சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

உளறுவாரா டிரம்ப்?

Added : பிப் 08, 2020
Share
Advertisement
 உளறுவாரா டிரம்ப்?

'நமக்கு மரியாதை செய்தவர்களுக்கு, திரும்ப நாம் மரியாதை செய்வது தானே முறை; அதைத் தான், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு, பிரதமர் மோடி செய்யப் போகிறார்' என்கின்றனர், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள். கடந்தாண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது, டெக்சாசில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'எப்படி இருக்கீங்க மோடி!' என்பது தான், அந்த கூட்டத்தின் தலைப்பு. ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், பிரதமர் மோடியுடன் இணைந்து, டொனால்டு டிரம்பும் கலந்து கொண்டார்.

அப்போதே, இதே போன்ற ஒரு நிகழ்ச்சியை, இந்தியாவில் நடத்தி, டிரம்ப்பை பங்கேற்க வைக்க திட்டமிட்டிருந்தார், பிரதமர். இதையடுத்து, இந்த மாத இறுதியில் டிரம்ப், நம் நாட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வருகிறார். டில்லி, ஆக்ரா ஆகிய இடங்களுக்கு செல்லும் டிரம்ப், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான, குஜராத்தில் உள்ள ஆமதாபாதுக்கும் செல்கிறார். அங்கு, 700 கோடி ரூபாய் செலவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் அமரும் வகையில் கட்டப்பட்டு வரும், உலகின் மிகப் பெரிய விளையாட்டரங்கில், டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு, ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அரசியல் விமர்சகர்களோ, 'டொனால்டு டிரம்புக்கு, இடம் பொருள் பார்த்து பேசத் தெரியாது. ஏதாவது உளறிக் கொட்டுவார். ஆமதாபாதிலும், அப்படி எதாவது உளறிக் கொட்டாமல் இருந்தால் சரி தான்' என, கிண்டலடிக்கின்றனர்.


எதிர்பாரா இடத்திலிருந்து பாராட்டு!


எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த ஆதரவு குரலால், மகிழ்ச்சி பெருக்கில் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விடுகிறார், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டில்லி சட்டசபை தேர்தல், நேற்று நடந்து முடிந்து விட்டது. வெற்றி யாருக்கு என தெரியாமல், முக்கிய அரசியல் கட்சிகள், திக்... திக்... மனநிலையுடன் காத்திருக்கின்றன. 'கடந்த ஐந்தாண்டுகளில் பல நல்ல திட்டங்களை டில்லியில் செயல்படுத் தியுள்ளோம். பெண்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளோம். டில்லியில் மீண்டும் எங்கள் ஆட்சி தான்' என, நம்பிக்கையுடன் கூறுகின்றனர், கெஜ்ரிவாலின் சிஷ்யர்கள்.

தேர்தல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே வெளியிட்ட அறிக்கையில், 'கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறது. கெஜ்ரிவால் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்' என, தெரிவித்திருந்தார். இதைக் கேள்விப்பட்டதும், கெஜ்ரிவாலுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. உத்தவ் தாக்கரே, இதுவரை கெஜ்ரிவாலை பாராட்டியதே இல்லை.
டில்லியில், சிவசேனா ஆதரவாளர்கள் கணிசமாக உள்ளனர். அவர்களது ஓட்டு தங்களுக்கு விழும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார், கெஜ்ரிவால். 'உத்தவ் தாக்கரேவுக்கு உண்மையிலேயே பெரிய மனசுங்க' என, அனைவரிடமும் கூறி வருகிறார், கெஜ்ரிவால்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X