திருப்புவனம்:திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம், அல்லிநகரம், கலியாந்துார், திருப்பாச்சேத்தி, ஏனாதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்டவைகள் பயிர் செய்யப்படுகின்றன.
வைகை ஆற்றங்கரை யோரம் உள்ள கிராமங்களில் திறந்த வெளி கிணறு அதிகம், சற்று உள்ளடங்கிய கிராமங்களில் திறந்த வெளி கிணறு இருந்தாலும் ஆழ்துளை கிணறுகளைத்தான் விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.கடந்த 4 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் திறந்த வெளிகிணறுகள் அனைத்தும் வறண்டு விட்டன.
விவசாயிகள் பலரும் 200 அடி முதல் 600 அடி ஆழம் வரை ஆழ்துளை கிணறுகள் அமைத்து நீர் மூழ்கி மோட்டார்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தனர்.தொடர்ச்சியாக மழை இல்லாததால் ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது. கடந்தாண்டு நவம்பர் முதல் வடகிழக்கு பருவமழை பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.
நீர்மட்டம் உயர உயர மேலே உள்ள மண், களிமண் சரிந்து மோட்டார் அனைத்தும் மூடிவிட்டன.300 அடிமுதல் 600 அடி ஆழத்திற்கு இறக்கியநீர் மூழ்கி மோட்டாரினுள்மணல், களிமண் சேர்ந்து மோட்டார்களை இயக்க முடியவில்லை. தொடர்ந்து மோட்டார்களை இயக்கி வந்த விவசாயிகளுக்கு பிரச்னையில்லை. ஓராண்டாக மோட்டார்களை இயக்காமல் இருந்த சிறு குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார்களை வெளியே எடுத்து பழுது பார்க்க 7 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகி வருகிறது.வேளாண்துறை பழுதாகியுள்ள பம்ப்செட் குறித்து கணக்கெடுத்து விவசாயிகளுக்கு பராமரிப்பு செலவு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.விவசாயிகள் கூறும்போது: மணல், களிமண் சேர்ந்து பம்ப்செட் பழுதடைந்து விட்டன. அரசு சார்பில் சிறுகுறு விவசாயிகளுக்கு கிணறு அமைக்க, மோட்டார் வாங்க மான்யத்துடன் கடன் வழங்கப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயம் நடைபெறாததால் பணமின்றி தவிக்கின்றோம், இந்தாண்டு பருவ மழை காரணமாக விவசாயம் நடந்துள்ளது.தொடர்ந்து விவசாயம் செய்ய பம்ப்செட் அவசியம் தேவை, எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE