வேறெதாவது இருந்தா சொல்லுங்க சார்...!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'வேறெதாவது இருந்தா சொல்லுங்க சார்...!'

Added : பிப் 08, 2020
Share
 'வேறெதாவது இருந்தா  சொல்லுங்க சார்...!'

மண்டல அளவிலான சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஐ.ஜி., பிரமோத்குமார், திருப்பத்துார் கலெக்டர் சிவன் அருள், வேலுார் சரக டி.ஐ.ஜி., காமினி மற்றும் நான்கு மாவட்ட, எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.பின், போக்குவரத்து துறை முதன்மைச் செயலர், எஸ்.ஜவஹர், நிருபர்களிடம், 'இந்திய அளவிலான சாலை விபத்துகளில், 2016ல் தமிழகம் முதலிடமாக இருந்தது. மூன்று ஆண்டுகளாக விபத்துகளை தவிர்க்க, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

'தமிழகத்தில் மது அருந்தி, வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட சாலை போக்குவரத்து விதிமுறைகள் மீறியது தொடர்பாக, கடந்த ஆண்டு மட்டும், 1.20 லட்சம் வாகன ஓட்டுனர்கள் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 'வரும் காலங்களில் வாகன ஓட்டுனர் உரிமம் எடுக்க, சிறப்பு பாடத் திட்டம் கொண்டு வரப்படும்' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'இதைக் கேட்டு கேட்டு போரடிச்சுப் போச்சு... வேறெதாவது இருந்தா சொல்லுங்க சார்...' என, கமென்ட் அடிக்க, மற்ற நிருபர்கள் சிரித்தனர்.


'எட்டை கண்டால் அரசியல்வாதிகளுக்கு பயம்!'


'புத்தக திருவிழா - 2020' திருப்பூரில் நடந்தது. அதில் நடந்த கருத்தரங்கில், 'நொய்யல் நதி' என்ற தலைப்பில் எழுத்தாளர் சூர்யா சேவியர், 'ஐந்து வகை நிலங்கள் இருந்தாலும், தமிழகத்தில், பாலை என்ற மணல் நிலம் இல்லை. உலகம் உருவான போது, ஒரே கண்டமாக தான் இருந்துள்ளது. பூமியில் பிளவு ஏற்பட்டு, ஏழு கண்டங்கள், தற்போது உள்ளன. உலகம் முழுவதும், ஏழு கண்டம் தான் இருக்கின்றன; இந்தியாவில் மட்டும் தான், எமகண்டத்தை, எட்டாவது கண்டமாக வைத்திருக்கின்றனர்.
அதற்காகவே, எட்டு என்ற எண்ணை கண்டால், அரசியல்வாதிகள் தலைத்தெறிக்க ஓடி விடுகின்றனர்' என்றார். கருத்தரங்கில் பார்வையாளர் ஒருவர், 'மக்கள் மறந்து, வேலையை பார்த்துட்டு இருந்தாலும், அரசியல்வாதிகள் தான், எமகண்டத்த நினைச்சுட்டே, பயந்துட்டு இருக்காங்க...' என, 'கமென்ட்' அடிக்க, அருகிலிருந்தோர் கமுக்கமாக சிரித்தனர்.


'நடிகர் கமல் முட்டாள்!'


பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, நிருபர்களிடம் அவர், 'நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடந்தது குறித்து, எனக்கு விபரம் தெரியாது. அநியாயம் நடந்திருந்தால், அவர் வழக்கு தொடரலாம். நடிகர் ரஜினி, பா.ஜ.,விற்கு வர, என் உதவி தேவை இல்லை. 'ஹிந்து மதத்திற்கு அவர் ஆதரவாக பேசினால், நானும் அவருக்கு ஆதரவாக பேசுவேன். தலைமறைவாகியுள்ள நித்தியானந்தா, நிரவ் மோடி ஆகியோரை பிடிக்க, நான் யார்?
எனக்கு, மத்திய நிதி அமைச்சர் பதவி கொடுங்கள்; பிடித்துக் கொடுக்கிறேன். நடிகர் கமல் முட்டாள்; அவருக்கு பதில் சொல்ல தேவையில்லை. சசிகலா வெளியே வந்த பின், அவருக்கு கட்டாயம் உதவி செய்வேன்' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'நிதி அமைச்சர் பதவி கொடுத்தால், தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை பிடித்து தருவாராம்; அவர்கள் மறைந்திருக்கும் இடம் சுப்பிரமணியசாமிக்கு தெரியும் போல...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் தலையை குனிந்தபடி சிரித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X