சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம் ஏமாறினேன்!

Added : பிப் 08, 2020 | கருத்துகள் (3)
Advertisement
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம் ஏமாறினேன்!

ஆ.பட்டிலிங்கம், பேரூர், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: என் வயது, ௮௪. மின்சார வாரியத்தில், ௩௩ ஆண்டுகள் பணியாற்றி, கடைசியாக, வருவாய் மேலாளராக இருந்து, ஓய்வு பெற்றவன். என்னிடம், குறைந்த விலையில் வாங்கப்பட்ட, பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் மட்டுமே உள்ளது. அதில், ௨௦19 அக்டோபரில், ௧௦௦ ரூபாய்க்கு, 'ரீசார்ஜ்' செய்தேன்; அன்று மாலையே, என் கணக்கில் இருந்து, ௯௯ ரூபாய் பிடிக்கப்பட்டிருந்தது. எக்காரணத்திற்காக பிடிக்கப்பட்டது என அறிய, ௨௦௨௦ ஜனவரி, 21ல், கோவை பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தை அணுகினேன். அப்போது, 'நீங்கள் கேம் விளையாடி இருக்கிறீர்கள். அதற்காக பிடிக்கப்பட்டது' என, ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதற்கு, நான், 'அய்யா... என் மொபைலில், 'கேம்' விளையாடும் வசதியே இல்லையே! பின், எப்படி விளையாடி இருக்க முடியும்?' என்றேன். அதற்கு ஊழியர்கள், 'கேம் விளையாடுகிறீர்களா எனக் கேட்டு எஸ்.எம்.எஸ்., அனுப்பினோம். அதற்கு, நீங்கள் மொபைலில், அதற்கான பட்டனை தட்டி விட்டீர்கள். அதை, உங்கள் சம்மதம் என, நாங்கள் ஏற்று, பணத்தை பிடித்து விட்டோம்' என்றனர். உடனே, 'கேம் விளையாடுகிறீர்களா என, எஸ்.எம்.எஸ்., அனுப்பிய தகவல், எனக்கு தெரியாது.
வழக்கமாக, எஸ்.எம்.எஸ்.,சில் செய்திகள் வருவது உண்டு. அதை பார்த்து, சாதகமாக இருந்தால் பேசுவேன்; பாதகமாக இருந்தால், மொபைல் போனை, 'ஆப்' செய்து விடுவர். 'மொபைல் போனில் இருந்து, ௯௯ ரூபாய் பிடித்தது, முழுக்க முழுக்க நிர்வாகத்தின் தவறு தான்' என்றேன். பெண் ஊழியர் ஒருவர், 'விண்ணப்பம் எழுதிக் கொடுங்கள்' என்றார். நான் ஏற்கனவே தயாராக எழுதி வைத்திருந்த விண்ணப்பத்தை தந்தேன். 'இன்னும் ஓரிரு நாளில், உங்கள் பணம், 'ரீபண்ட்' செய்யப்படும்' என்றார். ஒரு வாரம் பார்த்தேன். என் பணம், ரீபண்ட் செய்யப் படவில்லை. பின், மீண்டும், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் சென்று, சம்பந்தப்பட்ட பெண் அலுவலரிடம் விசாரித்தேன். 'உங்கள் விண்ணப்பம் சம்பந்தப்பட்ட பிரிவுக்கு அனுப்பி விட்டேன். அங்கு சென்று பாருங்கள்' என்றார். என் மொபைலில், 99 ரூபாய், ஒரே நாளில் எடுத்த காரணத்தால் தான், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், இப்படி எல்லாம் நுகர்வோரிடம் ஏமாற்றுகிறது என்பதை உணர்ந்து, அவதிப்பட்டேன்!


எப்போது இந்நிலை மாறும்?


கு.அருண், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தேர்வு முறையில் மாற்றம் தேவை' என்ற தலைப்பில், வாசகர் ஒருவர், இதே பகுதியில் கடிதம் எழுதி இருந்தார். அதற்கு சில விளக்கங்களை அளிக்க உள்ளேன்... எவ்வளவு கடுமையான மாற்றங்களை அரசு கொண்டு வந்தாலும், அதை முறியடித்து, குறுக்கு வழிகளில், போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற, தேர்வாளர்கள் தயாராக உள்ளனர்.

