பாகனேரி தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில்ரூ.5க்கு 10 லிட்டர் சுத்திகரித்த குடிநீர் வழங்கல்: 10 கிராமங்கள் பயன்பெறும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாகனேரி தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில்ரூ.5க்கு 10 லிட்டர் சுத்திகரித்த குடிநீர் வழங்கல்: 10 கிராமங்கள் பயன்பெறும்

Updated : பிப் 08, 2020 | Added : பிப் 08, 2020
Share
 பாகனேரி தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில்ரூ.5க்கு 10 லிட்டர் சுத்திகரித்த குடிநீர் வழங்கல்: 10 கிராமங்கள்  பயன்பெறும்

சிவகங்கை:ரூ.5 போட்டால் 10, ரூ.1 க்கு 2 லிட்டர் வீதம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கி சிவகங்கை அருகே பாகனேரி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் மக்களின் தாகத்தை தீர்த்து வருகிறது.

தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாயிகளுக்கு பயிர் கடன், நகை அடமான கடன், விவசாயத்திற்கு தேவையான உரம் வினியோகம் செய்யும் பணிகளை தான் பார்த்திருக்கிறோம். ஆனால், கடந்த 3 ஆண்டாக பாகனேரி மட்டுமின்றி சுற்றுப்புறத்தை சேர்ந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது பாகனேரி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம்.

சங்க தலைவர் எல்.தேவதாஸ் முயற்சியால், சிவகங்கை முன்னாள் எம்.பி., செந்தில்நாதனிடம் நிதியை பெற்று, ரூ.7.80 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்துள்ளார். ஆழ்குழாய் கிணறு அமைத்து, அதன் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குடிநீர் எடுத்து வந்து, சுத்திகரித்து மக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர். இதற்காக தானியங்கி இயந்திரம் மூலம் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இயந்திரத்தில் நாணயம் விழுந்தால் உடனே குடிநீர் பிடிக்கலாம்.ரூ.5க்கு 10 லிட்டர் குடிநீர்அதில் 5 ரூபாய் நாணயத்தை போட்டால் 10 லிட்டரும், ஒரு ரூபாய் நாணயத்தை போட்டால் 2 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிடிக்கலாம். இதன் மூலம் பாகனேரி, காடனேரி, நெற்புகபட்டி, கூமாச்சிபட்டி, கொட்டாபட்டி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமத்தினர் பயனடைந்து வருகின்றனர்.

இதன் மூலம் கடந்த ஆண்டு நிலவிய குடிநீர் தட்டுப்பாடு பிரச்னையை பாகனேரி மக்கள் சமாளித்தனர்.சுத்திகரித்த குடிநீர்கிடைக்குதுபாகனேரி ஜி.நித்யகல்யாணி கூறியதாவது: இங்குள்ள குடிநீர் ஊரணியில் தண்ணீர் எடுத்து வந்து, சுத்தம் செய்து அவற்றை தான் குடித்தும், சமையலுக்கும் பயன்படுத்தினோம். இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைத்ததால், குறைந்த கட்டணத்தில் சுகாதாரமான குடிநீரை எடுத்து செல்கிறோம். இவற்றை குடிக்கவும், சமையலுக்கும் பயன்படுத்துகிறோம். 10 க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இங்கு குடிநீர் பிடித்து செல்கின்றனர், என்றார்.

குடிநீரில் மாதம்ரூ.25 ஆயிரம்

பாகனேரி தொடக்க கூட்டுறவு கடன் சங்க தலைவர் எல்.தேவதாஸ் கூறியதாவது: சங்கத்திற்கு வருவாய் பெற்றுத்தரவும், தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க செய்யும் நோக்கில், இத்திட்டத்தை எம்.பி., நிதி மூலம் பெற்றேன். தொடர்ந்து முறையாக இயந்திரத்தை பராமரித்து வருவதால், தடையின்றி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய முடிகிறது.

கடந்த ஆண்டில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியபோது மாதம் 90 ஆயிரம் ரூபாய் வரை குடிநீர் மூலம் வருவாய் கிடைத்தது. தற்போது நல்ல மழை பெய்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால், மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் எடுக்கலாம், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X