சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : பிப் 08, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 'டவுட்' தனபாலு

தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்: எங்களை, கோமாளிகள் போல, சில ஊடகங்கள் சித்தரிக்கின்றன. அதற்கு தேவையான வேலைகளை, எதிர்க்கட்சிகள் செய்கின்றன. எத்தகைய விமர்சனங்களையும் எதிர்கொள்ள, ஜெ., எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். விமர்சனங்களுக்காக, பொதுவாழ்வை விட்டு நாங்கள் விலக மாட்டோம்.

'டவுட்' தனபாலு: எங்களுக்கு ஜெ., அதை கற்றுக் கொடுத்தார்; இதைக் கற்றுக் கொடுத்தார் என, அவர் இல்லாத இந்த வேளையில், உங்களைப் போல பல அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இதனால், ஜெ., உங்களுக்கு எப்போது இதை எல்லாம் கற்றுக் கொடுத்தார்? ஏனெனில், அவர் இருக்கும் பக்கமே செல்ல மாட்டீர்களேங்கறது தான், மக்களின், 'டவுட்!'

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: குடியுரிமை திருத்த சட்டத்தை, மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். அதற்காகத் தான், பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் போராட்டத்தை, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்தி வருகின்றன. அதற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால், எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி, மாபெரும் போராட்டம் நடத்துவோம்.

'டவுட்' தனபாலு: ஏற்கனவே, மூன்று மாதங்களாக, போராட்டங்களைத் தானே, உங்கள் கட்சியும், உங்களின் தோழமை கட்சிகளும் நடத்தி வருகின்றன. இதைத் தவிர வேறு ஏதேனும் உருப்படியான வேலையில் இறங்கவில்லையே... இந்நிலையில், அடுத்த கட்ட போராட்டத்திற்கு இப்போதே முஸ்தீபா? தமிழகத்தில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் வரை, போராட்டங்களை தொடர்வீர்கள் என்பதில், 'டவுட்'டே இல்லை!

பத்திரிகை செய்தி: நடிகர் விஜய் நடிக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பு, கடலுார் மாவட்டம் நெய்வேலியில் நடந்தது. அந்த இடத்தை, பா.ஜ.,வினர் முற்றுகையிட்டு, நடிகர் விஜய்க்கு எதிராக கோஷமிட்டனர். அதை அறிந்து அங்கு வந்த, திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், எதிர் கோஷமிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

'டவுட்' தனபாலு: இந்த இரண்டு கட்சிகளும் கோஷமிட்டதால், அந்த நடிகர் நடிக்கும் படத்திற்கு, கூடுதல் விளம்பரம் கிடைக்குமே தவிர, வேறு எதுவும் நடக்காது. இப்படி பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது தான், அந்த நடிகரின் நோக்கம்; அதை, தமிழக கட்சிகள் திறம்பட மேற்கொள்கின்றன என்பது, அவரைப் போன்ற நடிகர்களுக்கு, 'டவுட்' இல்லாமல் தெரியும்!
பத்திரிகை செய்தி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினி அளித்த பேட்டிக்கு, தமிழக ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்ததால் விரக்தி அடைந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'கேட்டை திறந்து பேட்டி அளித்தவருக்கு' முக்கியத்துவம் அளிக்கின்றன என, ஜாடை மாடையாக பேசி, தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

'டவுட்' தனபாலு: ஸ்டாலின், ஒரு நாளைக்கு, நான்கைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக பேட்டியளிக்கிறார்... போதாக்குறைக்கு, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், உலக விஷயங்களுக்கு எல்லாம் பதிலளிக்கிறார். ஆனால், அத்தனையும், மக்களுக்கும், ஊடகங்களுக்கும், 'போர் சப்ஜெக்ட்' ஆகவே இருக்கின்றன. அவர் அப்பா மாதிரி, 'தெறிக்க' விடுறா மாதிரி பேசத் தெரியலே... அதனால் தான், ரஜினி பேட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன என்பது ஏன், ஸ்டாலினுக்கு தெரிய மாட்டேன்கிறது, என்பது தான் என், 'டவுட்!'

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: தமிழகத்தில் தற்போது நடைபெறும், அ.தி.மு.க., அரசின் ஊழலை, கொலை, கொள்ளைகளை, சட்டசபை தேர்தலின் போது, மக்களிடம் எடுத்துச் சொல்வோம். ஆன்மிகம், ஹிந்து என்றெல்லாம் சொல்லி, தி.மு.க.,வை வீழ்த்த சிலர் திட்டமிட்டுள்ளனர்; அது நடக்காது.

'டவுட்' தனபாலு: 'இப்படி பேசும் நீங்கள், 'ஹிந்துக்கள் ஓட்டு, ஆன்மிகத்தை விரும்புவோர் ஓட்டு, தி.மு.க.,வுக்கு வேண்டாம்' என, அறிவிக்க வேண்டியது தானே. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நீங்கள் கொளுத்தி போட்ட போராட்டம், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு பலத்த அடியை கொடுக்கும் என்பதால் தான், தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உதவியை நீங்கள் நாடியுள்ளீர்கள்' என, ஆளும் தரப்பில் பேசப்படுகிறதே; உங்களுக்கு தெரியாதோ என்ற, 'டவுட்' எழுகிறதே!

தமிழக காங்., தலைவர் அழகிரி: நடிகர் விஜய், தன் படங்களில், ஆளும் கட்சிக்கு எதிராக காட்சிகள், வசனங்கள் வைப்பதால் தான், அவர் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதும், அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

'டவுட்' தனபாலு: சினிமா படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு, மறைமுக அரசியல் ஆர்வம் இருப்பதால் தான், படங்களில் ஆங்காங்கே, அரசியல் வசனங்களை வைக்கின்றனர் என்பது, தமிழக ரசிகர்களுக்கு, 'டவுட்' இல்லாமல் தெரியும். இப்போது அந்த நடிகருக்கு ஆதரவாக நீங்கள் முட்டு கொடுப்பதும், அரசியல் காரணங்களுக்கே என்பதும், எவ்வித டவுட்டும் இல்லாமல் மக்களுக்கு புரியும்!


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-பிப்-202016:35:30 IST Report Abuse
theruvasagan குடியுரிமை சட்டத்திற்கு இந்த மாதிரி வெட்டி எதிர்ப்பை பிடித்துக்கொண்டு தொங்கும் விளங்காத கட்சிகள் எல்லாம் நாசமாகிப் போனால்தான் நாடு விளங்கும். அது சீக்கிரம் நடக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X