கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை மீட்க என்ன நடவடிக்கை?: தனிப்பிரிவு அமைக்க ஐகோர்ட் யோசனை

Added : பிப் 08, 2020
Share
Advertisement

சென்னை: 'தமிழகம் முழுவதும், ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்களை அடையாளம் காணவும், அவற்றை மீட்டு பாதுகாக்கவும், ஏன் தனிப்பிரிவு அமைக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவில், மச்சிநாயக்கன்பாளையம் கிராமத்தில், நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது.இதில் கட்டுமானம் எழுப்ப, ராமராஜ் என்பவர் முயன்றபோது, சப் -- கலெக்டர் தடை விதித்தார். இதையடுத்து, தனக்கு சொந்தமான நிலத்தில் அதிகாரிகள் குறுக்கிடக் கூடாது என கேட்டு, கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.இந்த வழக்கில், தன்னையும் இணைத்துக் கொள்ள அனுமதிக்க கோரி, சுப்பையா என்பவர் தாக்கல் செய்த மனுவை, கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்பையா தாக்கல் செய்த மனு:அரசு தரப்புக்கு பலமுறை சந்தர்ப்பம் அளித்தும், கோவை நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் கே.தாமோதரன் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. தற்போது, இந்த வழக்கில், பிப்., ௧௦ல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

அரசு வழக்கறிஞருக்கு எதிராக, பார் கவுன்சிலில் புகார் அளித்துள்ளேன்.புகாரை விரைந்து விசாரித்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, பார் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும். கோவை நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சொத்து உரிமை குறித்த பிரச்னையை, நாங்கள் ஆராயவில்லை. அரசு வழக்கறிஞரின் நடவடிக்கை, சந்தேகத்துக்குரியதாக உள்ளது. இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், அரசு வழக்கறிஞருக்கும், தனிநபருக்கும் தொடர்பு உள்ளது என்பதை நம்புவதற்கு, காரணங்கள் உள்ளன.எனவே, மறு உத்தரவு வரும் வரை, கோவை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது.

மனுவுக்கு, அரசு தரப்பிலும், சம்பந்தப்பட்டவர்கள் தரப்பிலும் பதில் அளிக்க வேண்டும். அரசியல் செல்வாக்கு, பண பலத்தை பயன்படுத்தி, அரசு அதிகாரிகளின் துணையுடன், அரசு நிலங்களை அபகரிக்கும் செயல்கள் நடக்கின்றன.அரசு நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையென்றால், நில அபகரிப்பாளர்கள் விழுங்கி விடுவர். இவ்வழக்கில், நகராட்சி நிர்வாக துறை செயலர், வருவாய் துறை செயலர், வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலர் சேர்க்கப்படுகின்றனர்.

அவர்கள் சார்பில், சிறப்பு பிளீடர் டி.எம்.பாப்பையா, 'நோட்டீஸ்' பெற்று, கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்:● எத்தனை ஏக்கர் அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் உள்ளன; அவற்றில் எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளன; மாவட்ட வாரியாக விபரம் வேண்டும்● அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்களை மீட்க, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன; ஆக்கிரமிப்புகள் தொடர்பாக, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை என்ன; அரசு வழக்கறிஞர்கள் முறையாக நடத்தாமல், எத்தனை வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன ● வழக்குகளை முறையாக நடத்தாமல், அரசு, புறம்போக்கு நிலங்களை பாதுகாக்க தவறிய, அரசு வழக்கறிஞர்கள், அதிகாரிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன● ஆக்கிரமிப்பு நிலங்களை அடையாளம் காணவும், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கவும், பாதுகாக்கவும், ஏன் தனிப்பிரிவை அரசு ஏற்படுத்தக் கூடாது; அரசு மற்றும் புறம்போக்கு நிலங்களின் விபரங்களை, இணையதளத்தில் ஏன் பதிவேற்றம் செய்யக் கூடாது?● அரசு நிலங்கள் பதிவு செய்யப்படுவதை தடுக்க, சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு, அரசின் சொத்து விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளதா; இல்லையென்றால், பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு, ஏன் வழங்கக் கூடாது?இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.விசாரணையை, மூன்று வாரங்களுக்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X