிக்க வேண்டும்,'' என, நம்பிக்கை தெரிவித்த அவரிடம், வாழ்த்து சொல்லி பேசினோம்.

ருத்திகா பற்றி சொல்லுங்க?

சென்னை பூர்வீகம். சேத்துப்பட்டு, மெக்னிக்கல்ஸ் சாலையில் வீடு. தந்தை சரவணன், தொழில் பிரிவு ஆலோசகர். தாய் காஞ்சனா இல்லத்தரசி. சகோதரி ஹர்ஷினி, தடகள வீராங்கனை. நான் நுங்கம்பாக்கம், குட்ஷெப்பர்டு மெட்ரிக் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறேன்.

தடகளத்தில் ஆர்வம் எப்படி?

இயல்பாகவே, சிறு வயதில் இருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் இருந்தது. சகோதரி பயிற்சிக்காக செல்லும் போது, நானும் மைதானத்திற்கு சென்று, வேடிக்கை பார்ப்பேன். அப்படி ஆர்வம் ஆரம்பமானது.என், 7 வயதில், மற்றவர்களை விட நான் வேகமாக ஓடுவதை, பெற்றோர் கண்டறிந்தனர். என்னையும் பயிற்சிக்கு அனுப்பினர். பந்தயத்திற்கு தேவையான திறன், எனக்கு இயற்கையாக உள்ளதாக பயிற்சியாளர்கள் கூறியதால், தீவிரமாக கவனம் செலுத்த துவங்கினோம். ஏழு ஆண்டு பயிற்சி மேற்கொண்டு, போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன்.





பங்கேற்ற போட்டிகள் வென்ற பதக்கங்கள் பற்றி?

நான், 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். சென்னை மாவட்ட போட்டியில், 100 மீ., ஓட்டப்பந்தயத்தில், வெள்ளி; நீளம் தாண்டுதலில், தங்கம் வென்றேன்.மதுரையில் நடந்த மாநில ஓபன் போட்டியில், 100 மீ., ஓட்டப்பந்தயத்தில், தங்கம்; நீளம் தாண்டுதலில் வெள்ளி கைப்பற்றினேன்.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடந்த, ஜூனியர் தேசிய தடகள போட்டியில், 100 மீ., ஓட்டப்பந்தயத்தில், வெள்ளி; நெய்வேலியில் நடந்த, மாநில அளவிலான, பாரதியார் மற்றும் குடியரசு தின விழா போட்டியில், 100மீ., 200மீ., மற்றும் ரிலே ஆகிய மூன்று போட்டிகளிலும், வெள்ளி வென்றேன். கடந்த, 2019ல், இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில், ஹரியானாவில் நடந்த தேசிய பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில், 100 மீ., ஓட்டப்பந்தயத்தில், வெண்கலம்; 'ரிலே'வில், வெள்ளி கைப்பற்றினேன்.

தற்போது, 16 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில், சென்னையில், சில மாதங்களுக்கு முன் நடந்த மாநில போட்டியில், 100 மற்றும் 200 மீ., ஓட்டப்பந்தயம் பிரிவில் தங்கம் வென்றேன். அந்த போட்டியில், 'சிறந்த வீராங்கனை' என்ற விருதும், எனக்கு கிடைத்தது. கடந்த செப்டம்பரில், கர்நாடகாவில் நடந்த தென் மண்டல தேசிய அளவிலான போட்டியில், 100 மற்றும் 200 மீ., ஓட்டப்பந்தயம் பிரிவில், தங்கம் வென்றேன். இதில், 100 மீ., பிரிவில், புதிய சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ரிலேவில் வெண்கலம் வென்றேன்.

சத்தியமங்கலத்தில் நடந்த மாநில அளவிலான ஓபன் தடகளம், ஓட்டப்பந்தயம், 100 மீ., பிரிவில் தங்கம் மற்றும் 200 மீ., பிரிவில் வெண்கலம் கைப்பற்றினேன். மூன்று மாதங்களுக்கு முன், குண்டூரில் நடந்த ஜூனியர் தேசிய போட்டியில், 100 மீ., ஓட்டப்பந்தய பிரிவில் தங்கம் மற்றும் ரிலேவில் வெண்கலம் வென்றேன். பள்ளிக்கல்வி துறை சார்பில், நாமக்கல்லில் நடந்த மாநில அளவிலான போட்டியில், 100 மீ., ஓட்டப்பந்தயத்தில், தங்கம் மற்றும் ரிலேவில் வெண்கலம்; இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில், பஞ்சாபில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், 100 மீ., ஓட்டப்பந்தயம் பிரிவில், வெண்கலம் கைப்பற்றினேன்.

நடப்பாண்டு ஜனவரியில், அசாமில் நடந்த, 'கேலோ இந்தியா' தேசிய போட்டியில், 100 மீ., ஓட்டப்பந்தயம் மற்றும் 'ரிலே' ஆகிய இரு பிரிவுகளிலும், வெள்ளிப்பதக்கம் பெற்றேன்.

அடுத்த இலக்கு?

தேசிய அளவில், நம்முடைய வீராங்கனையர் உருவாக்கி உள்ள சாதனைகளை, வெற்றி கொள்ள வேண்டும். அடுத்து வர உள்ள, யூத் ஆசிய தடகளம் மற்றும் யூத் ஒலிம்பிக் ஆகிய போட்டிகளில், நாட்டிற்காக தங்கம் வெல்ல வேண்டும். இது தான் என்னுடைய இலக்கு.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X