கடைசியாக நடந்த, 'நீட்' தேர்வில், தமிழக மாணவர்கள் சிலர், உயர் கல்வி கற்ற பெற்றோர் உதவியுடன், எப்படி எல்லாம் தேர்வு எழுதி சிக்கினர்; சிறைக்கு சென்றனர்! அதில், அவர்களுக்கு உதவிய, அரசு அதிகாரிகள் யாரும் சிக்கவில்லை; புரோக்கர்களாக இருந்தோர் மட்டுமே சிக்கியுள்ளனர்.

தற்போது, தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய, 'குரூப்- - 4' தேர்விலும், முறைகேடுகள் நடந்து, தினமும் பலர் சிக்கி வருகின்றனர். தேர்வாணையம் நடத்திய பல தேர்வுகள், சந்தேகப்படும்படி அமைந்து விட்டது. ஊழல் நிறைந்துள்ள காலத்தில், உண்மையில் நேர்மையாக தேர்வு எழுதி, வெற்றி பெற்று, அரசு வேலையில் ஒருவர் அமர்வது, பெரிய சாதனை. அந்த அளவுக்கு, ஊழல், தேர்வாணையத்தில் இரண்டற கலந்து விட்டது. அன்று, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்னதை போல, ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும், ஒழுக்கமான குழந்தைகள் உருவாக்கப்பட்டால் தான், இந்த தவறுகள் அரங்கேறாது. தற்போது, குரூப் - 4ல் சிக்கிய சிலரே, பல ஆண்டுகளுக்கு மேலாக, 'கறுப்பு ஆடுகளாக' மாறி, சுற்றித் திரிந்தனர்.

அவர்கள், அரசு வேலைக்கு, குறுக்கு வழிகளில் லட்சக்கணக்கில் பணம் பெற்று, பலரை பணியில் சேர்த்து விட்டுள்ளனர். அந்த ஊழல் பணத்தில், கறுப்பு ஆடுகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். ஒட்டுமொத்த அரசு அலுவலகங்களிலும், இது போன்ற, கறுப்பு ஆடுகளால், லஞ்சம் இரண்டற கலந்து விட்டது. இப்போதைக்கு தமிழக மக்களுக்கு தேவை, நேர்மையையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் கல்வி!


ஹிந்துக்களை துாற்றி பேசுவதை நிறுத்தணும்!


வீ.ராஜகோபால், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 1971ல், தி.க.,வினர் மேற்கொண்ட ராமர் சிலை மீது, செருப்பு வீசிய விவகாரத்தை, நடிகர் ரஜினி, 'துக்ளக்' வார இதழ் ஆண்டு விழாவில் பேசினார். அவரது பேச்சு, தமிழக அரசியலில் சூடு பிடித்துள்ளது. ரஜினி பேச்சில், எந்த தவறும் கிடையாது. அவர் ஏற்கனவே கூறியுள்ளது போல், 'நான் எப்போ வருவேன்னு, எனக்கே தெரியாது... ஆனால், தேவையான நேரத்தில் கண்டிப்பாக வருவேன்' என, கூறி இருக்கிறார்.
'துக்ளக் வார இதழ் ஆண்டு விழாவில், பேசிய பேச்சுக்கு மன்னிப்பும் கேட்கப் போவதில்லை' என, அவர் கூறியுள்ளார். ரஜினியின் இந்த பேச்சு, கை தேர்ந்த அரசியல்வாதிக்குள்ள தகுதியாகவே, அனைவராலும் பார்க்கப்படுகிறது. ரஜினி கூறியுள்ள கருத்துக்கள் வாயிலாக, தி.க., மற்றும் எதிர்க்கட்சிகளின் முதுகு தோல் உறிக்கப்பட்டுள்ளது.

ஹிந்து மதத்தையும், அதன் சீரிய சித்தாந்தக் கருத்துக்களையும் மேம்படுத்தும் நிலையில், ரஜினி கூறியுள்ள கருத்தும் முக்கியத்துவம் பெறுகிறது. ரஜினி கூறியது போல, '2021ல் சட்டசபை பொது தேர்தல் வந்து விடுமே...' என்ற அச்சத்தில், தங்களுக்கு ஓட்டு சதவீதம் குறைந்து விடுமோ, மீண்டும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்ற பயம், திராவிட கட்சிகளை தொற்றியுள்ளது. 'வேலியில் போன ஓணானை, மடியில் கட்டிய கதை'யாக, ரஜினியின் பேச்சு, திராவிட கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேச்சுக்கு, பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கும், திராவிட கட்சியினர் ஆளாகியுள்ளனர்.

