சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : பிப் 08, 2020
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'நீங்கள் மட்டும் தான், ஜாதி வாரி கணக்கெடுப்பு கேட்கிறீர்கள்; ஆனால், பல கட்சிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பே நடத்தக் கூடாது என்கின்றனவே' என, கூறத் தோன்றும் வகையில், பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி பேட்டி: தமிழகத்தில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். விரைவில் நடைபெற உள்ள, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து, இதை மேற்கொள்ள வேண்டும்.

'அதனால், 'எங்கள் அரசுக்கும், இளைஞர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்' என, மறைமுகமாக வேண்டுகிறீர்களா...' என, கொக்கி போடும் வகையில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பேச்சு: தமிழக முதல்வர்களாக இருந்த, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா, தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றதற்கு காரணம், இளைஞர்கள் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையும், அவர்கள் மீது இளைஞர்கள் அளித்த பேராதரவும் தான் காரணம்.

'வழக்கமாக இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம், கல்வி அமைச்சர் தானே பதிலளிப்பார்... இப்போது, எல்லா துறை கேள்விகளுக்கும், எல்லா அமைச்சர்களும், பொளந்து கட்டுறாங்களே...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் ராஜு பேட்டி: பள்ளி மாணவர்கள் இடையிலேயே கல்வியை விட்டு விலகுவதை தடுக்கத் தான், தமிழக அரசு ஏராளமான திட்டங்களை பின்பற்றி வருகிறது. உதவித் தொகையும் வழங்கி வருகிறது. இதை எல்லாம் அறியாத நடிகர் கமல் ஹாசன், தமிழகம் மீது வீண் பழி சுமத்துகிறார். அவர் இந்த விவகாரத்தை முழுமையாக தெரிந்து பேச வேண்டும்.

'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, யதார்த்தமாக பேசுகிறார். அவர் பேசுவது, தமிழக அமைச்சர்களுக்கு, பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது. அது, உங்களுக்கு பிடிக்கலையா...' என, கேள்வி கேட்கும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை: தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் என்பதை மறந்து, மத ரீதியாக, வரம்பு மீறி பேசுகிறார். அவரை, இந்திய கம்யூனிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது. அவரை உடனடியாக, அமைச்சரவையிலிருந்து கவர்னர் நீக்க வேண்டும்.

'நீங்கள் சொல்லும் சம வாய்ப்பு, சம அதிகாரம் எல்லாம் உங்கள் கட்சியில் இருக்கிறதா என, முதலில் எண்ணிப் பாருங்கள்; அதன் பின், அறிக்கை விடுங்கள்...' என, நெத்தியடியாக கூறத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை: நம் நாட்டில், சம வாய்ப்பும், சம வசதிகளும், சம கல்விச்சூழலும் செய்யப்படாத கல்விக் கூடங்கள் நிறைந்துள்ளன. எனவே, இத்தகைய சூழலில், அனைத்தையும் ஒரே நிலையில் வைத்து பார்ப்பது, கண்மூடித்தனமான சமூக அநீதி.

'பட்ஜெட் உரையில், ஒரு வார்த்தை தான், அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அதற்குப் பிறகு, திரும்பத் திரும்ப கூறி, தி.மு.க., மற்றும் எதிர்க்கட்சிகள், சரஸ்வதி, சிந்து நாகரிகத்தை, ரொம்ப, 'பாப்புலர்' ஆக்கி விட்டன...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேச்சு: நாட்டில் தற்போது நடைபெறும் சம்பவங்களுக்கும், கடந்த கால வரலாறுக்கும், காவி சாயம் பூசப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகம் என்பதை, சரஸ்வதி சிந்து நாகரிகம் என பெயர் மாற்றியுள்ளனர்.
'நாட்டின் நடுநிலையாளர்கள், வளர்ச்சியை விரும்புவோர் குரலை மதிக்காமல், உங்களின் காங்., கட்சி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேசி வருகிறதே...' என, 'கிடுக்கி' போடும் வகையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி: தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித் ஷாவின் குரல் போல பேசி வருகிறார். மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க, பா.ஜ., நினைக்கிறது. அதற்கு, நடிகர் ரஜினி துணை போகிறார்.

'மேற்கு தொடர்ச்சி மலை இருக்கட்டும்; உங்கள் கட்சி நிலை என்ன என்பதை அறிந்தீர்களா...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு: மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க, மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன; அறிஞர்கள் குழு பரிந்துரைகளின்படி, திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை அறிய விரும்புகிறேன்.

'கல்வெட்டுகளை படிக்க, இக்கால இளைஞர்களுக்கு தெரியவில்லை. சொல்லிக் கொடுத்தால் தேவலை...' என, கூறத் தோன்றும் வகையில், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் அரவிந்த் ஜாம் கேட்கர் பேச்சு: தமிழ் கல்வெட்டுகள் பலவற்றில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, வானியல் சாஸ்திரங்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. சூரிய கிரகணம் நிகழ்வதை, இப்போது, பஞ்சாங்கம் மூலம் அறிகிறோம். அந்த காலத்தில் அவற்றை எப்படி ஆராய்ந்தனர் என்பதை, கல்வெட்டுகள் விளக்குகின்றன.

'நல்ல முயற்சி, அனைத்து பகுதிகளிலும் அவசியம் செய்ய வேண்டிய பணி...' என, பாராட்டத் தோன்றும் வகையில், ஆதார் ஆணையத்தின் துணை இயக்குனர் சந்தான கோபால் பேட்டி: நாட்டிலேயே முதல் முறையாக, தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் தான், இறந்தவர்களின் ஆதார் எண் சேகரிக்கப்படுகிறது. இதனால், இறந்தவர்கள் எத்தனை பேர் என்ற விபரம், முழுமையாக தெரிய வரும்; முறைகேடுகள் தவிர்க்கப்படும்.

'எல்லா விவகாரங்களுக்கும் குரல் கொடுக்க, நடிகர் ரஜினி, எந்த கட்சிக்காவது, செய்தித் தொடர்பாளரா இருக்காரா என்ன...' என, கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி: குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். உ.பி.,யில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பலர் கொல்லப்பட்டனர். அப்போதெல்லாம் சும்மா இருந்த நடிகர் ரஜினி, இப்போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்.'பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது என்பது இது தானோ?' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி பேச்சு: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த, தமிழக அரசு முயற்சித்து வருகிறது. இது தான் அரசின் கொள்கை. மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய் செலவிடுகிறோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X