திரைத்துறையை காப்பாற்ற தனி அமைப்பு வேண்டும்: ஆர்.கே.செல்வமணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'திரைத்துறையை காப்பாற்ற தனி அமைப்பு வேண்டும்': ஆர்.கே.செல்வமணி

Added : பிப் 08, 2020 | கருத்துகள் (1)
Share
சென்னை: ''தமிழ் சினிமாவில், பெரிய பிரச்னை வரப் போகிறது. அதை, அரசு தடுப்பதோடு, திரைத்துறை பிரச்னையை தீர்க்க முன்வர வேண்டும்,'' என, 'பெப்சி' எனும் தமிழ் திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறினார்.அவர் அளித்த பேட்டி:திரைப்படத் துறையில் சிறிய பிரச்னைகள் எல்லாம் சேர்ந்து, பெரிய பிரச்னை ஆக போகிறது. தர்பார் பட விவகாரத்தில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
 'திரைத்துறையை காப்பாற்ற தனி அமைப்பு வேண்டும்': ஆர்.கே.செல்வமணி

சென்னை: ''தமிழ் சினிமாவில், பெரிய பிரச்னை வரப் போகிறது. அதை, அரசு தடுப்பதோடு, திரைத்துறை பிரச்னையை தீர்க்க முன்வர வேண்டும்,'' என, 'பெப்சி' எனும் தமிழ் திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறினார்.

அவர் அளித்த பேட்டி:திரைப்படத் துறையில் சிறிய பிரச்னைகள் எல்லாம் சேர்ந்து, பெரிய பிரச்னை ஆக போகிறது. தர்பார் பட விவகாரத்தில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு சிலர் சென்று, அத்து மீறி நடந்ததாக, அவர் புகார் அளித்துள்ளார்; அவரை மிரட்டியுள்ளனர். இது, தனிப்பட்ட தாக்குதல் போல் உள்ளது.தயாரிப்பாளரிடம் படம் வாங்கும்போது, அதில் ஏற்படும் லாப, நஷ்டம், தயாரிப்பாளரை சேரும் அல்லது வினியோகஸ்தரை சேரும். அந்த பொருளை உருவாக்கியவருக்கு, எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை. அவரிடம் இழப்பு கேட்பது, தொழில் தர்மத்திற்கு எதிரானது.அவரது இயக்கத்தில் வெளியான, கஜினி படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அப்போது, அதில் கிடைத்த லாபத்தை, யாராவது திருப்பி கொடுத்ததுண்டா? இனிமேல், தயாரிப்பாளரை விடுத்து, மற்றவர்களிடம் அத்துமீறி நடப்பதை கண்டிக்கிறோம். இந்தப் படம், இவ்வளவு தான் வசூலிக்கும் என தெரிந்தே, அதிக விலைக்கு படத்தை வாங்குகின்றனர். அதன்பின், தகராறு செய்வது தவறு; இது, சினிமாவுக்கு நல்லதல்ல.

இதனால், பல படங்கள் தோல்வியடைகின்றன. 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் தான், இன்று பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கின்றன. இன்று, வரவுக்கு மீறிய செலவில், படம் எடுக்கின்றனர். இதற்கு அரசு, ஒரு வரைமுறை கொண்டு வர வேண்டும். இனி வரும் காலங்களில், எங்களது தொழிலாளர்களிடம் அத்துமீறி நடக்காதீர். வதந்திகள் வாயிலாக, இந்த துறையை பெரிதாக காட்ட, சிலர் முயல்கின்றனர். வரும் வருமானத்தை கூறினால் நல்லது. முதல் நாளே இமாலய வெற்றி எனக் கூறி, யாரையும் ஏமாற்றாதீர். சினிமாத் துறை கட்டுப்பாடில்லாத நிலையில் உள்ளது. 3,000 கோடி ரூபாய் புழங்கும் சினிமாவில், அரசு, சில வரைமுறை கொண்டு வர வேண்டும். திரைப்பட வளர்ச்சி வாரியம் என்ற பெயரில், தமிழ் திரைத்துறைக்கு என தனியாக, ஓர் அமைப்பு வேண்டும்.யார் தவறு செய்தாலும், அரசு தட்டிக் கேட்க வேண்டும்.நிர்ணயிக்கப்பட்ட விலையை தாண்டி, எந்த பொருளை விற்றாலும் தட்டி கேட்கும் அரசு, சினிமா விஷயத்திலும், ஒரு திட்டம் வகுக்க வேண்டும்.நடிகர்கள், அதிக சம்பளம் கேட்கத் தான் செய்வர். படத்தை தயாரிப்பவர்கள், படத்தின் திறன் அறிந்து, சம்பளம் தர வேண்டும். ஐந்து லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறும் சினிமாவை காக்க, அரசு முன்வர வேண்டும்.படப்பிடிப்பு தளத்தில் தேவையற்ற போராட்டங்கள் நடத்துவதால், தொழிலாளர்கள் வாழ்க்கை பாதிக்கிறது. இதை சம்பந்தப்பட்ட அரசுகள், கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

ரஜினிக்கு எதிராக டி.ஆர்., போர்க்கொடி''ரஜினி நடித்த படத்தை வாங்கிய வர்களையே, காப்பாற்ற முடியாதவர்கள், நாளை, தமிழகத்தை எப்படி காப்பாற்றுவர்,'' என, வினியோகஸ்தர் சங்க தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.தர்பார் பட விவகாரம் தொடர்பாக, டி.ராஜேந்தர், நேற்று அளித்த பேட்டி:நானும் ஒரு வினியோகஸ்தர் என்ற அடிப்படையில், அவர்களின் வலி எனக்கும் தெரியும். வினியோகஸ்தர்கள், நடிகர்கள் இல்லை.நஷ்டம் அடைந்ததால், இயக்குனர் முருகதாஸ் வீட்டு வாசலில் நின்று, கோரிக்கை மனு தர சென்றனர்;
அது தவறா?அதற்கு, அவர்கள் மீது, போலீசில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். தயாரிப்பாளர் தரப்பில், வினியோகஸ்தர்களுக்கு உரிய பதில் தரப்படவில்லை. தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் நஷ்டம் அடைவது, வருத்தமாக உள்ளது. இதற்கு, விலைவாசி உயர்வும், ஒரு காரணமாக இருந்தாலும், அதை அனைவரும் சேர்ந்து சரிசெய்ய வேண்டும். வினியோகஸ்தர்கள் இல்லாமல், எவ்வளவோ பேர், படத்தை வெளியிட முடியாமல் உள்ளனர்.

தர்பார் படத்தை வாங்கியதற்காக, இவர்கள் தரும் பரிசா? ரஜினி நடித்த படத்தை வாங்கியவர்களையே, காப்பாற்ற முடியாதவர்கள், நாளை, தமிழகத்தை எப்படி காப்பாற்றுவர்? வினியோகஸ்தர்கள் புகாரில், எந்த சங்கமும், இதுவரை சரியான நடவடிக்கை எடுத்ததில்லை. நடிகர் விஜய் படப்பிடிப்பில், வருமான வரித் துறை சோதனை நடத்தியது பற்றி, நான் எதுவும் கூற முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X