இனியாவது, ஹிந்துக்களையும், அவர்கள் பின்பற்றி வரும் கலாசார வழக்கங்களையும், துாற்றுவதை திராவிட கட்சிகள் நிறுத்த வேண்டும்!


உளுத்துப் போன பகுத்தறிவு கொள்கை!


எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: இந்த காலத்தில் உள்ளது போல, தகவல் தொடர்பு வசதிகள் மட்டும், அன்று இருந்திருந்தால், வீடியோ ஆதாரங்களை காட்டி, தி.க.,வினருக்கு வக்காலத்து வாங்கும் போலி மதச்சார்பின்மை அரசியல்வாதிகளின் முகத்தில், கரியைப் பூசி இருக்கலாம். ஈ.வெ.ரா., பற்றிய, நடிகர் ரஜினிகாந்தின்

சர்ச்சைக்குரிய பேச்சு, 'பகுத்தறிவு செம்மல்களை' கொதிப்படைய செய்திருக்கிறது.


ஒரு தனிநபர் பற்றி வெளியான பத்திரிகை செய்தியை குறிப்பிட்டதற்கே, பொங்கி எழும் ஜால்ராக்கள், ஹிந்து மத தெய்வங்களை, ஈ.வெ.ரா.,வும், வீரமணியும் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளனர்; அது, கோடிக்கணக்கான ஹிந்துக்களின் மனம், எந்தளவுக்கு வேதனைப்படுத்தி இருக்கும்.கடந்த, 1971ல், ஈ.வெ.ரா., பிறந்த நாளை முன்னிட்டு, சேலம், மதுரை மாவட்டங்களில் நடைபெற்ற ஊர்வலங்களில், ஹிந்து மத தெய்வங்களை காட்டுமிராண்டித்தனமாக அவமதித்து, மாநாட்டில் மிகவும் அபத்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

செய்தியை வெளியிட்டதால், 'துக்ளக்' வாரப் பத்திரிகையை வெளியிட விடாமல் தடுத்தது, நாடறிந்த உண்மை. நடிகர் ரஜினிகாந்த் போன்ற மக்கள் செல்வாக்கு உள்ளோர், கருத்து சொல்லும் போது, அது, முக்கியத்துவம் பெற்று விடுகிறது. உண்மையை உரக்கச் சொன்ன ரஜினி, தன் நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்காமல் இருப்பது, பாராட்டுக்குரியது.

ரஜினிகாந்த் துணிந்து குரல் கொடுத்திருப்பது, ஹிந்துக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. அவர் முழுநேர அரசியல்வாதியாக, களம் இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கும் நடுநிலையாளர்களுக்கு, ரஜினி ஏமாற்றத்தை அளிக்காமல், விரைந்து நல்ல ஒரு முடிவை எடுக்க வேண்டும். தி.க.,வை சேர்ந்த, வீரமணி போன்றோரின் உளுத்துப் போன பகுத்தறிவுக் கொள்கையும், ஹிந்து மத எதிர்ப்புக் கொள்கையும், இனி தமிழகத்தில் எடுபடாது. அவர்களுக்கு, 'ஜால்ரா' தட்டும் அரசியல் கட்சியினர், இனியாவது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்!
வனத்துறை அமைச்சர் கூறுவது சரியான தகவல் தான்! வி.சந்தானம், சமூக ஆர்வலர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஏரி, குளங்களை ஆக்கிரமித்து, பல வீடுகளை கட்டி, வாடகைக்கு விட்டு, நிறைய பணம் சம்பாதிக்கின்றனர், அரசியல்வாதிகள். இதில், அனேகம் பேர், திராவிட கட்சிக்காரர்களே. ஏரிகளை ஆக்கிரமித்து, பல கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் கம்பெனிகள் இயங்கி வருகின்றன. இதற்கு யார் மீது, குற்றம் சுமத்துவது, யார் தான் அகற்றுவது என்பது தான், சாமானியனின் கேள்வி.

