பொது செய்தி

தமிழ்நாடு

பாசனத்திற்கு சாத்தனுார் அணை திறப்பு

Added : பிப் 08, 2020
Advertisement
 பாசனத்திற்கு சாத்தனுார் அணை திறப்பு

திருக்கோவிலுார்: சாத்தனுார் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று திருக்கோவிலுாரை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.திருக்கோவிலுார் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளின் இரண்டாம் போக பயிர்களுக்கு சாத்தனுார் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் இருந்து திறக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி விவசாயிகளின் தேவைக்கேற்ப 1200 மில்லியன் கன அடி நீர் திறக்க பொதுப்பணித் துறை நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.அதன்படி நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் இரண்டு நாட்களுக்கு, (இன்று காலை 8:00 மணி வரை) தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படுகிறது.

தொடர்ந்து 21ம் தேதி வரை 13 நாட்களுக்கு வினாடிக்கு 700 கன அடி வீதமும், அடுத்து 27ம் தேதி வரை 6 நாட்களுக்கு தினமும் 400 கன அடி வீதமும், அடுத்து 28ம் தேதி காலை 8:00 மணிவரை 389 கன அடி என மொத்தம் 1,200 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படுகிறது.இந்த தண்ணீர் நேற்று காலை 8:00 மணி அளவில் மணலுார்பேட்டையை வந்தடைந்தது. இன்று 8ம் தேதி மாலை திருக்கோவிலுார் அணைக்கட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணைக்கட்டிலிருந்து பம்பை வாய்க்கால், ராகவன் வாய்க்கால், மலட்டாறு, சித்தலிங்கமடம் வாய்க்கால் என தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் சென்று 5000 ஏக்கர் பரப்பளவில் இரண்டாம் போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும் என வேளாண் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.மேலும், இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தென்பெண்ணை ஆற்று ஆழ்துளை கிணற்றுப் பாசன விவசாயிகள் பயன் பெறுவதுடன், செஞ்சி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி, வேட்டவலம் கூட்டு குடிநீர் திட்டங்கள் பயன் பெற வழிவகை ஏற்பட்டுள்ளது.

திருக்கோவிலுார் அணைக்கட்டை தாண்டி விழுப்புரம் வரை தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரவேண்டுமென அரகண்டநல்லுார், திருவெண்ணெய்நல்லுார் என ஆற்றை ஒட்டியுள்ள விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு விழுப்புரம் வரை தண்ணீர் செல்ல பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X