இத்தருணத்தில், 'அரசியல்வாதிகள் தலையீட்டால், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, சிக்கலாக உள்ளது' என, வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கூறியுள்ளார்; இதை சமூக ஆர்வலர் என்ற முறையில், பார்த்து வியப்படைந்தேன். அமைச்சரின் நேர்மையான கருத்தை, சமூக ஆர்வலர்கள் அனைவரும் வரவேற்பர்; பாராட்டவும் செய்வர். நீர்நிலைகளின் அருமை தெரியாமல், 1967க்கு பின் வந்த திராவிட ஆட்சியாளர்கள், தங்கு தடையின்றி ஏரிகள், நீர் வரத்துக் கால்வாய்களை, 'பிளாட்' போட்டு விற்று வருகின்றனர். ரயில் வாயிலாக, சென்னையில் குடிநீர் சப்ளை செய்வதை என்ன சொல்வது?

ஏரிகளை ஆக்கிரமித்து குடியிருப்போருக்கு, ஓட்டு வங்கி லாபம் கருதி, அனைத்து அடிப்படை வசதிகளையும், உள்ளாட்சி நிர்வாகங்கள் செய்து தருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, மாற்று இடம் கொடுக்கச் சொல்லி, நீதிமன்றங்கள் பல ஆணை பிறப்பித்தும், ஆக்கிரமிப்புகள் தொடர் கதையாகி வருகிறது. இன்று, பல ஏரிகள் புனரமைக்கப்பட்டுள்ளது; இது, வரவேற்க வேண்டியது. ஆனால், இப்படி புனரமைக்கப்பட்ட பின், ஏரிகளில் கழிவு நீர் விடப்படுவதை உள்ளாட்சிகள் தடுக்க முன் வருவதில்லை. உதாரணமாக, பாதாள சாக்கடை வசதி இருந்தும், சென்னை அருகே, பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட, நெமிலிச்சேரி ஏரி, வீரராகவன் ஏரி, திருநீர்மலை ஏரிகளில் சாக்கடை நீர் கலந்து தான் வருகிறது.

புனரமைக்கப்பட்ட ஏரிகளின் பரப்பளவு, எல்லைகள் ஆக்கிரமிப்புகள், சர்வே எண், ஏரியின் பெயர் தகவல்கள் அடங்கிய தகவல் பலகை, ஒவ்வொரு ஏரியிலும் நிறுவ வேண்டும். ஏரியின் நீர்வரத்துக் கால்வாய்களை கண்டறிந்து, அதன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது, அவசர காரியம். 'தினமலர்' நாளிதழ், தொடர்ந்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது. நீர்நிலைகளை புனரமைக்கும் தன்னார்வலர்களையும், ஊக்குவித்து வந்துள்ளது; அதற்கு, தன்னார்வலர்கள் சார்பில் பாராட்டுக்கள்!

70 வயதிலும் முதல்வராக ஆசைப்படுகிறார்!அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ ----- மெயில்' கடிதம்: 'காட்டில் சூப்பர் ஸ்டார், ஆனால், நாட்டில்?' என்ற தலைப்பில் வாசகர் ஒருவர் இதே பகுதியில் கடிதம் எழுதி இருந்தார். அதில், 'தமிழகம் முழுவதும் மக்களை, ரஜினி சந்திக்க வேண்டும்' என, அவர் கூறியுள்ள கருத்து, ஏற்றுக்கொள்ளத்தக்கது.

தமிழகத்திலும், ஆந்திராவிலும், எம்.ஜி.ஆர்., - என்.டி.ராமராவை போல, ரஜினியும் வளர வேண்டும் என, நினைக்கிறார். அதற்கேற்ப, 20 ஆண்டு களுக்கு முன்பே, அரசியலுக்கு அவர் வந்திருக்க வேண்டும். காலதாமதமாக வந்தாலும் பரவாயில்லை; இன்னும் வந்தபாடில்லை.எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை, சினிமாவில் நடிக்கும் போதே, அரசியலில் நுழைந்தார். காங்கிரஸ், தி.மு.க.,வில் தன் அரசியல் வாழ்க்கையை துவக்கினார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மறைவிற்கு பின், தி.மு.க.,வில் எம்.ஜி.ஆருக்கு நெருக்கடி அதிகரித்தது.

தி.மு.க., முன்னாள் முதல்வர் கருணாநிதியால், தி.மு.க.,விலிருந்து வெளியேற்றப்பட்டார்; 1972ல், அ.தி.மு.க.,வை துவக்கினார். அதன்பின், படிப்படியாக முன்னேறி, 1977ல் ஆட்சியை பிடித்து, எம்.ஜி.ஆர்., முதல்வரானார். ஆந்திராவில், கட்சி துவக்கிய சில மாதங்களில், என்.டி.ராமராவ் ஆட்சியை பிடித்தார். அப்போது, அவருக்கு 50 வயது இருக்கும். ரசிகர்கள் ஆதரவும் பெருகி இருந்தது. அதை பயன்படுத்தி அவரால் வர முடிந்தது.

இப்போது, ரஜினிக்கு, 70 வயதாகிறது. சினிமாவில், இன்றும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இன்னும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அரசியலில் நுழைவதாக, 20 ஆண்டுகளாக கூறி வருகிறார். ஆனால், அதற்கான விடை கிடைக்கவில்லை. அவர் கதை, 'புலி வருது கதையாக போய் விடுமோ' என, அவரை நம்பியுள்ள ரசிகர்கள் எண்ணி இருக்கின்றனர். 70 வயதிலும், முதல்வராகி ரஜினி மாற்றத்தை தர ஆசைப்படுகிறார்; அதற்காக, அவருக்கு பாராட்டுக்கள்!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-பிப்-202014:25:34 IST Report Abuse
skv srinivasankrishnaveni தின்பது இந்திய மண்ணுளே விளையும் பொருளை குடிப்பது நம்மூர் குடிநீர் தான் சுவாசிப்பதும் நம்ம ஊர் காற்றுத்தானே ஆனால் ராகுல்கான் திலே ந்து எல்லா எதிர்க்கட்ச்சிகளும் திட்டுவது பிஜேபி அண்ட் மோடியைமட்டுமேதான் CAA புரிஞ்சுக்காமல் வேண்டும் என்றே கலாட்டா ஸு=யும் இந்தகுப்பைகளை விரட்டினால் எங்கே போபானுக இந்த மண்ணைவிட்டு ராஹுல்ப்போவான் இத்தாலிக்கு ஆர் வெளிந்துக்கே ஆனால் சுடாலின் எல்லாம் போக்கிடம் எங்கே இருக்கு திருக்குவளை சொந்த ஊரு ஆனால் அங்கேபோனால் ஒருநாள் தாங்கமுடியுமா ??/ மக்கள் ஆட்ச்சியேதான் நடக்குது நீங்க ஆளும் பொது என்ன போன் மலையாகொட்டியது இல்லே இப்போது பிஜேபி ஆளும் பொது ஒன்னும் கிடைக்காமல் மக்கள் கல்லு மண்ணு சாக்கலே கிடக்குறாங்களா ?நன்னாவேதான் இருக்கோம் இந்த சினிமாக்காரனுக அண்ட் அரசியல்வியாதிகளேதான் நாடு நாசமாப்போறதுக்கே காரணம் முடிஞ்சால் ஆளும் காட்ச்சிக்கு ஹெல்ப் பண்ணுங்க இல்லியா வாய் மூடி மோவுனமா கிடங்களேன்
Rate this:
Share this comment
Cancel
Raja Chockalingam - Madurai,இந்தியா
09-பிப்-202013:44:03 IST Report Abuse
Raja Chockalingam BSNL மட்டுமல்ல அனைத்து நிறுவனங்களும் இது போன்று ஒரு தொகையை நம் அனுமதியின்றி கழித்துவிடுகிறார்கள். அவர்களது வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டு அந்த தொகையை திரும்ப பெறவேண்டும் . எனக்கு BSNL, VODAFONE, AIRTEL ஆகியோரிடம் இது போன்ற சிரமங்கள் ஏற்பட்டது . ஆனால் அவர்களது வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டபின் அந்த தொகை திரும்ப தரப்பட்டது. வாசகர் சொல்வது போல் எனது feature மொபைலில் வீடியோ பார்க்க முடியாது . ஆனால் வீடியோ பார்ப்பதற்கென்று தொகையை பிடித்தம் செய்தனர். கேட்டால் நீங்கள் அந்த பட்டனை அமுக்கினீர்கள், இந்த பட்டனை அமுக்குநீர்கள் என்று பொய் உரைத்தார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Chockalingam - Managiri - Karaikkudi,இந்தியா
09-பிப்-202007:26:40 IST Report Abuse
Chockalingam "ஏமாந்தேன்" என இருக்க வேண்டுமென நினைக்கிறன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X